Last Updated : 30 Sep, 2018 01:52 AM

 

Published : 30 Sep 2018 01:52 AM
Last Updated : 30 Sep 2018 01:52 AM

வாசிப்பில்தான் புத்தகத்தின் வெற்றி முழுமையடைகிறது!- மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி பேட்டி

மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி பேட்டிவாசிப்பிலிருந்து தான் சிறந்ததாகக் கருதும் படைப்புகளை மொழிபெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் அபூர்வமான மொழிபெயர்ப்பாளர்களுள் ஜி.குப்புசாமியும் ஒருவர். ஒரு படைப்பை மொழிபெயர்க்க வேண்டுமென்றால் அந்தப் படைப்பாளியின் எல்லா படைப்புகளையும் வாசித்திருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பவர். அதனாலேயே, இவரின் மொழிபெயர்ப்புகள் வாசகர்களின் நம்பிக்கைக்குரிய தேர்வாக இருந்துகொண்டிருக்கிறது. அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று முழு நேர மொழிபெயர்ப்பாளராக ஆகியிருக்கும் வேளையில் அவருடன் உரையாடியதிலிருந்து...

கிட்டதட்ட 30 வருட அரசுப் பணி. இப்போது என்ன தோன்றுகிறது?

ஒவ்வொருநாளும் கரடுமுரடான சாலைகளில் ஓட்டை பஸ்களில் குலுங்கிக் குலுங்கி 130 கி.மீ. பயணிப்பதிலிருந்து விடுதலை. தினமும் அதிகாலை அலாரம் ஒலிக்க எழுந்திருப்பதிலிருந்து விடுதலை. ஆடிட் செல்லும் இடங்களில் சில விஷயங்களுக்காக எரிச்சலடைந்து ரத்த அழுத்தத்தை அதிகரித்துக்கொள்வதிலிருந்து விடுதலை. முகாம் செல்லும் இடங்களில் என் அபிமான ஃபில்டர் காபி கிடைக்காமல் வேறு வழியின்றி அசட்டுத்தனமான தேநீர்களைக் குடிக்க நேர்வதிலிருந்து விடுதலை. ஆனால், நான் இழக்கவிருக்கும் பல விஷயங்கள் உண்டு. அந்த நல்ல விஷயங்களை இழக்கப்போவது குறித்து எந்த வருத்தமும் இல்லை என்று திரும்பத் திரும்ப எனக்கு நானே சொல்லிக்கொண்டு என்னையே ஏமாற்றிக்கொள்ள முயல்கிறேன்.

பணி நிறைவு பாராட்டு விழாவில் நேர்மையானவர், லஞ்சம் வாங்காதவர் என சக ஊழியர்கள் புகழ்ந்தபோது நீங்கள் சங்கடமாக உணர்ந்தது ஏன்?

லஞ்சம் வாங்காதவர், நேர்மையானவர் என என்னை யாராவது குறிப்பிடும்போது அவமானப்படுகிறேன். இதுவரை இவர் ஒரு கொலைகூட செய்யாதவர் என யாரையாவது நீங்கள் சுட்டிக்காட்டிச் சொல்வதுண்டா? நேர்மையாக இருப்பது என்பது அடிப்படையான ஒரு விஷயம். சிறப்புத் தகுதி அல்ல. மேலும், நேர்மையாகப் பணியாற்றுவது என்பது உங்கள் சுயமரியாதை சார்ந்த விஷயம். அறம், தர்மம் என்ற கோட்பாடு வழியாக நான் நேர்மையைப் பார்க்கவில்லை. என்னுடைய பணிக்காலத்தில் நான் நிறைவேற்றிய கடமைகள் குறித்து எனக்கு எந்தவொரு குற்றவுணர்வும் இல்லையென்பதுதான் நிம்மதியளிக்கும் விஷயம்.

ஓரான் பாமுக்போல இனி ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் எழுத்தும் வாசிப்பும் எனத் திட்டமிட்டிருக்கிறீர்களா?

பாமுக் ஒரு நேர்காணலில், “ஒரு குமாஸ்தாவைப் போல பணியாற்றுகிறேன்” என்றார். அவருடைய மொழிபெயர்ப்பாளனான நானும் ஓவர்டைம் பார்ப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன். எழுத்தைவிட இந்த ஓய்வுகாலத்தில் அதிக நேரம் வாசிப்புக்குச் செலவிட வேண்டுமென்பதுதான் ஆசை. இவ்வளவு நாட்களாக பயணம் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த இடங்கள் ஒவ்வொன்றுக்கும் வரிசையாகச் செல்லவும் திட்டமிட்டிருக்கிறேன்.

