பார்த்திபன் கனவு 7: பாட்டனும் பேத்தியும்

பார்த்திபன் கனவு 7: பாட்டனும் பேத்தியும்
Updated on
2 min read

வள்ளிக்கு அந்தப் பயங்கரமான சம்பவம் ஞாபகம் வந்தது.

நாலு வருஷத்துக்கு முன்பு கிழவனையும் கிழவியையும் தவிர, குடும்பத்தார் அனைவரும் ஆற்றுக்கு அக்கரையில் நடந்த ஒரு கலியாணத் துக்குப் படகில் ஏறிப் போய்க் கொண்டிருந்தார்கள். நடு ஆற்றில் திடீரென்று ஒரு சூறாவளிக் காற்று அடித்தது. படகு கவிழ்ந்துவிட்டது. அச்சமயம் கரையில் இருந்த பொன்னன் உடனே நதியில் குதித்து நீந்திப் போய்த் தண்ணீரில் விழுந்தவர்களைக் காப்பாற்ற முயன் றான். தெய்வ யத்தனத்தினால் வள் ளியை மட்டுந்தான் அவனால் காப்பாற்ற முடிந்தது. மற்றவர்கள் எல் லாரும் நதிக்குப் பலி யானார்கள்.

கிழவன் மேலும் சொன் னான்: “என் குலத்தை விளங்க வைக்க நீ ஒருத்தி தான் இருக்கிறாய். உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால், பொன் னனை நானே கழுத்தைப் பிடித்துத் தள்ளு வேன் யுத்தத்துக்குப் போ என்று!”

“யுத்தம் என்னத்திற்காக நடக்கி றது, தாத்தா! அதுதான் புரிய வில்லை”என்றாள் வள்ளி.

“யுத்தம் என்னத்திற்காகவா - மானம் ஒன்று இருக்கிறதே, அதுக்காகத்தான்! எருதுக் கொடிக்குப் புலிக் கொடி தாழ்ந்து போகலாமா? தொண்டை நாட்டுக்குச் சோழ நாடு பணிந்து போகிறதா? இந்த அவமானத்தைப் போக்குவதற்காகத்தான்.”

“எருதுக் கொடி யாருடையது?”

“இது தெரியாதா உனக்கு? எருதுக் கொடி காஞ்சி பல்லவ ராஜாவினு டையது.”

“சிங்கக் கொடி என்று சொல்லு.”

“இல்லை, எருதுக் கொடிதான்.”

“நான் இன்றைக்குப் பார்த்தேன் தாத்தா! தூதர்களின் கொடியில் சிங்கந் தான் போட்டிருந்தது.”

“ஆமாம்; எருதுக் கொடியைச் சிங்கக் கொடியாக மாற்றிவிட்டார்கள். ஆனால் எருது பன்றியை ஜெயித்து விட்டதால் சிங்கமாகி விடுமா?” என்றான் கிழவன்.

“எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தாத்தா! விபரமாய்ச் சொல்லேன்” என்றாள் வள்ளி.

“சரி, அடியிலிருந்து சொல்கிறேன் கேள்!” என்று கிழவன் கதையை ஆரம்பித்தான்.

“நீ பிறந்த வருஷத்தில் இது நடந்தது. அப்போது காஞ்சியில் மகேந்திர சக்கரவர்த்தி ஆண்டு கொண்டிருந்தார். அவருடைய வீரபராக்கிரமங்களைப் பற்றி நாடெங்கும் பிரமாதமாய்ப் பேசிக்கொண்டிருந்த காலம். இந்த உறையூருக்கும் அவர் ஒருமுறை வந்திருந்தார். அவர் விஜயத்தின் ஞாபகார்த்தமாகத்தான் நமது மலை யிலே கூட அவருடைய சிலையை அமைத்திருக்கிறது.

