பளிச்!- பொக்கிஷ வேட்டைக் களம்!
புத்தகக் காட்சி அரங்கினுள், பொக்கிஷ வேட்டை யாடுபவர்களின் தலையாய சுரங்கங்களுள் ஒன்று ‘ஏஷியன் எஜுகேஷனல் சர்வீஸஸ்’ அரங்கு (எண்: 71).
புதுடெல்லியை மையமாகக்கொண்டு இயங்கும் இந்தப் பதிப்பகம், பழமையான புத்தகங்களின் மறு பதிப்புக்குப் பிரசித்தம். பழங்கால அறிஞர்கள், கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கிலேயே ஆய்வாளர்கள், இந்திய ஆய்வாளர்கள் எழுதிய மிக முக்கியமான பல புத்தகங்கள் இப்போது ‘ஏஷியன் எஜுகேஷனல் சர்வீஸஸ்’ தயவில் நமக்குக் கிடைக்கின்றன.
அல்பெரூனி (கி.பி. 973 1048), மார்கோ போலோ (கி.பி. 1254 1324), இபின் பட்டுட்டா (கி.பி. 1304 1368) போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வரலாற்றாசிரியர்கள், பயணிகளின் புத்தகங்கள், இந்தியப் பழங்குடிகள்-சாதிகளைப் பற்றி ஈ. தர்ஸ்டன், ஆர்.வி. ரஸ்ஸல், ஹீரா லால் போன்றோர் எழுதிய புத்தகங்கள் இங்கே தவற விடக் கூடாதவை.
ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை எழுதி யாழ்ப்பாணத்தில் 1915-ல் வெளியான ‘யாழ்ப்பாணச் சரித்திரம்’புத்தகத்தின் மறுபதிப்பு, ‘அபிதான கோசம்’என்ற அவரது இன்னொரு புத்தகத்தின் மறுபதிப்பு போன்ற முக்கியமான நூல்களையும் இங்கு காணலாம்.
