Published : 09 Sep 2018 09:43 am

Updated : 09 Sep 2018 09:43 am

 

Published : 09 Sep 2018 09:43 AM
Last Updated : 09 Sep 2018 09:43 AM

நூலருமை காட்டிய நுண்ணறிஞன்!

சங்கத் தமிழ், சைவத் திருமுறைகள், சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் என்று பழந்தமிழ் இலக்கியத்துக்கும், தமிழர் மெய்யியலுக்கும் தனது உரை விளக்கத்தால் புத்துயிரூட்டியவர் ஔவை துரைசாமி. தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள ஒளவையார் குப்பம் எனும் சிற்றுாரில் பிறந்தவர். அவரின் பாட்டனார் சுப்பராயரும்கூட தமிழ்ப் புலமைமிக்கவர். தமிழவேள் உமாமகேசுவரன், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலனார் ஆகியோரிடம் சங்க இலக்கியங்களும் இலக்கணமும் கற்றவர் ஔவை துரைசாமி. சைவ சமய மெய்யியல் கற்பதிலும் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார்.

ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் மறைவுக்குப் பிறகு, அவர் முன்னரே விரும்பிக் கேட்டதை நிறைவேற்றும் விதமாக மணிமேகலையிலுள்ள சமயப் பகுதிகளுக்கும், தர்க்கப் பகுதிகளுக்கும் நுட்பமான உரை விளக்கம் எழுதினார் ஔவை துரைசாமி. ‘சைவ இலக்கிய வரலாறு’ எழுதியதைத் தொடர்ந்து, ஐங்குறுநூறுக்குப் பேருரை எழுதினார். ‘ஞானாமிர்தம்’ எனும் சைவ சமய நூலுக்கும் விளக்கவுரை எழுதினார். இவரின் தமிழ்ப் பணிக்கு மகுடமாகத் திகழ்வது புறநானூறுக்கு இவர் எழுதிய உரைதான். பிறகு நற்றிணைக்கும், பதிற்றுப்பத்துக்கும் உரை எழுதினார். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய முப்பெரும் காவியங்கள் குறித்த இவரது ஆராய்ச்சிகள் முக்கியமானவை. மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பிறகு, நா.மகாலிங்கம் வேண்டியபடி திருவருட்பா முழுமைக்கும் உரை விளக்கம் எழுதினார்.


உரை எழுதுவதில் சிறந்து விளங்கிய ஔவை துரைசாமியின் புலமைக்காக அவரை ‘உரைவேந்தர்’ என்று தமிழுலகம் போற்றியது. யசோதர காவியத்துக்கு இவர் எழுதிய உரை பல்வேறு அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு வித்துவான் பட்டம் வழங்கியது. இவரின் உரைத் திறமையையும், தமிழ்ப் புலமையையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமது தமிழ்த் துறையில் இணைத்துக்கொண்டது. ஔவை துரைசாமி குறித்து, ‘நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்’ என்று பாடல் எழுதியிருக்கிறார் பாரதிதாசன்.

ஒருமுறை, ‘ஸ்க்ரூ-ட்ரைவர்’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிய ஔவை துரைசாமி முற்படும்போது, ‘திருகாணி சுற்றுநர்’, ‘திருகாணி ஓட்டுநர்’, ‘திருகு சுழற்றுநர்’ என வெவ்வேறு சொற்கள் மனதில் தோன்றினாலும் சரியான சொல் கிடைக்காமல் இடர்பட்டுக்கொண்டிருந்தார். ‘திருப்பான்’ என்பது சரியாக இருக்கும் என முடிவுக்கு வந்திருந்த வேளையில், வீட்டில் மரவேலை செய்துகொண்டிருந்த தச்சு ஆசாரி தன் உதவியாளரிடம், “திருப்புளியை எடுத்துப்போடு” என்றிருக்கிறார். “சாதாரண உளியிலிருந்து வேறுபட்டிருப்பதாலும், திருப்புகிற உளி என்பதாலும் திருப்புளி” என்று அவர் சொன்னதைக் கேட்டு, “என்னுடைய பேராசிரியத் தமிழ் சாதிக்கச் சிரமப்பட்டுக்கொண்டிருந்ததை அந்தத் தச்சரின் தமிழ் சாதித்தது” என்றாராம்.

“சொல்லுருவாக்கத்தில் ஈடுபடும் முன், அந்தச் சொல் எந்தத் துறையில் புழக்கத்தில் இருக்கிறது என்று பார்த்து அவர்களைத் தேடிச்செல்வதை முதல் கடமையாகக் கொள்ளுங்கள்” என்பதைப் பல்வேறு சந்தர்ப்பத்தில் சொல்லியிருக்கிறார் ஔவை துரைசாமி. இந்த வரி, இன்றும் எனது மொழிபெயர்ப்புப் பணியில் கலங்கரைவிளக்கமாக ஒளிர்கிறது.

- ஒளவை அருள், ஔவை துரைசாமியின் பேரன்,

தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர்.

செப்டம்பர் 5: ஔவை துரைசாமியின் பிறந்தநாள்


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x