இப்படி இருக்கும் சமயத்தில் வடக்கே இருந்து வாதாபியின் அரசன் புலிகேசி என்பவன் - பெரிய படை திரட்டிக் கொண்டு தென்னாட்டின் மேல் படையெடுத்து வந்தான். சமுத்திரம் பொங்கி வருவது போல் வந்த அந்தச் சைன்யத் துடன் யுத்த களத்தில் நின்று போர் செய்ய மகேந்திர சக்கரவர்த்திக்குத் தைரியம் வரவில்லை. காஞ்சிக் கோட் டைக்குள் சைன்யத்துடன் பதுங்கிக் கொண்டார். கோட்டையைக் கொஞ்ச காலம் முற்றுகையிட்டுப் பார்த்தான் புலிகேசி. அதில் பயனில்லையென்று கண்டு தெற்குத் திக்கை நோக்கி வந்தான். நமது கொள்ளிடத்தின் அக்கறைக்கு வந்துவிட்டான்.

அப்பப்பா! அப்போது இந்த உறை யூர் பட்டபாட்டை என்னவென்று சொல்லு வேன்! நமது பார்த்திப மகாராஜா அப் போது பட்டத்துக்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தது. புலிகேசியை எதிர்க்கப் பலமான ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார். இதற்குள் வடக்கே புலிகேசியின் ராஜ்யத்துக்கே ஏதோ ஆபத்து வந்துவிட்டது போலிருந் தது. புலிகேசி கொள்ளிடத்தைத் தாண் டவேயில்லை திரும்பிப் போய்விட்டான். போகும்போது அந்தக் கிராதகனும் அவனுடைய ராட்சத சைன்யங்களும் செய்த அட்டூழியங்களுக்கு அளவே யில்லையாம். ஊர்களையெல்லாம் சூறையாடிக் கொண்டும் தீ வைத் துக்கொண்டும் போனார்களாம். அதி லிருந்து மகேந்திர சக்கரவர்த்தி யினுடைய புகழ் மங்கி விட்டது.

‘சளுக்கரின் பன்றிக் கொடிக்குப் பல்லவரின் ரிஷபக் கொடி பயந்து விட்டது' என்று ஜனங் கள் பேசத் தொடங்கினார்கள். இந்த அவமானத்துக்குப் பிறகு மகேந்திர சக்கரவர்த்தி அதிக நாள் உயிரோடு இருக்கவில்லை. அவருக்குப் பிறகு நரசிம்மவர்ம சக்கரவர்த்தி பட்டதுக்கு வந்தார். இவர் பட்டத்திற்கு வந்ததில் இருந்து புலிகேசியைப் பழிக்குப் பழி வாங்கிப் பல்லவ குலத்துக்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்க வேணுமென்று ஆயத்தங்கள் செய்து வந்தார்.

கடைசியில் ஆறு வருஷங்களுக்கு முன்பு பெரிய சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு வடக்கே போனார். புலிகேசியைப் போர்க்களத்தில் கொன்று வாதாபி நகரையும் தீ வைத்துக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டுத் திரும்பி வந்தார். இந்தப் பெரிய வெற்றியின் ஞாபகார்த் தமாகப் பல்லவர்களின் ரிஷபக் கொடியை நரசிம்ம சக்கரவர்த்தி சிங்கக் கொடியாக மாற்றிவிட்டார். அவர் திரும்பி வந்து இப்போது ஒரு மாதந்தான் ஆகிறது. வள்ளி! அதற்குள்ளே..”

இத்தனை நேரமும் கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தவள், “அப்பேர்ப் பட்ட சக்கரவர்த்தியுடன் நமது மகாராஜா எதற்காக யுத்தம் செய்யப் போகிறார் தாத்தா! அவருடன் சிநேகமாயிருந்தால் என்ன?” என்று கேட்டாள்.

“அடி பைத்தியக்காரி...” என்று கிழவன் மறுமொழி சொல்ல ஆரம் பித்தான்.

அப்போது வீதியில் குதிரை வரும் சத்தம் கேட்டது. அந்த வீட்டின் வாசலிலேதான் வந்து நின்றது.

“வீரபத்திர ஆச்சாரி!” என்று யாரோ அதிகாரக் குரலில் கூப்பிட்டார்கள். உடனே கிழவன், “அந்தச் சண்டாளன் மாரப்ப பூபதி வந்துவிட்டான். வள்ளி, நீ அவன் கண்ணில் படக்கூடாது, சமையற் கட்டுக்குள் போ, அவன் தொலைந் ததும் உன்னைக் கூப்பிடுகிறேன்” என்றான்.

- அடுத்த வெள்ளியன்று மீண்டும் கனவு விரியும்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in