எழுத்தும் இசையும்

எழுத்தும் இசையும்
Updated on
1 min read

நவீன தமிழ் இலக்கியத்தில் இசை சார்ந்த வர்ணனைகள் பல இடங்களில் காணக் கிடைக்கின்றன. உருவமற்ற இசை தரும் அனுபவத்தைத் தம் எழுத்தில் வடிக்கும் முயற்சியில் தி. ஜானகிராமனின் படைப்புகளுக்குத் தனி இடம் உண்டு. எழுத்தும் இசையும் இசைவுகூடி நிற்கும் அற்புதமான தருணங்களை ஜானகிராமனின் எழுத்துகளில் காணலாம். குறிப்பாக, அவரது மோகமுள் நாவல். அதிலிருந்து சில வரிகள்:

ம்புராவின் நாதம் அலையலையாய் எழுந்து அங்கிருந்தவர்களின் செவியையும் இதயத்தையும் நிறைத்தது. அப்பழுக்கிலாத நாதம் கூடம் முழுதுமாகக் கமழ்ந்தது. சுருதி பரிபூர்ணமாகச் சேர்ந்திருந்தது. தீயும் சூடும் போலவும், இரவும் இருளும் போலவும், நிலவும் தனிமையும் போலவும், வைகறையும் தூய்மையும் போலவும் சேர்ந்திருந்தது. மகாகவியின் சொற்களில் எழுவது போலச் சொல்லாத காந்தாரமும் சேர்ந்து தொனித்தது. புலன்களைக் கூட்டி ஒருமுகப்படுத்திற்று. அந்த நாதம் புறத்தின் ரசனையை அகற்றி, உள்ளத்தை மீள முடியாமல் கவ்விச் சென்றது.


பாலுவுக்கு உள்ளம் நெகிழ்ந்து சிந்து பைரவி ராகத்தில் ‘மாபகாரி சநிதபமா’ என்று வீணை கீழே இறங்குவது கேட்டது. ‘என்னடா இப்படிச் செய்துவிட்டாயே’ என்று பொறுமையாகவும் இடித்துக் கேட்பது போலவும் எழுந்த அந்த ஸ்வர வரிசை நெஞ்சில் பாய்ந்து வயிற்றைக் கலக்கியது.


ள்ளமும் உயிரும் ஒன்றிவிட்டன. சுருதி சுத்தமாய் இருந்தது அந்த வீணை இசை. நிஷாதத்தை அசைத்து அசைத்து, மத்தியமத்தைத் தொட்டுத் தொட்டு ஓலமிட்ட அந்த வரிசை, உள்ளத்தை உலுக்கி, உடலைச் சிலிர்க்க அடித்தது. மாநிதுபமா, நீதபதமா, பதமா என்று கெஞ்சி இறைஞ்சிய அந்த வரிசை அவனைக் குற்றம் சாட்டிற்று. அவன் செய்தது தவறில்லையா என்று தீனமாக மன்றாடிக் கேட்டது.

நன்றி: கர்நாடக சங்கீதத்தை ரசியுங்கள், வாதூலன்,
அல்லயன்ஸ் வெளியீடு, 244, ராமகிருஷ்ண மடம் சாலை, சென்னை 4, தொலைபேசி: 24641314.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in