Published : 07 May 2017 10:15 AM
Last Updated : 07 May 2017 10:15 AM
சில நூற்றாண்டுப் பகை வரலாறு கொண்ட வட அமெரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் அரசியலில் கீரியும் பாம்பும். ஆனால், இரண்டு பிரதேசங்களும், ஏன் மொத்த உலகமுமே சேர்ந்து கொண்டாடும் ஒரு நாவல் தனிமையின் நூறு ஆண்டுகள் (1967). தொழிலாளிகளும் பாலியல் தொழிலாளரும் பொது வாசகர்களும் கடைக்காரர்களும் பேராசிரியர்களும் எழுத்தாளர்களும் நாடுகளின் அதிபர்களும் வாசித்துப் பரவசமடைந்த படைப்பு. 37 மொழிகளில் மொழிபெயர்ப்பாகி 3 கோடி பிரதிகளுக்கும் கூடுதலாக விற்பனையான இந்த ஸ்பானிய நாவலை எழுதிய காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (1927-2014) கொலம்பியா நாட்டவர். இந்த நாவலை முன்னிறுத்தியே 1982-ல் நோபல் பரிசு வழங்கப்பெற்றவர். செர்வான்ட்டிஸின் டான் குவிக்ஸாட்டுக்கு (1605, 1615) அடுத்த மாபெரும் ஸ்பானிய செவ்வியல் படைப்பாக இந்நூல் கருதப்படுகிறது.
பிறந்து முதல் ஒன்பது ஆண்டுகள் மார்க்கேஸ் தன் அம்மாவின் பெற்றோரிடம் வளர்ந்தவர். முற்போக்கு எண்ணம் கொண்ட கர்னலான தாத்தாவிடம் கொலம்பியாவின் வரலாறையும் மரித்தவர்களிடம் இயல்பாக உரையாடும் பாட்டியிடம் விசித்திரக் கதைகளையும் விநோதங்கள் மிக இயல்பானவை என்று நம்பவைக்கும் கதைசொல்லும் முறையையும் கற்றார். பிறகு, பெற்றோரின் திருமணத்துக்கு முந்தைய காதல் சாகசங்களும் அவருக்குத் தெரியவந்தன. இந்தப் பருவத்தின் மனப் பதிவுகள் பெருகி உச்சம் பெற்றதன் வெளிப்பாடே இந்த நாவல். பள்ளிப் பருவத்தில் ஓரிரு கவிதைகள் எழுதிய மார்க்கேஸ், அப்பாவின் விருப்பப்படி சட்டப் படிப்பில் சேர்ந்து அதைப் பாதியில் கைவிட்டார். பத்திரிகையாளராகி ஐரோப்பிய, அமெரிக்க நகரங்களில் சில காலம் வசித்தார். மார்க்கேஸ் மீது தாக்கம் ஏற்படுத்திய எழுத்தாளர்கள் பிரதானமாக ஜெர்மன் எழுத்தாளர் ஃப்ரான்ஸ் காஃப்காவும் ஆங்கிலேய எழுத்தாளர் வில்லியம் ஃபாக்னரும்.
மூன்று தலைமுறைகளின் கதை
இவருடைய முதல் குறுநாவலான லீஃப் ஸ்டார்ம், பதிப்பாளரைத் தேடி ஏழு ஆண்டுகள் காத்திருந்து 1955-ல் வெளியானது. ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலின் களமான மகோந்தா என்ற கற்பனை ஊர் இந்த நாவலில்தான் முதலில் இடம்பெற்றது. கூடவே, மூன்று தலைமுறைகளின் கதை என்ற வகையில் அதற்கு ஒருவகையில் முன்மாதிரி. 1958-ல் மெர்சிடெஸ் பார்ச்சாவை மணந்தார். இரண்டு மகன்கள். மெக்ஸிகோவின் தலைநகரில் முப்பதாண்டுகள் வாழ்ந்தார். நோ ஒன் ரைட்ஸ் டு த கர்னல் (1961), இன் ஈவில் அவர் (1962) போன்ற நாவல்களும் வெளியாயின. இடதுசாரி செயல்பாடுகளுக்காகத் தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொண்டவர்.
