Published : 08 Sep 2018 09:04 am

Updated : 08 Sep 2018 09:06 am

 

Published : 08 Sep 2018 09:04 AM
Last Updated : 08 Sep 2018 09:06 AM

கவனிக்க வேண்டிய பத்து புத்தகங்கள்

க.திருநாவுக்கரசுவின் ஆய்வுப் பயணம்

கட்டுரைகள், நேர்காணல்கள், படைப்பிலக்கியங்கள் உள்ளடக்கிய பெருந்தொகுப்பை ஆண்டுதோறும் வெளி யிடுகிறார் ‘சாளரம்’ வைகறைவாணன். 2018 தொகுப்பின் முக்கிய அம்சம், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவின் வாழ்க்கைப் பயணத்தையும் அரசியல் பயணத்தையும் ஆவணப்படுத்தியிருக்கும் அவரது விரிவான நேர்காணல். நக்சல்பாரி இயக்கத்தின்


50-ம் ஆண்டையொட்டி தியாகு எழுதியுள்ள கட்டுரையும், சாரு மஜூம்தாரின் மகன் அபிஜித் நேர்காணலும் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேசியம், யாழ்ப்பாண புலமைத்துவ மரபு குறித்த கா.சிவத்தம்பியின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

சாளரம் - 2018

வைகறைவாணன்

சாளரம்,

விலை: ரூ. 190

 94451 82142

ஒடுக்குமுறையும் எதிர்ப்பரசியலும்

அர்ஜென்டினாவில் மிகக் கொடுமையான அரசு வன்முறையைத் தொடர்ந்து முப்பதாயிரம் இளைஞர்கள் ‘காணாமல் போனார்கள்’. அரசு பயங்கரவாதத்தை எதிர்க்கும்பொருட்டு தாய்மார்கள், மனைவி மக்கள், சொந்தபந்தங்கள் என வெவ்வேறு வயதைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இதை மையப்படுத்தி வெளியான த்ராபாவின் நாவல், அமரந்தாவின் அற்புதமான மொழி பெயர்ப்பில் 1997-ல் வெளியாகியது. இப்போது காலத்தேவை கருதி மீண்டும் மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். அரசு வன்முறையையும், எதிர்ப்பரசியலின் வலிமையையும் நுட்பமாக வெளிப்படுத்தும் நாவல் இது.

நிழல்களின் உரையாடல்

மார்த்தா த்ராபா

தமிழில்: அமரந்தா

காலக்குறி & யாழ் பதிப்பகம்

 99405 87670

அன்புவழி

அழகிய பெரியவன் 2011 வரை எழுதிய மொத்த கதைகளையும் தொகுத்து ‘அழகிய பெரியவன் கதைகள்’ வெளியான பிறகு, நீண்ட இடைவெளி கழித்து இப்போது புதிய கதைகளோடு இந்தத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. பொருளாதாரரீதியில் பின்தங்கியும், கூடவே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியும் இருக்கும் குடும்பங்களில் பல்வேறு நெருக்கடி களுக்கிடையே துளிர்க்கும் அன்பைக் கோடிட்டுக் காட்டும் விதமாக இருக்கின்றன இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள். இளம் தலைமுறையின் பாகுபாடற்ற மனப்பாங்கை வெளிப்படுத்தும் கதைகளோ மனிதத்தை விதைக்கின்றன.

அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார்

அழகிய பெரியவன்

நற்றிணை பதிப்பகம்

விலை: ரூ.250

 94861 77208

விவசாயிகளின் கலைக்களஞ்சியம்

கோவை வேளாண் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் வேளாண்பொருளியல் அறிஞருமான வி.டி.சுப்பையா முதலியாரின் முப்பதாண்டு கால உழைப்பில் உருவாகி 1956-ல் வெளிவந்த நூலின் மறுபதிப்பு. உணவு தானியங்கள், பருப்பு வகைகள், பணப் பயிர்கள் என்று அனைத்து வகையான பயிர் வகைகளின் வரலாற்றுப் பின்னணி, சாகுபடி விவரங்கள், விளைச்சலைப் பதப்படுத்தும் முறைகள், விளக்கங்கள், அரிய தகவல்கள் என முழு விவரங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. விவசாயிகளின் மரபார்ந்த அறிவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் அற்புதத் தொகுப்பு.

தென்னிந்தியப் பயிர்கள்

வி.டி.சுப்பையா முதலியார்

வேலா வெளியீட்டகம்

விலை: ரூ.450

 0422 2382614

எதிர் திசை ஓட்டம்

யானைகளின் மீது தான் கொண்டிருந்த காதலின் பொருட்டு கடந்த இருபது ஆண்டுகளாக யானைகள் குறித்தும் இயற்கைக்கு மனிதன் செய்த சேதாரங்கள் குறித்தும் தொடர்ந்து அவதானித்துவருபவர் கா.சு.வேலாயுதன். அவரது அனுபவங்களும் அவதானிப்புகளும் ‘யானைகளின் வருகை’ எனும் தொகுப்பாக இப்போது வெளிவந்திருக்கிறது. தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில வனப்பகுதிகளைப் படம்பிடித்துக் காட்டுவதன் மூலம் ஓர் உலகளாவிய பார்வையை முன்வைக்கிறார். வெறுமனே தகவல்களாக, அனுபவப் பகிர்வாக இல்லாமல் தனது நுட்பமான பார்வையின் மூலம் ஆழமான புரிதலைத் தருகிறார்.

