நல் வரவு: கதை சொல்லும் கலை

நல் வரவு: கதை சொல்லும் கலை
Updated on
2 min read

கதை சொல்லும் கலை, சுப்ரபாரதிமணியன், விலை: ரூ. 20,
நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை, திருப்பூர்-641606, 9894482752

பேரக் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் தாத்தா பாட்டிகள் இப்போதெல்லாம் கிராமங்களிலும் கூட இல்லை. கதை கேட்காத குழந்தைகளின் கற்பனைச் சிறகுகளில் சிலந்திகள் வலை பின்னிக்கொண்டிருக்கின்றன. குழந்தைகளுக்கு ஏன் கதை சொல்ல வேண்டும், குழந்தைகள் கதை கேட்பதால் என்ன பயன், கதை சொல்லும் மரபை மீட்டெடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்… என பல கேள்விகளுக்கான பதிலைத் தேடும் முயற்சியை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் இக்குறுநூலில் மேற்கொண்டிருக்கிறார். குழந்தைகளுக்குக் கதைசொல்வதில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

பின் காலனியம் சமூகம் இலக்கியம்-அரசியல், தொகுப்பாசிரியர்: ந.இரத்தினக்குமார்
விலை: ரூ. 250, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-600014, 044-28482441

பின்காலனியத்தின் வரலாறு, அணுகுமுறைகள், அதன் அரசியல், தமிழ்ச் சூழலில் நிகழ்த்தப்பட்ட காலனியம் குறித்த ஆய்வுகளை விரிவான தளத்தில் அலசியுள்ள கட்டுரைகளின் தொகுப்பிது. கோட்பாட்டு வெளிகள், கலை இலக்கிய வெளிகள், சமூகப் பண்பாட்டு வெளிகள், அரசியல் வெளிகள் எனும் நான்கு தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தி.சு. நடராஜன், பக்தவத்சல பாரதி, அ. இராமசாமி, தியடோர் பாஸ்கரன், ந. முத்துமோகன் உள்ளிட்டோரின் 16 கட்டுரைகளும் பன்முகமான தளத்தில் பின்காலனியத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

குற்றங்களே நடைமுறைகளாய்.., ப.திருமலை, விலை: ரூ. 150
வெளியீடு வாசகன் பதிப்பகம், சேலம்- 636007, 9842974697

நம்மைச் சுற்றி நிகழும் மனிதப் பண்புகளுக்கு எதிரான விஷயங்களைக் கூர்ந்து கவனித்து, அவற்றின் தீர்வுகளுக்கான வழிமுறைகளின் மீது மனதைப் பதித்து ஆக்கபூர்வமான கட்டுரைகளாக்கியுள்ளார் ப.திருமலை. மொழிப் பிரச்சினை, விவசாயப் பிரச்சினை போன்ற பல சிக்கல்கள் பற்றிய சமூகத்தின் குரலைப் பிரதிபலிக்கும் கட்டுரைகள் இவை. பல்வேறு இதழ்களிலும் வெளியான கட்டுரைகள் இவை. கட்டுரையாளரின் சமூக மனத்தைத் தெள்ளெனப் புரிந்துகொள்ள உதவும் இந்நூல், எளிதில் வாசித்துவிடத் தூண்டும் எளிய நடையில் அமைந்துள்ளது.

எல்லீஸின் தமிழ்மொழி ஆய்வு, ஜோ.சம்பத்குமார், விலை: ரூ.130,
நெய்தல் பதிப்பகம், சென்னை-600005, 044-28483860

சமயப் பரப்புதலுக்காகத் தமிழகம் வந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் போலவே ஆங்கிலேய அதிகாரிகளும் தமிழுக்காகப் பல அரும்பணிகளைச் செய்தார்கள். ஃபிரான்ஸ் ஒயிட் எல்லீஸ் எனும் தன் பெயரை தமிழ் ஒலிக்கேற்ப எல்லீசன் என மாற்றிக்கொண்ட ஆங்கிலேயர் குறிப்பிடத்தக்கவர். திராவிட மொழிக் குடும்பம் எனும் கருத்தாக்கத்தை முன்மொழிந்ததோடு, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடிகளுள் ஒருவர் இவர். சென்னையில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டபோது 27 இடங்களில் குடிநீர்க் கிணறுகளைத் தோண்டியவர். ‘எல்லீஸ் துரை’ என அறியப்பட்டவரின் தமிழியற் செயல்பாடுகளை விவரிக்கிறது இந்நூல்.

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள், பின்னலூர் மு. விவேகானந்தன்,
விலை: ரூ. 150, வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை -17, 044-24334397

தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பலரும் பல்வேறு துறைகளில் கால் பதித்துச் சிறப்பு பெற்றவர்கள். மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை, சுவடிகளைப் பதிப்பித்த அறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை, கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார், நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார், ராஜாஜி, வ.வே.சு. ஐயர், நாவலர் சோமசுந்தர பாரதியார், ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார், அறிவியல் கட்டுரைகள் எழுதிய பெ.நா. அப்புசுவாமி, அறிஞர் ச. வையாபுரிப் பிள்ளை, ந. பிச்சமூர்த்தி போன்றோர் அவரவர் துறையில் சிறந்து விளங்கியதுடன் தமிழுக்கும் ஆற்றியுள்ள தொண்டுகள் பற்றி இந்த நூல் பேசுகிறது. வாய்தா வாங்காமல் வாங்கிப் படித்து ரசிக்க வேண்டிய நூல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in