Last Updated : 04 Mar, 2017 10:12 AM

 

Published : 04 Mar 2017 10:12 AM
Last Updated : 04 Mar 2017 10:12 AM

காலந்தோறும் தொல்காப்பியம்

தொல்காப்பியம் தமிழ் அறிவு மரபின் உச்சம். அந்தப் பிரதி நவீன சிந்தனைகள் பலவற்றுடனும் பொருந்துவதாக இருக் கிறது. தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை, பண்பாட்டை அறிவதற்குத் தொல் காப்பியமே தலையூற்றாக உள்ளது. 19-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பரவலான அச்சுப் பண்பாட்டின் வழியாகத் தமிழின் தொன்மையான நூல்கள் பதிப்பிக்கப்பட்டன. 1847-ல் தொடங்கி தொல்காப்பியம் பல்வேறு பதிப்புகளைக் கண்டுள்ளது. இதன் தொடச்சியாகத் தொல்காப்பியப் பிரதியைத் தமிழ்ச் சமூகம் பல்வேறு நிலைகளில் உள்வாங்கியது; மேலை அறிவுலகின் கவனத்தையும் தமிழின்பால் இழுக்கவும் முற்பட்டது.

தொல்காப்பியமும் தனிநாயகம் அடிகளும்

கனகசபைப் பிள்ளை, பி.டி. சீனிவாச ஐயங்கார் போன்றோர் தமிழக வரலாறு குறித்து ஆங்கிலத்தில் எழுதினார்கள். ‘செந்தமிழ்’, ‘செந்தமிழ் இதழ்’, ‘தமிழ்ப்பொழில்’ போன்ற இதழ்கள் தமிழியல் ஆய்வுகளை முன்னெடுத்தன. ஆனால், உலகின் மிகக் தொன்மையான மொழிகளுள் ஒன்றாகிய தமிழோடு தொடர்புள்ள செய்திகளும் ஆய்வுகட்டுரைகளும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டால் மட்டுமே உலக அரங்கில் தமிழ் இடம்பெற இயலும் என்பதைக் கணித்துச் செயல்பட்டவர் பேராசிரியர் தனிநாயகம் அடிகள்.

தமிழியல் இதழ்

தமிழ் இலக்கியத்தின் தொன்மை, நுண்மை, பருண்மை, மெய்மை, தனித் தன்மை ஆகியவற்றைப் பேராசிரியர் தனி நாயகம் அடிகள் உலகின் பல நாடுகளுக்குச் சென்று உணர்த்தியதோடு, ‘ஜர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்’ (Journal of Tamil Studies) என்னும் ஆய்விதழையும் 1952-ல் தொடங்கினார். இந்த இதழில் ஆங்கிலக் கட்டுரைகளே பெரும்பாலும் எழுதப்பட்டன. இவ்விதழ் 1966 வரை வெளிவந்தது. அதன் பிறகு 1972-ம் ஆண்டிலிருந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ‘ஜர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்’ இதழோடு ‘தமிழியல்’ என்ற இதழையும் இணைத்து முத்திங்கள் இதழாக வெளியிட்டுவருகிறது.

இந்த இதழ்களுள் 1972 முதல் 2000 வரை வெளிவந்த தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகளைத் ‘தமிழியலில் தொல்காப்பியம்’ எனத் தொகுத்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காலந்தோறும் தொல்காப்பியம்…

இந்தத் தொகுப்பில் உள்ள 14 கட்டுரைகளையும் வாசிக்கும்போது புதுப்புதுத் தரவுகள், கோட்பாடுகளுக்கேற்பத் தொல்காப்பிய ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளதை அறிய முடியும். மாறிவரும் காலத்துக்கு ஏற்றவாறு தமிழ்ச் சிந்தனை மரபு எவ்வாறு செயல்பட்டுள்ளதை என்பதையும் உணர முடியும். தமிழ் அறிவுப் பரப்பில் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் உருவாகியுள்ளதையும் இந்தக் கட்டுரைகள் அடையளப்படுத்துகின்றன. தமிழ் அடையாளம் என்பது தொல்காப்பியம் இன்றி சாத்தியமில்லை.

ஆகையால் இந்தப் பனுவல் குறித்த அறிவுசார் உரையாடல் புலமைத் தளத்தில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுவருகிறது. குறிப்பட்ட காலகட்டத்தில் தொல்காப்பிய வாசிப்பு எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பதை அறிய இந்நூல் துணைபுரிவதோடு அடுத்த கட்டத்துக்கு ஆய்வை நகர்த்துவதற்கான தடத்தையும் உருவாக்குகிறது. ஆய்வுநிலையில் கவனம்பெற்றுள்ள இந்நூல் தமிழ் ஆய்வாளர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டியது அவசியம்.

-கல்பனா சேக்கிழார், உதவிப்பேராசிரியர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
தொடர்புக்கு: kalpanasekkizhar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x