Published : 16 Sep 2018 11:50 AM
Last Updated : 16 Sep 2018 11:50 AM

கி.ரா.- நம் காலத்தின் பெருமிதம்

தமிழ் இலக்கிய உலகில் ஓர் அபூர்வ ஆளுமை கி.ராஜநாராயணன். தனது 96 வயதிலும் வாசிப்பும் எழுத்துமாய்த் தமிழ்ச் சமூகத்தில் தீராநதியாய் ஓடிக்கொண்டிருக்கிறார். வட்டார மொழியில் ‘தத்தக்கா புத்தக்கா’ நடைபோட்ட எம் போன்றோரையெல்லாம் கைப்பிடித்துக் கூட்டிப்போய் இதுதான் உங்கள் சமவெளி என்று நிறுத்தியவர்.

“கல்வி பல கற்றும் பெண்புத்தி பின்புத்தி. கோடி ஒரு வெள்ளை, குமரி ஒருபிள்ளை, பெண்டாட்டி செத்தா புதுமாப்பிள்ளை” எனச் சொலவடைகள், “மொழிபெயர்ப்பு ஒரு மனைவியைப் போல; அழகாக இருந்தால் விசுவாசமாக இருக்க மாட்டாள், விசுவாசமாக இருந்தால் அழகாய் இருக்க மாட்டாள்” எனும் பிரெஞ்சு வாசகம், “கன்னிகழியாப் பெண்கள், டைனோசர் காலத்திலேயே இல்லாமல் போய்விட்டார்கள்” என்கிறார் ஒரு நடிகர். இப்படி பெண்கள் பற்றிய கடந்த காலத்தின் கருத்தோட்டங்களும் நவீன காலத்தில் உலவும் சிந்தனைப் போக்குகளும் கண்ணெதிர் சாட்சியங்களாக உலவுகின்றன. பெண்ணை அடிமையாக நினைப்பதில் சமகாலத்தவர்களும் சளைத்தவர்களில்லை.

கி.ரா. தனது கதைகளில் ஆரம்பம்தொட்டே பெண்களைப் பெரும் மதிப்புடனேயே சித்தரித்திருக்கிறார். ‘மகாலட்சுமி’ கதையில் வருகிற மோகி என்ற குணவதியின் மேன்மையை அங்கீகரித்து, அவளை மனுஷியாய் நடத்துவதில் ஆண்மை அழகுகொள்கிறது, ஆண் அர்த்தம் பெறுகிறான் என உணரச்செய்கிறார் கி.ரா. இந்தச் சூக்குமத்தை சமத்காரமான மொழியில் அகப்படுத்தி கூட்டிச்செல்கிறார். தன் மனைவியைப் பார்த்து, “வாடி, போடி” என்று முரட்டுத்தனமாக அழைக்காமல், “இங்கே வாடா, சாப்பிடுடா” என மோகி என்ற மோகினியை ஆண்பாலாக்கித் தாங்கித் தடுக்கி அரவணைத்து அந்தப் பெண் இதமாக இருக்கும்படி செய்கிறான் கணவன்.

கிணறு வெட்டிக்கொள்ள அரசு கடன் தரும் என்ற பத்திரிகை அறிவிப்போடு தொடங்குகிறது ‘மாயமான்’ (1958) கதை. அப்பாவு என்னும் விவசாயிக்குள் கிணறு வெட்டும் ஆசை துளிர்க்கிறது. தொடர்ந்து விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து வட்டித் தொழில் செய்யும் அரசாங்கத்தின் நுட்பமான உத்திகளைக் கதையில் விரிவாகப் பேசுகிறார் கி.ரா. அரசாங்கம் அறிவிக்கும் நலவாழ்வுத் திட்டங்களுள் இருக்கும் போலிமைகளை, ஊழல்களை, மக்களுக்கு எதிராகச் செயல்படும் விதங்களை இந்தக் கதை சுட்டுகிறது. இப்படி ஓடியாடி, கிணறு வெட்டி முடித்த பின் இருப்பதையும் இழந்த அந்த விவசாயி அப்பாவு பஞ்சம் பிழைக்க வடக்காமல் புறப்படுகிறார். அரசு அறிவிப்பு வெளியான தாளைச் சுக்குநூறாகக் கிழித்தெறிகிறார். அரசாங்கத்தையே கிழிப்பதுபோல நமக்குள் காட்சி விரிகிறது.

விவசாயமும் விவசாயியும் இல்லாத ஒரு நாசகார உலகு தோன்றியுள்ளது என்பதை கி.ரா. வேதனைமுட்டப் பார்க்கிறார். அறுபதுகளுக்கு முன்னா் எழுதப்பட்ட அந்த வேளாண் எழுத்து தலைசாயாமல் இன்றும் நின்று நிமிர்ந்து பேசுகிறது. “கிஸ்தி கட்ட வக்கில்லையா” எனத் தலையாரி கதவைப் பெயா்த்துத் தூக்கிக்கொண்டுபோய் ஊா்ச் சாவடியில் வைத்துவிடுகிறான். கதவு இல்லாத வீட்டில் பனிக்காற்று நுழைந்து கைக்குழந்தையைப் பலி கேட்டுவிடுகிறது. கதவில்லாததால் தெருநாய்கள் கஞ்சிப் பானையில் வாய்வைத்து வயிறுமுட்டக் கஞ்சி நக்கி அசைந்துபோகின்றன. ஒரு கதவை வைத்து ஆயிரம் வாசல்களைத் திறந்துவிடுகிறார் கி.ரா.

அப்போது எழுத்துலகம் சந்தித்திராத மனிதர்களைத் தனது படைப்புகளில் கதாபாத்திரங்களாக உலவவிட்டார். வாய் பேச இயலாதவர்கள், திருநங்கை, பூவாசமே கண்டிராத பேரக்காள், பிள்ளைகளால் கைகழுவப்பட்டு ராமேசுவரத்தில் தஞ்சமடைந்த ‘கறிவேப்பிலைகள்’ எனப் பேசப்படாத மனிதர்களுக்காகக் குரல்கொடுத்தார்.

வாழ்வில் மனிதர்களை நேசித்தலுக்கான சான்று கி.ரா.வின் எழுத்தில் வாழும் இந்த மனிதர்கள். சாதி கடந்து, மதம் தாண்டி மனித நேசிப்புக்காக நிற்பவர் என்பதற்கான சான்று தன் ‘பேத்தி அம்சாவுக்கு’ சாதி கடந்து, மதம் தாண்டி அவர் நடத்தி வைத்த திருமணம். கருத்து நிலைக்கும் செயல்பாட்டு நிலைக்கும் மேடு பள்ளம் இல்லாது தனது 95-வது பிறந்தநாள் விழா மேடையில் அதை நிகழ்த்தினார் என்பது நம் காலத்தின் பெருமிதம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x