

‘மனிதர்கள் வரலாற்றை உருவாக்குவதில்லை; வரலாறுதான் தனது தருணத்திற்கான மனிதர்களை உருவாக்குகிறது’ என்றும், ‘என்னைத் தண்டியுங்கள்; அது எனக்குப் பொருட்டல்ல; வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்றும் ஓங்கி முழங்கிய கியூபாவின் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ, கடந்து வந்த வாழ்க்கைச் சுவடுகள் புகைப்படங்களாய் இந்த நூலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஃபிடல் பிறந்த 1926-ஆம் ஆண்டிலிருந்து தொடங்கும் இந்த புகைப்படத் தொகுப்பில் பல அரிய படங்களும் காணக் கிடைக்கின்றன. மூன்று வயது குழந்தையாக, ஆரம்பப் பள்ளிச் சிறுவனாக, பல்கலைக்கழகக் கூடைப்பந்து வீரராக, கியூபாவின் விடுதலைக்காகப் போராடிய போராளியாக, போர்முனையிலும் ஆழ்ந்து புத்தகம் வாசிக்கும் புத்தகக் காதலராக, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் உரையாடும் மக்கள் தலைவராக என ஃபிடலின் பல்வேறு புகைப்படங்களின் அணிவகுப்பும், சிறுசிறு வாக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள அவரைப் பற்றிய செய்திக் குறிப்புகளும் ஃபிடலின் பன்முக ஆளுமையை உணர்த்துகின்றன. வழக்கமான நூல்களுக்கிடையில் சற்றே மாறுபட்ட முயற்சி இந்த நூல்!
- மு. முருகேஷ்