தொடுகறி: கவிதைத் திருவிழாவில் தமிழ்க் கவிஞர்கள்...

தொடுகறி: கவிதைத் திருவிழாவில் தமிழ்க் கவிஞர்கள்...
Updated on
2 min read

பலே பழநிமாணிக்கம்!

இயக்கத்துக்கும் வாசிப்புக்கும் இடையே உள்ள உறவு பிரிக்க முடியாதது. சமீப காலத்தில்தான் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் புத்தகங்களை வாசிப்பது குறைந்துபோனது. எனினும், நம்பிக்கையூட்டும் விதத்திலான அறிகுறிகளும் சமீபத்தில் தென்படுகின்றன. மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் அவருக்குப் பரிசாகப் புத்தகங்கள் குவிந்தது ஆரோக்கியமான விஷயம். சமீபத்தில் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க.வின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழநிமாணிக்கம் போராட்டப் பந்தலில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். தீவிர வாசகரான அவர் வாசித்துக்கொண்டிருந்தது அப்துல்லா ஓசலானின் 'சிறகு விரிக்கும் வாழ்வு -பெண்ணின் புரட்சி' (தமிழில்: பூங்குழலி, பிரக்ஞை பதிப்பகம்).

ஆங்கிலத்தில் கிருஷ்ணதேவராயன்

தமிழில் பலவகைப் பாணிகளில் கதை எழுதியவர் ரா.கி.ரங்கராஜன். அவற்றில் பெரும்பாலானவை பொழுதுபோக்கு அம்சங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பவை. ஆனாலும் அவர் எழுதிய 'நான், கிருஷ்ணதேவராயன்' என்ற நாவல் உள்ளடக்கத்திலும் நடையிலும் அவரது இலக்கிய உச்சமாகக் கருதப்படுகிறது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் பல நாவல்களை மொழிபெயர்த்த ரா.கி.ரங்கராஜனுக்கு அவர் எழுதிய 'நான், கிருஷ்ணதேவராயன்' நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்ப்பட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவரது மறைவுக்குப் பிறகு அந்த ஆசையை நிறைவேற்ற அவரது மனைவி கமலா பெரும்பாடுபட்டார். கடைசியில் ஒரு மொழிபெயர்ப்பாளரையும் கண்டுபிடித்துவிட்டார். சுகந்தி கிருஷ்ணாமாச்சாரியின் மொழிபெயர்ப்பில் 'நான், கிருஷ்ணதேவராயன்' ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. துரதிர்ஷ்டம், புத்தகத்தைப் பார்ப்பதற்கு முன்பு கமலாவும் காலமாகிவிட்டார்.

கவிதைத் திருவிழாவில் தமிழ்க் கவிஞர்கள்…

ஹைதர் ரசா எனும் புகழ்பெற்ற ஓவியரால் தொடங்கப்பட்டது ‘ரசா அறக்கட்டளை’. அந்த அமைப்பு ஏப்ரல் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை, ‘வாக்: தி ரசா பியனெல்லா ஆஃப் இந்தியன் போயெட்ரி’ எனும் தலைப்பில் கவிதைத் திருவிழா ஒன்றை நடத்துகிறது. 15 இந்திய மொழிகளில் எழுதும் 45 கவிஞர்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்கின்றனர். தமிழ் மொழி சார்பாக மனுஷ்ய புத்திரன், குட்டி ரேவதி, சல்மா ஆகியோர் இந்தத் திருவிழாவில் பங்கேற்கின்றனர். இந்தத் திருவிழாவைத் தொடங்கி வைக்கும் ஐந்து கவிஞர்களில் சல்மாவும் ஒருவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in