Last Updated : 28 May, 2017 11:46 AM

 

Published : 28 May 2017 11:46 AM
Last Updated : 28 May 2017 11:46 AM

அஞ்சலி: நா. காமராசன் - புதுமைப் பாடகன் ஒருவன் வந்தான்

வெகுமக்களின் ரசனைக்கும் துய்ப்பிற்கும் புதுக்கவிதைகள் வந்து சேராதிருந்த காலத்தில், தன்னுடைய ‘கறுப்பு மலர்கள்’ கவிதை நூல் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் கவிஞர் நா. காமராசன். அதிர்ந்து பேசக்கூடிய வானம்பாடிகளின் கவிதைகளிலிருந்து அவருடைய கவிதைகள் தனித்துத் தெரிந்தன. அன்று சிற்றிதழ்களில் வெளிவந்துகொண்டிருந்த புதுக்கவிதைகளிலிருந்தும் அவருடைய கவிதைகள் வேறுபட்டிருந்தன. தமிழ் இலக்கிய மாணவரான நா. காமராசன், மரபுக் கவிதைகளின் வாயிலாகவே புதுக்கவிதையை வந்தடைந்தார்.

ஒருகட்டத்தில், கொள்கைப் பிரகடனங்களும் கோபாவேசக் கூற்றுகளும் கவிதையாகாதென வானம்பாடிகளுக்கு எதிராக ஒரு குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அந்தக் குரலுக்குப் பதில் சொல்லும் விதத்தில் அமைந்த கவிதைகளை எழுதியவர் காமராசன். சின்ன சின்ன வாக்கியங்களில் கவிதைத் தெறிப்புகளை வெகுசன பகிர்தலுக்குக் கொண்டுவந்தவர். ‘நிர்வாணத்தை விற்கிறோம், ஆடை வாங்குவதற்காக’ எனப் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வை அவர் எழுதிக் காட்டினார். புதுக்கவிதைகளின் பரவலுக்கும் விடுதலைக்கும் வெகுவாக உழைத்திருக்கிறார்.

‘நுரைப்பூவை அள்ளி அலை சிந்த வேண்டும்’ போன்ற அழகியல் படிமங்களைத் திரைப்பாடலில் எழுதியவர்களில் ஒருவர். அவர் எழுதிய ‘போய் வா நதியலையே’ என்னும் பாடல் இன்றுவரை நம்முடைய நினைவு அடுக்குகளில் இருப்பதுதான் விசேஷம்.

சுரதாவால் அடையாளங் காட்டப்பட்ட அவர், உவமைகளின் வாயிலாகச் சிந்தனைகளைச் சொல்லிவந்த பழைய மரபை ஓளரவுக்குத் தாண்டியவர். ‘உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது / அதை உச்சரிக்கும்போது கொஞ்சம் தித்திக்கின்றது’ என்பது போன்ற சொற்கோவைகளைத் திரைப்பாடலில் கொண்டுவந்தார். கவியரங்குகள் செழிப்புற்றிருந்த காலத்தில், நா. காமராசனின் கவிதைகளைக் கேட்பதற்கென்றே ஒரு கூட்டமிருந்தது. தன்னை எழுதத் தூண்டியதில் எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தத்துக்கு முதன்மைப் பங்குண்டு எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், காண்டேகரின் படைப்புகளையும் சங்க இலக்கியங்களையும் உள்வாங்கிக்கொண்டவர். கிராமியச் சந்தங்களுக்கு ஏற்ப வார்த்தைகளை இட்டு நிரப்பி, புதுக்கவிதையில் வடிவ நேர்த்தியை ஒருவாறு உருவாக்கிவைத்திருந்தார்.

