

விழாவில், ‘இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுத்தல்’ என்ற அமர்வில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அரசியல் விமர்சகர் சஞ்சயா பாரு இருவரும் ‘கஸ்தூரி அண்ட் சன்ஸ்’ இயக்குநர் என்.ரவியுடன் கலந்துரையாடினர். அமர்வில் ப.சிதம்பரம் பேசியது:
“மோடி அரசு அறிவித்த பணமதிப்பு நீக்கம் மலையைக் கிள்ளி எலியைப் பிடிக்கும் வேலை. முறையாகத் திட்டமிடப்படாத இந்நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான சேதத்துக்குள்ளாகியுள்ளது. கிட்டத்தட்ட 45 கோடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தால் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் நேரடியாக ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். இந்த இழப்புகளை எல்லாம் யார் ஈடு செய்யப்போகிறார்கள்? பணமதிப்பு நீக்கம் கள்ளப் பொருளாதாரத்தையும் முடக்கவில்லை; கறுப்புப் பணப்புழக்கத்தையும் தடுக்கவில்லை.
மக்களைத்தான் வாட்டுகிறது. பெரிய அளவிலான வணிகப் பணப் பரிமாற்றத்துக்கு மின்னணுப் பரிவர்த்தனைகளுக்குப் போவதில் தவறில்லை. ஆனால், தனி மனிதர்களின் எல்லாத் தேவைகளுக்கும் பணமற்ற பரிவர்த்தனையை நிர்ப்பந்திப்பது தனி மனிதர்களின் அந்தரங்கத்தைப் பாதிக்கும் உரிமை மீறல்!” என்றார் ப.சிதம்பரம்.