ஆணையும் நேசிக்கும் பெண்ணியம்!

ஆணையும் நேசிக்கும் பெண்ணியம்!
Updated on
2 min read

காலங்கள் எவ்வளவுதான் மாறினாலும் மனிதர்கள் இருக்கும்வரை உறவுகளும் அவை சார்ந்த சிக்கல்களும் இருக்கும். அந்தச் சிக்கல்களின் முடிச்சை அவிழ்த்து, மனித மனங்களில் அன்பையும் மனித நேயத்தையும் தழைக்கச் செய்யும் கருவியாக இருக்கின்றன சூடாமணியின் சிறுகதைகள்.

உறவில் புரிதலைப் போலவே பிணக்கும் இயல்புதான். ஆனால், அந்தப் பிணைக்கைத் திறக்கும் சாவி நம்மிடமே இருக்கிறது என்பது சூடாமணியின் வாதம். இந்தத் தொகுப்பின் முதல் சிறுகதையான ‘ரயில்’ அதைத்தான் சொல்கிறது. வெவ்வேறு வயதும் மனநிலையும் கொண்ட கதாபாத்திரங்களை ரயில் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைத்திருக்கிறார். ஆளுக்கொரு நினைப்போடும் மனத்தாங்கலோடும் பெங்களூர் மெயிலில் ஏறும் அவர்கள், ஊர் சேரும்போது அவரவர்க்கான வழியைக் கண்டடைகிறார்கள். ‘கங்கை நீர்’ சிறுகதையில் வருகிற ராகவனுக்கு, ‘செயலுக்குத் தனி அர்த்தம் எதுவும் இல்லை’ என்கிற நினைப்பு. மாமியார் கொடுமையை அனுபவித்த இரண்டு மருமகள்களின் மண வாழ்க்கையைப் பார்க்கிறார். ஒரு மருமகள், தான் அனுபவித்த துயரம் அனைத்தையும் தன் மருமகளிடம் வெளிப்படுத்துகிறார். இன்னொருவரோ, தனக்குக் கிடைக்காத சுகம் எல்லாம் தன் மருமகள் அனுபவிக்கட்டுமே என்று அவரிடம் அன்பாகப் பழகுகிறார். அந்த நொடியில் ராகவனின் அகக்கண் திறக்கிறது. செயலின் அர்த்தம் அதன் எதிர்ச்செயலில்தான் காணப்படுகிறது என்று புரிந்துகொள்கிறார்.

கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் ஏதோவொரு புரிந்துணர்வால் விட்டுக்கொடுத்தும், புழுங்கிக்கொண்டும் குடும்ப அமைப்பைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அன்பு என்ற ஒற்றை இழை மட்டுமே இதைச் சாத்தியப்படுத்தும் என்கிறார் சூடாமணி. ‘பூமியினும் பெரிது’ சிறுகதையில் வருகிற கேசவனுக்குக் கடவுள் நம்பிக்கை அறவே இல்லை. அவர் மனைவி நந்தினியோ கடவுளற்ற தனிமையில் நம்பிக்கையில்லாதவர். இருவரும் எதிரெதிர் திசையில் பயணிக்க, வாழ்க்கை வெறுமையாகிறது. இருவரும் பிரிவதென முடிவெடுத்து ஆளுக்கொரு அறையில் அமர்ந்து கடிதம் எழுதுகிறார்கள். அன்று நள்ளிரவு ரயிலில் ஏறி வெளியூர் போவதென கேசவனும், அந்த ரயிலின் அடியில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வதென நந்தினியும் முடிவெடுக்கிறார்கள். ஆனால், அந்த இரவு அவர்களுக்கு வேறொரு தரிசனத்தைத் தருகிறது. தங்களோடு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு உயிரைக் காப்பற்ற இருவரும் விழி மூடாமல் சேவகம் செய்கிறார்கள். விடிகிற பொழுது அவர்கள் வாழ்வில் புத்தொளியைப் படரச் செய்கிறது.

‘கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி’ சிறுகதையில் வேலையில்லாப் பட்டதாரி இளைஞன் கடற்கரையில் ஒரு பாட்டியிடம் நகைகளைக் கொள்ளையடிக்கிறான். பாட்டியின் ஒரு வார்த்தை, அவன் மனதில் மாற்றத்தை விதைக்கிறது. ‘அதெப்படிச் சாத்தியம்?’ என்ற கேள்வி நமக்கு எழலாம். திறந்திருக்கிற மனதில் எந்தவொரு மாற்றமும் சாத்தியமே. நான், எனது என்ற அகம்பாவம் அடைத்திருக்கிற மனதின் கதவை எந்தச் சாவியாலும் திறக்க முடியாது. குழந்தைகள் திருமண விளையாட்டு நிஜத்தில் நடக்கிறபோது என்னவாகும்? ‘கல்யாணம் நிச்சயிக்க’ கதை, அப்படியொரு சுவாரசியத்துக்கான விடையாக அமைகிறது. அதன் இறுதி வரியில் வெளிப்படுகிற காதலின் வலி, ஆயிரம் அர்த்தங்களைச் சுமந்திருக்கிறது.

பெண்களுக்கு எப்போதும் தற்சார்பு தேவை என்பதைச் சூடாமணியின் கதைகளில் ஊடுபாவாக உணர முடியும். சூடாமணியின் கதைகளில் பெண்ணியம் உண்டு. அது பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும், இந்த உலகத்து உயிர்கள் அனைத்தையும் நேசிக்கிற பெண்ணியம். மனித நேயமற்ற ஒன்று எப்படி பெண்ணியமாக இருக்க முடியும் என்று கேட்கிறார் சூடாமணி. அந்த பதிலுக்கான தேடலில்தான் மனித உறவுகளின் பிணைப்பும் அடிமைத்தனத்தின் மீட்சியும் அடங்கியிருக்கிறது. அந்த மீட்சிக்கான வழியைத்தான் சூடாமணியின் ஒவ்வொரு சிறுகதையும் சொல்கிறது. சூடாமணி, 1954 முதல் 2004 வரை எழுதியவற்றில், தொகுப்புகளில் இடம்பெறாத 60 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து இந்நூலை வெளியிட்டிருக்கிறார்கள். பிரபஞ்சனின் முன்னுரை இந்தத் தொகுப்புக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

- பிருந்தா சீனிவாசன்

தொடர்புக்கு: brindha.s@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in