யானைகளின் வருகை

கா.சு.வேலாயுதன்

இந்து தமிழ் திசை பதிப்பகம், விலை: ரூ.180

 74012 96562

மாறுவேடமிட்டிருக்கும் நம் முகங்கள்

நோபல் பரிசுபெற்ற ஹால்டார் லேக்ஸ்நஸை, ‘மீனும் பண் பாடும்’ நாவல் மூலமாகத் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் எத்திராஜ் அகிலன். இந்த நாவலில் இழை யோடும் பகடிக்காகவே ஆர்வத்தோடு வாசித்தார்கள். இன்றைய சமூகத்தில் உலகமயமாக்கல் விளைவித்திருக்கும் இடர்ப்பாடுகளை நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே யூகிக்கத் தொடங்கியிருக்கிறார் லேக்ஸ்நஸ். அயல்தேச கிராமவாசிகளின் நாட்டார் வழக்குகளும், அவர்களது வாழ்வுமுறையும், மனவோட்டங்களும் ஆச்சர்யத்தக்க வகையில் நமது சூழலுக்கு மிக நெருக்கமாக இருக்கின்றன. தமிழ் இலக்கியவுலகுக்கு ஒரு நல்வருகை.

மீனும் பண் பாடும்

ஹால்டார் லேக்ஸ்நஸ்

தமிழில்: எத்திராஜ் அகிலன்

காலச்சுவடு பதிப்பகம்

விலை: ரூ.375, 96777 78863

புதிய வெளிச்சம்

பெருமளவில் கவனம் பெற்ற ‘ஜாதியற்றவளின் குரல்’ தொகுப்புக்குப் பிறகாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சமூகத்தின் ஒவ்வொரு அடுக்குகளிலும், எல்லா மட்டத்திலும் எவ்விதமாக சாதியம் தனது மூர்க்கத்தை வெளிப்படுத்துகிறது என்பதையும், ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப சாதிய வன்மம் எவ்வாறு தனது ரூபத்தை மாற்றிக்கொண்டு அதே மூர்க்கத்தோடு செயல்படுகிறது என்பதையும் ஜெயராணியின் கட்டுரைகள் முன்வைக்கின்றன. சாதியக்கூறுகளைத் தனித்துவத்துடன் அணுகும் ஜெயராணியின் பார்வை, சாதியக் கண்ணோட்டத்தில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

உங்கள் மனிதம் ஜாதியற்றதா?

ஜெயராணி

எதிர் வெளியீடு

விலை: ரூ. 220

 99425 11302

உலகம் சுற்றிய அடிமைகள்

தமிழகம் காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டபோது நிகழ்ந்த சமூக மாற்றங்களையும் அவற்றின் விளைவுகளையும் பேசும் ஐந்து ஆய்வுக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் ராணுவத்தில் சேர்ந்தது, கைவினைஞர்கள் மற்றும் மீன்பிடிச் சமூகங்களின் வாழ்க்கை நிலை, ஐரோப்பியர்களின் அடிமை வணிகம், மற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட தமிழக அடிமைகளின் நிலை என காலனிய கால கட்டத்து வரலாற்றைப் பேசும் தொகுப்பு. போர்த்துகீசு, பிரெஞ்சு மொழிகளில் உள்ள இதுவரை கவனம்பெறாத பல ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது இந்நூலின் சிறப்பு.

காலனியத் தொடக்கக் காலம் (கி.பி.1500-1800)

எஸ்.ஜெயசீல ஸ்டீபன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை: ரூ.195

 044 26251968

பற்றி எரிந்த பனை!

பிரபாகரனின் இளமைப் பருவம் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையிலான வரலாறு. கூடவே, பிரபாகரனின் நேர்காணல்கள், அறிக்கைகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளியீடுகள், இலங்கைத் தமிழர்ப் போராட்டங்கள் குறித்து ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்திய - இலங்கை ஒப்பந்தம், தமிழகத் தலைவர்களுடனான இலங்கை போர்க்குழுக்களின் உறவுகள், போர்க்கள வியூகங்கள், வெற்றி தோல்விகள் ஆகியவற்றுடன் சர்வதேச சமூகத்துடனான விடுதலைப் புலிகள் அமைப்பின் உரையாடல்களையும் புரிந்துகொள்ள இத்தொகுப்பு உதவும்.

வேலுப்பிள்ளை பிரபாகரன்: விடுதலைப் போராட்ட வரலாறு

செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை

வ.உ.சி. நூலகம், விலை: ரூ.1500

 044 28476273

திரை மேதைகளை அறிவோம்

மொழிபெயர்ப்புகளின் வாயிலாகத் திரையுலக உரையாடலைத் தொடர்ந்து முன் னெடுத்துவரும் ராம் முரளியின் இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் இது. திரைத் துறையில் தீவிரமாக இயங்கிய இயக்குநர்களின் வாழ்வை அறிவதன் மூலம் அவர்களது படைப்புகளை நெருக்கமாக அணுக உதவும் விதமாக நேர்காணல்களும் கட்டுரைகளும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆன்மிக மற்றும் தத்துவார்த்தக் கண்ணோட்டம் கொண்ட இயக்குநர்கள், அரசியல்ரீதியில் திரைப்படங்களை அணுகியவர்கள், புதிய திரைபாணியுடன் வலம்வரும் சமகாலப் படைப்பாளிகள் என மூன்று பகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

காலத்தைச் செதுக்குபவர்கள்

ராம் முரளி, யாவரும் பதிப்பகம்

விலை: ரூ.200, 90424 61472

தொகுப்பு: கே.கே.மகேஷ், த.ராஜன்Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x