Published : 29 Sep 2018 09:30 AM
Last Updated : 29 Sep 2018 09:30 AM

தொடுகறி: கிரா 96: 96 பக்க நாவல்!

இரா.இளங்குமரனாருக்கு சிலம்பொலியின் ‘இளங்கோ விருது’

சென்னை பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறை, தமிழ் இலக்கியத் துறை, சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை இணைந்து சிலப்பதிகாரப் பெருவிழாவைக் கடந்த திங்களன்று நடத்தின. சிலப்பதிகாரத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் செயல்பட்டுவரும் மூத்த தமிழறிஞருக்கான ‘இளங்கோ விருது’ இரா.இளங்குமரனாருக்கு வழங்கப்பட்டது. விழாவில் நீதிபதி பி.ஜெகதீசன், சிலம்பொலி செல்லப்பன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், பேராசிரியர் இ.மறைமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிரா 96: 96 பக்க நாவல்!

கிரா தனது 96-வது வயதை எட்டியிருப்பதை முன்னிட்டு 96 பக்க நாவல் எழுதியிருக்கிறார். இந்நாவல் அவரது கையெழுத்திலேயே வெளியாக உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. “96 வயதில் 96 பக்கத்தில் எழுத்தாளரின் கையெழுத்திலேயே நாவல் வெளியாவது இதுவே முதல் முறை” என்கிறார்கள் கிராவின் நண்பர்கள்.

காந்தியைக் கொண்டாடுவோம்

காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலமாக காந்தியின் ஒட்டுமொத்த எழுத்துகளையும் தரவிறக்கிக்கொள்ளலாம். காந்தி குறித்த ஆவணப்படங்களும் காணொலிகளாகப் பதிவேற்றப்பட்டுள்ளன. இணையதள முகவரி:

http://gandhi.gov.in/

கண்காணிப்பின் இருள்வெளி

ரோஹித் வெமூலாக்கள், கல்புர்க்கிகள், சங்கர்கள், வாழ்விழந்த மீனவர்கள், விவசாயிகள் என ஒவ்வொருவரின் வாதையின் ஓலங்களும் சூழலை நிறைத்திருக்கின்றன. இன்று மாலை 6.30 மணிக்கு அவர்களை நம் கண் முன் நிறுத்தவிருக்கிறார்கள் நிகழ்வெளி நடிகர்கள். இடம்: ஸ்பேசஸ், பெசன்ட் நகர், சென்னை.

தொகுப்பு: மு.முருகேஷ், செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x