பதினெட்டு வயதிலிருந்தே மனதில் உருவாகி வந்த கதைக்கு உரிய தொனிக்காகக் காத்திருந்தார். பதினெட்டு மாதங்கள் அன்றாடம் தட்டச்சு செய்திருக்கிறார். பின்னணியில் இசை ஒலிக்க, பல ஆயிரம் சிகரெட்டுகள் புகைத்து, வெளி உலகம் 1960-களில் இருக்க, இவர் சில நூற்றாண்டுகள் பின்னால் இருந்தார். சில மாதங்கள் வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை. வீட்டுச் சாதனங்களை அடகு வைத்திருக்கிறார்கள். மளிகைக் கடையிலும் இறைச்சி விற்பவரிடமும் கடன். நெருக்கடிகளை மெர்சிடெஸ் திறமையாகச் சமாளித்தார். ஒரு கட்டத்தில் மெர்சிடெஸ் கேட்டாராம்: ‘இத்தனைக்குப் பிறகு இந்த நாவல் மோசம் என்று ஆகிவிட்டால்?’ 1967 மே மாதம் ப்யூனஸ் அய்ரெஸில் நாவல் வெளியானது. சில நாள்களில் கிடைத்த புகழுக்கு அளவில்லை.
உச்சக்கட்டம் இனிதான். அர்ஜெண்டைனா நாட்டின் கோர்த்தஸார் எழுதிய ஹாப்ஸ்காச் (1963) நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1966-ல் வெளியானது. மொழி பெயர்த்தவர் நியூயார்க்கிலிருக்கும் குவீன்ஸ் கல்லூரியில் பிரெஞ்ச், இத்தாலியன், ஸ்பானிய மொழிகளுக்கான பேராசிரியராக இருந்த கிரிகரி ரபஸ்ஸா (1922-2016). பூர்வீகம் கியூபா. கோர்த்தஸார், ரபஸ்ஸாவை மார்க்கேஸுக்குப் பரிந்துரைத்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் மார்க்கேஸ், ரபஸ்ஸாவுக்காகக் காத்திருந்தார்.
மொழிபெயர்க்கும் எண்ணமில்லாமலேயே நாவலைப் படித்த ரபஸ்ஸா தன்வசம் இழந்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, ஒப்புக்கொண்டார். 1970-ல் வெளியான ஆங்கில மொழிபெயர்ப்புக்குப் பிறகே மார்க்கேஸ் சர்வதேசப் புகழ்பெற்றார். பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட ஆங்கில வடிவம் ஏதுவாக இருந்தது. தன்னுடைய ஸ்பானிய மூலத்தை விடவும் ரபஸ்ஸாவின் மொழிபெயர்ப்புப் பிரதி மேலானது என்று மார்க்கேஸ் பாராட்டினார்.
பாப்லோ நெரூதாவுடனான சந்திப்பு
புகழிலிருந்து தப்பிக்க பார்சிலோனாவில் சில காலம் தங்கியிருந்த மார்க்கேஸைச் சந்தித்த பாப்லோ நெரூதா அவரைக் குறித்து ஒரு கவிதை எழுதினார். ஃபிடல் காஸ்ட்ரோ ஹவானாவில் மார்க்கேஸுக்கு மாளிகை ஒன்றைப் பரிசளித்தார். இருவரும் நாற்பதாண்டு நண்பர்கள். மார்க்கேஸுக்கு இருந்த அமெரிக்க விசா தடையை நீக்கியவர் பில் க்ளின்டன். யேல் சட்டக் கல்லூரி வகுப்பில் மார்க்கேஸின் நாவலைப் படித்துத் தன் பேராசிரியரிடம் மாட்டிக்கொண்டவர் அவர். க்ளின்டனின் பதவிக் காலத்தில் வெள்ளை மாளிகைக்கு விருந்தாளியாக மார்க்கேஸ் பல முறை போயிருக்கிறார். இளமை முதல் தனக்குப் பிடித்த நாவலாசிரியர் என்று மார்க்கேஸை பராக் ஒபாமா புகழ்ந்தார். கொலம்பியாவின் அதிபரும் மெக்ஸிகோவின் அதிபரும் அவருடைய நினைவேந்தலில் கலந்துகொண்டார்கள்.
