Last Updated : 22 Sep, 2018 10:10 AM

 

Published : 22 Sep 2018 10:10 AM
Last Updated : 22 Sep 2018 10:10 AM

நூல் நோக்கு: மாறாத காதல்

உன் நீண்ட கூந்தல் மயில்தோகையென அசைகிறது.

உன் தொடைகள் நடுங்குகின்றன.

உன் விழிகள் செருகுகின்றன

விட்டுவிட்டுத் தொடர்கிறாய் உன் ஆண் விளையாட்டை.

புரிகிறதா இப்போது ஆணின் சிரமம்?

நம்மூர் அகநானூறு போல மகாராஷ்ட்டிர பிராகிருதத்தில் அமைந்த தொகை நூலான ‘காஹா சத்தஈ’யில் உள்ள ஒரு பாடல் இது. காதல், காமம், ஊடல் போன்றவற்றை வெளிப்படையாகப் பாடும் பாடல்களைத் தமிழில் மிக அழகாக கவிச்சுவை குன்றாமல் மொழிபெயர்த்திருக்கிறார்கள் பேராசிரியர் சுந்தர் காளியும், அவரது துணைவி பரிமளம் சுந்தரும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 251 பாடல்களை மட்டுமே இந்நூலில் சேர்த்திருக்கிறார்கள். இப்பாடல்கள், 1500 ஆண்டுகளுக்கு முந்தைய சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் பாடுகின்றன.

காஹா சத்தசஈ

தெரிந்தெடுக்கப்பட்ட பிராகிருத மொழிக் கவிதைகள்

அறிமுகமும் மொழிபெயர்ப்பும்

மொழியாக்கம்: சுந்தர் காளி, பரிமளம் சுந்தர்

அன்னம் பதிப்பகம்

விலை: ரூ.100,  94431 59371

 

யதார்த்தம் பேசும் கதைகள்

சீராளன் ஜெயந்தனின் புதிய கதைகளில் கருணையின் குரலைக் கேட்க முடிகிறது. பெருநகரத்திலிருந்து பெரியப்பாவின் சாவுக்கு சொந்த ஊருக்குப் போகிற ஒருவனின் பார்வையில் விரிகிறது ‘வீடு திரும்புதல்’ கதை. ஞாபகங்கள் மனதுக்குள் கோடு கிழிக்க அவன் ஊருக்குள் நடந்துபோகிறான். கிராமத்து மரண நிகழ்வுகளைப் படம் பிடிக்கும் கதை இது. பெரியப்பாவின் இறுதி நிகழ்வு முடிந்து ஊருக்குப் புறப்படும்போது நண்பன் சுப்ரமணியின் அம்மா இறந்துபோன தகவல் வருகிறது. அந்த சாவுக்கும் இருந்துவிட்டுப் போக மனம் சொன்னாலும் பிழைப்பு அவனை உடனடியாக மீண்டும் நகரத்துக்குத் திரும்ப வைக்கிறது. ஒவ்வொரு கதைகளிலும் உணர்வுகளின் வெளிச்சம் மின்னுகின்றன.

- மானா பாஸ்கரன்

காயம், சீராளன் ஜெயந்தன்

யாவரும் பப்ளிஷர்ஸ்,

வேளச்சேரி, சென்னை-42.

விலை: ரூ110

 90424 71472

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x