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், முன்னாள் சபாநாயகர் காளிமுத்து ஆகியோரின் வகுப்புத் தோழரான காமராசன், பேராசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். தான் பயின்ற தியாகராயர் கல்லூரியிலேயே விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். அவர் பாடம் நடத்தும் அழகைக் காண மாற்றுத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்பிற்கு உள்ளேயும் வகுப்பிற்கு வெளியேயும் காத்திருந்த காலம் ஒன்றுண்டு. பல காரணங்களால் அவர் பின்பு முழு நேர அரசியல் பணியில் ஈடுபட நேர்ந்தது. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், தமிழண்ணல் போன்ற தமிழறிஞர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். திராவிட இயக்கச் சார்பினாலும் தம்முடைய கவிதைகளாலும் எம்.ஜி.ஆரின் நன்மதிப்பைப் பெற்று, திரைத்துறையில் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். ‘பஞ்சவர்ணம்’ என்னும் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த அவரைத் தன் பக்கம் இழுக்க எம்.ஜி.ஆர். வழங்கிய வாய்ப்புகளில் ஒன்றுதான் கதர் வாரியத் துணைத் தலைவர் பதவி. எங்கேயும் அவரால் நிலைகொள்ள முடிந்ததில்லை. ‘மகா காவியம்’, ‘சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி’, ‘தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும்’, ‘சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்’, உள்ளிட்ட முப்பதுக்கும் மேலான நூல்களை எழுதியுள்ள நா. காமராசன், இறுதிக் காலங்களில் எழுதுவதில் அதிருப்தியுற்றிருந்தார். ‘பூவெடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்த நான், சிறிது காலம் புல்லறுக்கப் போய்விட்டேன்’ எனத் திரைத்துறை அனுபவத்தைக் கசப்போடு பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

தடாலடியான பேச்சு

தடாலடியான நேர்காணல்கள் மூலம் இலக்கிய உலகத்தை அவ்வப்போது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார். “கம்பனுக்குப் பிறகு தமிழில் கவிஞனே இல்லை” என்றும், “கம்பனும்கூட என் பார்வையில் குறைந்தே தெரிகிறான்” என்றும் நேர்காணல்களில் கூறியிருக்கிறார். என்னுடைய பத்திரிகையாள நண்பர் ஒருவர், அவரை பேட்டிகாணச் சென்றபோது “கண்ணதாசனெல்லாம் ஒரு கவிஞனா?” எனச் சொல்லியிருக்கிறார். அதை அட்டைப்படக் கட்டுரையாக்கிவிடும் ஆர்வத்திலிருந்த என் நண்பர், மேலும் அப்படியான கேள்விகளை முன்வைக்கிறார். எதற்கும் தயங்காமல் பட்டதையெல்லாம் சட்டென்று போட்டு உடைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில், “நீங்கள் சர்வாதிகாரியானால்?” என்ற கேள்வியைக் கேட்க, “மோசமாக எழுதுகிறவர்களைச் சுட்டுத் தள்ளுவேன்” என்று அவர் சொல்லவில்லை. “பசியோடு இருக்கும் அத்தனை பேருக்கும் உடனே உணவு கொடுங்கள் என ஆணையிடுவேன்” என்றிருக்கிறார்.

நெகிழ்வும் அன்பும் கூடிய அவர், எழுத்தைவிடவும் அதிகமாக மனிதர்களை நேசித்தவர். தன்மீது காத்திரமான விமர்சனங்களை வைத்த எழுத்தாளர் ஜெயமோகனை, “எழுதும் வேலையை மட்டுமே கொண்டிருப்பவன் நான்” என்று எளிதாகக் கடந்துபோனார். மேடைத் தமிழுக்கு அவர் போன்றவர்களால் ஏற்பட்ட கெளரவமே திராவிட இயக்கத்துக்கான ஆதரவை அதிகப்படுத்தின. திரைப்பாடல்களில் உருவகங்களை அதிக அளவு பயன்படுத்திய காமராசன், அப்பாதிப்பைத் தனக்களித்த பிதாமகனாக கேரளக் கவி வயலார் ரவிவர்மாவைச் சொல்லுகிறார். புதுக்கவிதையிலும் சிலேடை உத்திகளைக் கையாள முடியுமென்று நிரூபித்தவர். சிலேடை, அணியிலக்கண அழகுகள் எல்லாம் கவிதைக்குத் தேவையா என்பது வேறு. ஆனால், சொல்லழகிலும் உத்திகளிலும் அதீத கவனம் செலுத்திய அவர், சிலேடை என்னும் இலக்கிய அலங்காரத்தை ‘நகைச்சுவை ராணி’ என்று வர்ணித்திருக்கிறார். கம்யூனிஸக் கருத்துகளை மாபெரும் உருவக வரைபடத்தில் ஏற்றிச் சொன்ன வயலாரைத் தவிர்த்து, தான் மதிக்கக்கூடிய கவிஞர்களாக இன்குலாப்பையும் அப்துல் ரகுமானையும் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.