ஒரே நாவல் எப்படி இத்தனை புகழை வாரிக்கொண்டு வந்தது? கியூபப் புரட்சியின் வெற்றி (1959), ஆங்கில மொழிபெயர்ப்புகள், சிலேவிலும் அர்ஜெண்டினாவிலும் உண்டான அரசியல் கொந்தளிப்புகள், எழுத்தாளர்களின் பாரிஸ் வாசம், சர்ரியலிசம் போன்றவற்றின் விளைவாக 1960-1980 காலப் பகுதியில் லத்தீன் அமெரிக்காவில் இலக்கியம் செழித்து வளர்ந்தது. இப்போக்கின் பிரதிநிதிகள் கோர்த்தஸார், ஃபியூந்தஸ், லியோசா (2010-ல் நோபல் பரிசு பெற்றவர்), மார்க்கேஸ் ஆகியோர். இவர்களின் முன்னோடியான போர்ஹெஸின் கதைகளில் தென்பட்ட மாய யதார்த்த உரைநடை எழுத்துப் பாணிக்கு மார்க்கேஸின் நாவல் இணைச் சொல்லானது.
அரசியலும் வரலாறும் தொன்மமும் காலம் கலைந்த கதையாடலில் புனைவாகியுள்ளன. பழங்காவியங்கள், தேவதைக் கதைகள், தொன்மங்கள் போன்றவற்றில் இருப்பதும் மாய யதார்த்தம்தான். நவீனகால மாய யதார்த்தத்தின் மூலமாதிரிகள் டான் குவிக்ஸாட்டில் உள்ளன. சாதாரணத்திலுள்ள அசாதாரணத்தைக் காணும் கண்.
கியூப நாவலாசிரியர் கார்பெந்தியர், ‘லத்தீன் அமெரிக்கா அற்புதங்களால் நிரம்பிய நிலம். அதைப் பற்றிய எழுத்து தானாகவே அற்புத யதார்த்தம் கொண்ட இலக்கியத்தை உருவாக்கிவிடும்’என்றார். ‘யானைகள் பறந்தன’ என்றால் நம்பாத வாசகன் ‘நூற்று முப்பது யானைகள் பறந்தன’ என்றால் நம்புவான் என்கிறார் மார்க்கேஸ். சல்மான் ருஷ்தியும் டோனி மாரிசனும் இப்பாணியை மார்க்கேஸிடமிருந்து சுவீகரித்தவர்கள்.
ஏழு தலைமுறைகளின் கதையைச் சொல்லும் நாவல் இன்னொரு அடுக்கில் கொலம்பியாவின் வரலாறையும் மனித இனத்தின் வரலாறையும் சொல்கிறது. மகோந்தா என்ற கற்பனை ஊரில் குடிமுதல்வர் ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவும் குடித்தலைவி உர்சுலா இகுவரானும் பிறப்பித்த ஆறு தலைமுறையினரின் பிறப்பும் மரணமும் காதலும் காமமும் முறை பிறழ்ந்த கலவியும் பல கதாபாத்திரங்களின் தனிமையும் தூக்கமின்மையும் மறதியும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் வருகையும் செல்வமும் இயற்கை உற்பாதங்களும் இறுதி வீழ்ச்சியும், நிஜமும் மாயக்கனவும் ஊறிய நடையில் விரிகின்றன.
கலாசார, புவியியல் ஒப்புமைகளால் தூண்டப்பட்ட கணிசமான மொழிபெயர்ப்புகளால் மார்க்கேஸ் இப்போது ஒரு தமிழ் எழுத்தாளர். கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் இந்த நாவலைத் தமிழில் வெளியிட்டுள்ளது.
ஆர். சிவகுமார், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: sivaranjan51@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT