

பாளையங்கோட்டை மேடை காவல் நிலையம் அருகிலுள்ள வாய்க்கால்பாலம் பக்கத்தில்தான் எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாள் இருந்தார். அந்தக் காலத்தில் கல்கியில் ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற தொடர் நாவலை எழுதிப் புகழ்பெற்றவர். காந்தியவாதி. நாவலுமே அப்படித்தான். தீவிரவாதியாக இருந்த ரங்கமணி காந்தியக் கொள்கைகளால் கடைசியில் மனமாற்றம் அடைவதாக முடித்திருப்பார். நாவல் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. சுதந்திரப் போராட்ட வரலாறு பின்னிப்பிணைந்தே வரும். இறுதியில், கோட்சேயால் சுடப்பட்ட காந்தி கீழே சரிந்து விழும்போது கதாநாயகன் ரெங்கமணி தாங்கிப்பிடிப்பதுபோல முடியும் (ஹே ராம் நினைவுக்கு வருகிறதா?). நெல்லை மாவட்டம் சார்ந்த பல தகவல்கள் இந்த நாவலில் உள்ளன. வெள்ளைக்காரர்கள் வாழ்ந்த இடங்கள், ராணுவம் மையம் கொண்டிருந்த இடங்கள் என பல விஷயங்களை எழுதியிருப்பார். ‘போராட்டங்கள்’, ‘கேட்டதெல்லாம் போதும்’, ‘எண்ணங்கள் மாறலாம்’, ‘நம்பிக்கைகள்’, ‘திருடர்கள்’, ‘தூங்கும் எரிமலைகள்’, ‘மருக்கொழுந்து மங்கை’, ‘உணர்வுகள் உறங்குவதில்லை’, ‘மயக்கங்கள்’ ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். 40-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். இவரைப் பலமுறை சந்தித்துப் பேச முயன்றிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் கூட்டம் அவரைச் சூழ்ந்திருக்கும்.“தம்பி.. பொறவு வாங்களேன்” என்பார். கடைசிவரை மனம்விட்டுப் பேச வாய்ப்பில்லாமலே போய்விட்டது.
- இரா.நாறும்பூநாதன்