Published : 15 Sep 2018 08:55 AM
Last Updated : 15 Sep 2018 08:55 AM

‘டான்ஸ் இந்தியா ஆசியா பசிபிக் - 2018’: சிங்கப்பூரில் ஒரு நடனக் கொண்டாட்டம்

சிங்கப்பூர் தேசிய கலை கவுன் சில் மற்றும் எஸ்பிளனேடு தியேட்டர்ஸ் ஆதரவுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த ‘அப்சரஸ் ஆர்ட்ஸ்’ நடனப் பயிற்சிப் பள்ளி, இங்கிலாந்தைச் சேர்ந்த ‘மிலப்ஃபெஸ்ட்’ அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘டான்ஸ் இந்தியா ஆசியா பசிபிக்’ நடனத் திருவிழாவை நடத்தி வருகின்றன. 7-வது ஆண்டு நடனத் திருவிழா சிங்கப்பூரில் ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கி கடந்த 8-ம் தேதி நிறைவடைந்தது.

இந்திய பாரம்பரிய நடனங் களான பரதநாட்டியம், கதக், ஒடிசி போன்றவற்றை சிறந்த குருமார்கள், நடனக் கலைஞர்களைக் கொண்டு கற்றுத் தருவதற்காக மிலப்ஃபெஸ்ட் அமைப்பின் செயல் இயக்குநர் பிரசாந்த் நாயக் ‘டான்ஸ் இந்தியா’ திட்டத்தை தொடங்கினார். இதற்காக, அங் கேயே தங்கி பயிற்சி பெறும் ரெசிடென்சியல் பள்ளி, இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக சிங்கப்பூரிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. லிவர்பூல் மற்றும் சிங்கப்பூர் பயிற்சிப் பள்ளிகளில் 20 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் நடனப் பயிற்சி பெறுகிறார்கள்.

சிங்கப்பூரில் தற்போது நடந்த 7-வது ஆண்டு ‘டான்ஸ் இந்தியா ஆசியா பசிபிக்’ நடன நிகழ்ச்சியில், இந்தியாவின் பிரபல நடன குருமார்களான பிரியதர்ஷினி கோவிந்த், ரமா வைத்தியநாதன், வசந்தாலட்சுமி நரசிம்மாச்சாரி, பிரகா பிஸல், லட்சுமி விஸ்வநாதன், லாவண்யா ஆனந்த், அஞ்சனா ஆனந்த், மோகன் பிரியன், இளம் கதக் தம்பதிகளான அபிமன்யு லால் - விதா லால், ஆஸ்திரேலியாவில் இருந்து எம்.ரவிச்சந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரபல நடனக் கலைஞர்களின் நடனப் பயிற்சிகள் மட்டுமல்லாது, 14 சிறப்புரை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. நடன இயக்கம் (கோரியோகிராஃபி), சிருங்கார ரசம், சிங்கப்பூரில் நடனக் கலை வரலாறு, கதகளி, பத வர்ணம் உள்ளிட்டவை பற்றியும் அவர்கள் உரையாற்றினர். கலாமண்டலம் பிஜு, வி.பாலகிருஷ்ணா உள்ளிட்டோரும் உரை நிகழ்த்தினர். வளரும் கலைஞர்கள், மாணவ, மாணவிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

பரதநாட்டியக் கலைஞர் மட்டுமல்லாமல் நடிகை, அரசியல் பிரமுகர், கோல்ஃப் விளையாட்டு வீராங்கனை என்று பன்முகத் திறன் கொண்ட வைஜெயந்தி மாலாவும் பங்கேற்றார். அவரை நேரில் சந்தித்து கலந்துரையாடியதில், இளைஞர்கள் மட்டுமல்லாமல் வயதானவர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ’ என்ற பாடல் வரிக்கு பல கலைஞர்கள் பல்வேறு விதமாக அபிநயம் பிடித்துக் காட்டியது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பரதநாட்டியம் மற்றும் கதக் அடிப்படை (ஃபவுண்டேஷன்) பயிற்சிகள், பரதநாட்டியம், கதக், ஒடிசி, மோகினியாட்டம், குச்சிப்புடி ஆகியவற்றில் ‘அபிநயா’ பயிற்சி (அட்வான்ஸ்டு நிலை), டான்ஸ் இந்தியா ஆசியா பசிபிக் ரெசிடென்சியல் பயிற்சி என 4 நடனப் பயிற்சிகள் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x