

சென்னை புத்தக் காட்சிக்கு 2002-லிருந்து வருவதை வழக்கமாகக் கொண்டி ருக்கிறார் சிங்கப்பூரில் வாழும் மென்பொருள் பொறியாளர் தயாளன். ‘முத்துவிசிறி’ (Muthufan) என்பதுதான் அவருடைய சமூக வலைதள அடையாளம். தமிழ் காமிக்ஸ் உலகை மீண்டும் உயிர்ப்பித்தவர்களில் முக்கியமானவர். உலகின் மிக முக்கியமான காமிக்ஸ் படைப்பாளிகள் கையொப்பமிட்ட முதல் பிரதி முதற்கொண்டு, பதிப்பகங்களின் கடைசி பிரதிவரை 10,000-க்கும் மேற்பட்ட காமிக்ஸ் புத்தகங்களைச் சேகரித் திருக்கும் காமிக்ஸ் ஆர்வலர். அவருடன் ஒரு மின்னல் வேகப் பேட்டி:
புத்தகக் காட்சிக்கு மீண்டும் மீண்டும் உங்களை அழைத்துவருவது எது?
சென்னை புத்தகக் காட்சியில் எனக்குக் கிடைக்கும் உற்சாகமும் எனர்ஜியும் வேறு எங்குமே கிடைப்பதில்லை. 2012-லிருந்து காமிக்ஸ் புத்தகங்களுக்கான பிரத்யேக ஸ்டால், சக காமிக்ஸ் ரசிகர்களுடனான உரையாடல்கள், காமிக்ஸ் வெளியீட்டு விழாக்கள், தமிழ் காமிக்ஸ் துறையை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான முயற்சி கள் என்று பல காரணங்கள் கண்காட்சியை நோக்கி என்னை ஈர்க்கின்றன.
தமிழ் காமிக்ஸ் உலகம் மோசமான சரிவிலிருந்து எப்படி மீண்டது?
தமிழில் இன்றளவும் காமிக்ஸ் புத்தகங் களை வெளியிடும் ‘லயன்’, ‘முத்து காமிக்ஸ்’ வெளியீட்டாளர்களான சிவகாசி பிரகாஷ் பப்ளிஷர்ஸை சென்னை புத்தகக் காட்சியில் பங்கேற்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்திவந்தோம். 2012-ம் ஆண்டு முதல் அது சாத்தியமானது. காமிக்ஸ் மீட்சி பெற இதுவும் முக்கியமான காரணம்.
தமிழ் காமிக்ஸ் அரங்கம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறுகிறது?
முதல் ஆண்டில் ஒரு அரங்கத்தின் பாதி அளவுக்கு மட்டுமே காமிக்ஸ் விற்பனைக்குக் கிடைத்தது. ஆனால், அங்கே தொடர்ச்சியாக அதிகக் கூட்டம் இருப்பதைப் பார்த்து, பக்கத்து அரங்குப் பதிப்பாளர்கள் புகார் செய்வதுகூட நடந்திருக்கிறது. அதுவே, இன்றைக்கு 30 - 40 அரங்குகளில் காமிக்ஸ், சிறார் படக்கதைப் புத்தகங்கள் விற்பனை ஆவது மகிழ்ச்சியே!
கடந்த 20 ஆண்டுகளில் காமிக்ஸ் புத்தகங்களில் எந்த விதமான மாற்றங் களை உணர்கிறீர்கள்?
முன்பெல்லாம் காமிக்ஸ்களில் சில வகைக் கதைகளையே பார்க்க முடியும். ஆனால், நம் கற்பனையில் உதிக்கும் எதையும் காமிக் ஸாக உருவாக்கலாம் என்ற சுதந்திரம் உருவாகியிருக்கிறது. காத்திரமான விஷயங் களை முன்வைக்கும் கிராஃபிக் நாவல், திரைப்படமாவதற்கான ஸ்டோரி போர்டு எனப் பல்வேறு வகைகளில் காமிக்ஸ் முன்னேறிவருகிறது.
காமிக்ஸ் படிப்பது வெறும் பொழுதுபோக்கா?
அப்படி இல்லை. தமிழுக்கு காமிக்ஸ் எப்படி வளம் சேர்க்கும், ஏன் காமிக்ஸ் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் பேசிவருகிறேன். நூலகங்களும் சிறார், இளைஞர்களுக்கும் காமிக்ஸ் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். வன்முறை, பாலியல் தவிர்த்து, அனைத்து வகையான காமிக்ஸ் களையும் நான் பரிந்துரைக்கிறேன். குறிப்பாக, தமிழில் பேசுவதிலும் எழுதுவதிலும் அதிகம் பழக்கமற்ற அடுத்த தலைமுறைக்குத் தமிழை எளிதாக எடுத்துச் செல்வதற்கு, காமிக்ஸ் உதவும் என்பதில் நான் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளேன்.