பாடல் வாய்ப்புக்காக அவர் எங்கேயும் யாரிடமும் நின்றதாகத் தகவலில்லை. அதன் காரணமாக இத்தனை ஆண்டுகளில் மிகக் குறைவான திரைப்பாடல்களே எழுதியிருக்கிறார். ‘ஊருக்கு உழைப்பவன்’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான அவர், முப்பத்தி மூன்று திரைப்படங்களுக்கு மட்டுமே பாடல்கள் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. குறைவான பாடல்களே எழுதியிருந்தாலும், அவற்றில் முக்கியமான பாடல்கள் நிறைய உண்டு.

மதுவை ராஜ திரவமென்றும் கவிஞர்களின் தாய்ப்பாலென்றும் எழுதிய அவருடைய சொல்லாட்சிகள் இன்றைய நவீனக் கவிஞர்களுக்கு அலுப்பும் சலிப்பும் ஊட்டலாம். ஆனால், எழுபது எண்பதுகளில் அவர் எழுதிய ‘சந்திரிகைப் பந்தல்’, ‘முத்துக்களின் பள்ளம்’, ‘கப்பலின் சமவெளி’, ‘நதிகளின் கல்லறை’, ‘சிவப்பு வஸந்தம்’, ‘நட்சத்திர புஷ்பங்கள்’ போன்றவை கொண்டாடப்பட்டன. ‘மின்னல் நரம்பு மேகத்தில் / காற்று மீட்டும் மழைப்பாடலில் / கண்ணீர் ராகம் பாய்ச்சுவேன்’ என்று அவர் எழுதிய கவிதை வரிகளை இப்போதும் மனப்பாடமாக ஒப்பிக்கும் தமிழாசிரியர்களைக் கண்டிருக்கிறேன்.

அரசியல் பயணம்

கல்லூரிக் காலங்களில் மிகத் தீவிரமான அரசியல் செயற்பாட்டாளராக இருந்த காமராசன், காங்கிரஸ் எதிர்ப்பைக் கொண்டிருந்தார். ஊர்தோறும் ‘படிக்காத காமராசரைப் பற்றி படித்த காமராசர் பேசுகிறார்’ எனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து பெரியார், ‘படிக்காத காமராசர் உருவாக்கிய பள்ளிக்கூடத்தில் படித்த காமராசர் பேசுவதாக போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் காலில் விலங்கிடப்பட்ட கைதியாகச் சிறையிலிருந்தவர், கால ஓட்டத்தில் வெவ்வேறு கட்சிகளில் தன்னை இணைத்துக்கொண்டபோதிலும் இறுதிவரை திராவிடக் கருத்தியலிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. தனித் தமிழ் நாடு, தமிழ் தேசியம் என்றெல்லாம் பேசிவந்த அவர், சிறிது காலம் ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத அமைப்புகளுடனும் அன்பு பாராட்டியது ஆச்சரியமளிக்கிறது.

ஒரு காலத்திய கவிதைகளின் போக்கை தீர்மானித்த சக்தியாக அவர் இருந்திருக்கிறார். திரைப்பாடலில் சூழலுக்கு மட்டுமல்ல, இசைக்கேற்பவும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது சவாலான காரியம். அந்தச் சவாலை லகுவாகத் தாண்டிச் செல்லும் சாதுர்யம் வாய்த்தவர் காமராசன். ‘இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்’ என்று தொடங்கும் பாடலில் ‘புத்தனின் முகமோ என் தத்துவச் சுடரோ’ என்று எழுதியிருப்பார். அதற்கு முன்புவரை இப்படியான உவமைகளைத் திரைப்பாடலாசிரியர்கள் எழுதியிருக்கவில்லை. ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ‘சிட்டுக்குச் செல்லச் சிட்டுக்கு’ எனும் பாடலில் தந்தைக்கும் மகளுக்குமான பிரிவை மிக நேர்த்தியாக எழுதியிருப்பார். புதுக்கவிதைகளின் திரட்சியைத் திரைப்பாடல்களில் கொண்டுவர முயன்ற காமராசன், போற்றுதலுக்குரிய முயற்சிகளைத் தன்னளவில் சாதித்தவர். ‘கடலின் அலை இரைச்சலை நான் அடிக்கடி குரைக்கிறேன், காரணம் நான் புயலின் வேட்டை நாய்’ என்று ஒரு கவிதையில் எழுதியிருப்பார். வேட்டையாடிவிட்ட மரண நாய்க்குத் தெரியுமா, தான் ஒரு புயலை விழுங்கிவிட்டோமென்று?

யுகபாரதி, கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், ‘மனப் பத்தாயம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் தொடர்புக்கு: yugabhaarathi@gmail.com

ஓவியம்: முத்து







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x