Last Updated : 15 Sep, 2018 08:58 AM

 

Published : 15 Sep 2018 08:58 AM
Last Updated : 15 Sep 2018 08:58 AM

சந்தால் பழங்குடிகளைப் பீடித்திருக்கும் மர்ம நோய்!

‘ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்’ சிறுகதைத் தொகுப்பின் மூலமாகத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவர் ஹஸ்தா சௌவேந்திர சேகர். சந்தால் இனப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி இந்தப் புத்தகத்துக்குத் தடைவிதித்தது ஜார்கண்ட் அரசு. பழங்குடிகள் அமைப்பிலிருந்தும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. கூடவே, அரசின் அனுமதியின்றி புத்தகம் எழுதியதற்காக அவரை மருத்துவர் பணியிலிருந்து இடைநீக்கமும் செய்தது. “இன்னும் அதிகமான கதைகளும், கட்டுரைகளும் எழுதுவதுதான் இந்தத் தடையை எதிர்த்துப் போராடுவதற்கான வழி” என்றார் சந்தால் இனத்தைச் சேர்ந்த ஹஸ்தா.

இத்தகைய சர்ச்சைகள் தீவிரமடைவதற்கு முன்பே அவரது முதல் நாவலான ‘ரூபி பாஸ்கேயின் மர்ம நோய்’, சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருதுபெற்றிருந்தது. க்ராஸ்வேர்ட் விருது, ‘தி இந்து’ இலக்கிய விருது மற்றும் டப்ளின் இலக்கிய விருதுகளின் இறுதிப்பட்டியலிலும் இடம்பெற்றது. அவர் பின்னாளில் எதிர்கொண்ட எதிர்ப்புக்கு அவர் முதல் நாவலிலே அடைந்திருந்த புகழும் ஒரு காரணம். ‘ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்’ தொகுப்பைத் தொடர்ந்து இப்போது ‘ரூபி பாஸ்கேயின் மர்ம நோய்’ நாவலை இரா.செந்திலின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டிருக்கிறது எதிர் பதிப்பகம். பழங்குடிகளின் மொழியிலுள்ள கலாச்சார சொல்லாடல்களைத் தவிர்த்துவிடாமல் கவனமாக மொழிபெயர்த்திருக்கிறார் இரா.செந்தில். இப்படியான மொழிபெயர்ப்பு, இந்நாவலின் உயிர்ப்பைத் தமிழில் வாசிக்கையிலும் தக்கவைத்துக்கொள்ள உதவியிருக்கிறது.

இந்த நாவலில் ஹஸ்தா ஒரு யுக்தியைக் கையாள்கிறார்; ஏற்கெனவே பழங்குடிகளின் மேல் இருக்கும் பொதுபிம்பத்தைத் தவிர்ப்பதற்காக கதாபாத்திரங்களின் உடை, இருப்பிடம், தோற்றம் தொடர்பானச் சித்தரிப்புகளைத் தவிர்க்கிறார் ஹஸ்தா. பிழைப்புக்காக வேறு இடங்களுக்குச் செல்லும்போது அங்கிருக்கும் நில அமைப்பு, வீடுகள் குறித்த சித்திரங்கள் தவிர சொந்த நிலங்கள், உடைகள், தோற்றம் குறித்த நுட்பமான விவரணைகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இதனால், நம்மால் எவ்வளவு முயன்றும் நமக்குள் இருக்கும் பழங்குடிகளின் பிம்பத்துக்குள் இந்த நாவலின் கதாபாத்திரங்களை அடைக்க முடிவதில்லை. இந்த யுக்தி, வாசிப்புத் தளத்தை மெருகேற்றும் விதமாக அமைந்திருக்கிறது. ரூபி, சிதோ, பூழி, தோஸோ, கோழ்தா, புட்கி, குருபாரி, துலாரி, சோமாய் என பழங்குடிகளின் பெயர்களும், கலாச்சாரம் பொதிந்த சொல்லாடல்களும், உறவுமுறைகளைத் தமிழ்ப்படுத்தாமல் விட்டிருப்பதும் வசீகரம் தருகின்றன.

ரூபி பாஸ்கே எவ்வளவு வலிமைவாய்ந்தவள் என்பதை எடுத்துரைக்கும் விதமாக முதல் அத்தியாயம் தொடங்குகிறது. ஆனால், அவள் ஒரு மர்ம நோயினால் பீடிக்கப்படுகிறாள். அந்த நோய் குருபாரியுடன் தன் கணவன் சிதோ கொண்டிருக்கும் உறவினால் ஏற்பட்டதாக இருக்கலாம் அல்லது குருபாரிக்குத் தன் முதல் மகனைத் தாரைவார்த்ததால் இருக்கலாம் அல்லது ஊர் மக்கள் நம்புவது போல அவளுக்குப் பேய் பிடித்திருப்பதாகக்கூட இருக்கலாம். வலிமைவாய்ந்த பெண்ணான ரூபி, நோயினால் பீடிக்கப்பட்டு நொடிந்துபோய் வலிமையற்ற ஜீவனாக, யாருக்கும் உதவாதவளாக, குடும்பத்துக்கு பாரமாக மாறிப்போகிறாள். நாவல் முழுவதும் ரூபியைச் சுற்றியே வலம்வருகிறது. ஆனால், ரூபி அதிகமாகப் பேசுவதில்லை. அபூர்வமாகவே அவள் குரல் ஒலிக்கிறது. அவளைப் பீடித்திருக்கும் மர்ம நோயைப் போலவே அவளும் மர்மம் நிறைந்தவளாகவே இருக்கிறாள். உண்மையில், இந்த மர்ம நோய் என்பது வெளிப்படையாகவே நாவலில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ரூபியின் மர்ம நோயைப் பிரதானமாகக் கொண்டு சந்தால் இனத்தின் வாழ்வியலை சுவாரசியமாகப் பேசுகிறது இந்த நாவல்.

கொல்லர்களான காமார் இனமும், குயவர்களான குன்க்கல் இனமும் நாவலின் சொற்பமான இடங்களில் எட்டிப்பார்க்கின்றன. இந்த இரு இனங்களும் இந்து மதத்தைச் சேர்ந்தவை. சந்தால் இனமோ சர்ணா மதத்தைச் சேர்ந்தது. இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் காமார், குன்க்கல் இனத்தவர்கள் பழங்குடிகளான சந்தால்களிடம் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள். பழங்குடிகளின் இடத்துக்குள் நுழைந்துவிட்டு, இடம் கொடுத்த பழங்குடிகளையே தீண்டத்தகாதவர்கள் என்கிறார்கள். பொருளாதாரத்தில் மேல்மட்டத்தில் இருக்கும் மேல்சாதிகள் குறித்தும் காத்திரமான ஒரு அத்தியாயம் இருக்கிறது. பழங்குடிகளின் வாழ்வியலில் தனது கவனத்தைக் குவித்திருக்கும் ஹஸ்தா, தான் கொஞ்சமாகத் தொட்டுச்சென்ற அரசியலுக்கும் பிரதான இடம் கொடுத்திருக்கலாம்.

ரூபி பாஸ்கேயின் மர்ம நோய்

ஹஸ்தா சௌவேந்திர சேகர்

தமிழில்: இரா.செந்தில்

எதிர் வெளியீடு

96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002.

விலை: ரூ.290

 99425 11302

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x