பல வருட உழைப்பில் ஒரு மொழிபெயர்ப்பை சாத்தியமாக்குகிறீர்கள். ஆனால், மிகக் குறைந்த அளவில் வாசிக்கப்படும் சூழல்தான் இங்கே இருக்கிறது. தொடர்ந்து உற்சாகத்தோடு இயங்க எது உந்துதல் தருகிறது?

வாசகர்கள் வாசிப்பதை வைத்து நான் மகிழ்ச்சியோ சோர்வோ அடைவதில்லை. மூலப் படைப்பாளியின் ஆன்மாவை என்னுள் முழுமையாக இறக்கிவைத்துக்கொண்டு என் மூலமாகத் தமிழ் மொழியில் அந்தப் படைப்பாளியை எழுத வைப்பதும் அதற்கு என்னை ஒரு மீடியமாக ஒப்புக்கொடுப்பதும்தான் மொழிபெயர்ப்பாளனாக எனக்குத் திருப்தியளிக்கும் விஷயம். என்னைத் தொடர்ந்து ஊக்குவிப்பது நான் வாசிக்கும் அபாரமான படைப்புகள்தானே தவிர, வாசகர்களின் எதிர்வினை அல்ல. தவிரவும், தமிழின் எந்தவொரு படைப்பாளியைவிடவும் தமிழ் அறிஞர்களைவிடவும் தமிழ் அரசியல்வாதிகளைவிடவும் தமிழின் பலம், வீச்சு எவ்வளவு மகத்துவமானது, ஆழமானது என்பது ஒரு மொழிபெயர்ப்பாளனுக்குத்தான் தெரியும் என்று நம்புகிறேன். உலகின் எந்த மகத்தான படைப்பையும் அதன் சாரம் குறையாமல் மொழிபெயர்ப்பதற்குத் தமிழ் இடம் கொடுக்கும். ஆனால், அது சவால் நிறைந்தது. இந்த சவால்தான் என்னை இயக்கிக்கொண்டிருக்கும் ஆதார சக்தி.

சமகாலத்தில், மொழிபெயர்ப்பு நாவல்கள் வெளியாகும் அளவுக்குத் தமிழில் நாவல்கள் எழுதப்படுவதில்லை. பெரும்பாலான நாவல் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. நாவலை நேசிக்கும் ஒரு வாசகராக இதற்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்?

எண்ணிக்கை அளவில் அதிகம் இல்லையென்றாலும் சில முக்கியமான நாவல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. தேவகாந்தன், பா.வெங்கடேசன், தேவிபாரதி, சு.வேணுகோபால் நாவல்கள் மிகவும் வெற்றியடைந்தவைதான். உமா மகேஸ்வரியின் ‘அஞ்சாங்கல் காலம்’ இன்னும் சற்று இறுக்கமாக எடிட் செய்யப்பட்டிருந்தால் தமிழில் வந்த பெண்களின் உலகத்தை மிகச் சிறப்பாக சித்தரித்த நாவலாக இருந்திருக்கும்.

உங்களைப் பொறுத்தவரை, ஒரு புத்தகத்தின் வெற்றியை எப்படி அளவிடுவீர்கள்?

பாமுக்கின் ‘வெண்ணிறக் கோட்டை’ அவருடைய நாவல்களில் முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால், ஒவ்வொரு வாசகருக்கும் அவரது வேறுவேறு நாவல்கள் பிடித்திருக்கின்றன. ஒரு புத்தகத்தின் வெற்றியைப் பொதுமைப்படுத்த முடியாது. வாசகரின் வாசிப்பில்தான் அந்த வெற்றி முழுமையடைகிறது.

டால்ஸ்டாய்/தஸ்தாயேவ்ஸ்கி?

முப்பது வயதுக்கு முன்பு டால்ஸ்டாய், அதற்குப் பிறகு தஸ்தாயேவ்ஸ்கி.

ரேமண்ட் கார்வெர்/ஹாருகி முரகாமி?

கார்வெர்.

அருந்ததி ராய்/ஓரான் பாமுக்?

ஒப்பீடே தவறு. இரண்டு பேரும் வெவ்வேறானவர்கள்.

குடும்பம்/இலக்கியம்?

எந்தவொன்றுக்காகவும் எதையும் விட்டுத்தர முடியாது. இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்தவை.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x