Published : 01 Sep 2018 10:32 AM
Last Updated : 01 Sep 2018 10:32 AM

கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள்

கட்டுரை எழுபது

தொல்லியல் அறிஞர் வீரராகவன் எழுபதாம் வயது நிறைவையொட்டி வெளிவந்திருக்கும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ள இத்தொகுப்பில் ‘தொன்மம்’ என்ற தலைப்பின்கீழ் சமகால வரலாற்று ஆய்வாளர்களின் 37 ஆய்வுக் கட்டுரைகளும் ‘அமரம்’ என்ற தலைப்பின்கீழ் 7 ஆய்வுக் கட்டுரைகளும் ‘சுற்றம்’ என்ற தலைப்பின்கீழ் நண்பர்களின் 28 ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. வீரராகவன் படியெடுத்த கல்வெட்டுகள், கண்டுபிடித்த தொல்லியல் சான்றுகள் பற்றிய பதிவுகளும் உண்டு. வரலாற்று ஆர்வலர்கள் தவறவிடக் கூடாத கட்டுரைத் தொகுப்பு இது.

ஸ்ரீகுணமிலி

பதிப்பாசிரியர்:

சுகவன முருகன்

மங்கையர்க்கரசி பதிப்பகம்

விலை: ரூ.750

 9842647101

ஆய்வுகள்.. அனுபவங்கள்..

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா.வின் 95-வது பிறந்தநாளையொட்டி ‘கி.ரா. என்னும் மானுடம்’, ‘கி.ரா.வும் புனைகதைகளும்’, ‘கோட்பாட்டு நோக்கு ஆய்வு’ என்ற மூன்று கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. வாசக அனுபவங்கள், இலக்கிய நண்பர்களின் மதிப்பீடுகள், ஆய்வுக் கட்டுரைகள் என பல்வேறு கோணங்களில் கி.ரா.வை அணுகும் 82 கட்டுரைகளின் பெருந்தொகுப்பு. கி.ரா.வின் வாசகர்களுக்கு இக்கட்டுரைத் தொகுப்புகள் புதிய வெளிச்சங்களைத் தரக்கூடும். புதுப் புது அர்த்தங்களையும்கூட.

கிரா 95: மூன்று தொகுப்புகள்

தொகுப்பாளர்கள்: பா.செயப்பிரகாசம்,

க.பஞ்சாங்கம்,

சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்

அன்னம் பதிப்பகம்

மொத்த விலை: ரூ.700

 9443159371

எழுச்சியின் தொடக்கம்

மனித உரிமைச் செயல்பாட்டாளரும் அரசியல் விமர்சகருமான ஆனந்த் டெல்டும்ப்டே சமீபத்தில் எழுதி பெரும் கவனத்தைப் பெற்ற நூலின் மொழியாக்கம். தலித் இயக்கத்தின் தொடக்கமாகக் கருதப்படும் 1927-ம் ஆண்டு மஹத் மாநாடுகளை, அதற்கு முன்பு நடந்த உரிமைப் போராட்டங்கள், உலகளவிலான எழுச்சிகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அதன் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கும் பகுத்தாய்வு. ஆவணக் காப்பகத் தரவுகள், இதுவரை மராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்படாத புத்தகங்கள் என்று மஹத் உரிமைப் போராட்டத்தின் முழுமையான சித்தரிப்பு.

மஹத்: முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்

ஆனந்த் டெல்டும்ப்டே

தமிழில்: கமலாலயன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விலை: ரூ.550

 044 2625 1968

சிங்கரின் கதைகள்

முப்பது ஆண்டுகளாக ‘நவீன விருட்சம்’ இலக்கிய இதழை நடத்திவருபவர் அழகியசிங்கர். கடந்த நாற்பதாண்டுகளில் அவர் எழுதிய 64 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம், ஐந்து சின்னஞ்சிறுகதைகள் ஆகியவை முழுத்தொகுப்பாக வெளிவந்துள்ளன. அழகிய சிங்கரின் பெரும்பாலான கதைகள் ‘நவீன விருட்சம்’ இதழில்தான் பிரசுரமாகியிருக்கின்றன. எண்ணியதை எண்ணியவாறே எழுதும் வாய்ப்பு அவருக்கு. இலக்கிய இசங்களுக்கு இடையே யுத்தங்கள் நடந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனது குருவான அசோகமித்திரன் பாணியில் உள்ளடங்கிய குரலில் கதைகளை எழுதிக்குவித்திருக்கிறார் அழகியசிங்கர்.

அழகியசிங்கர் சிறுகதைகள்

முழுத் தொகுப்பு,

விருட்சம் வெளியீடு,  விலை: ரூ.400

 044 24710610

பரிணாமத்தின் வரலாறு

யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’, மனித இனத்தின் சமூக, அரசியல், பொருளாதார பரிணாம வரலாற்றைப் பேசும் புத்தகம். பத்து லட்சம் பிரதிகள், முப்பது மொழிகளில் மொழியாக்கம் என்று உலகளவில் அதிகம் விற்பனையான நூல். நெருப்பு, மொழி, வேளாண்மை என்று தொடர்ந்துவந்த மனித அறிவின் பரிணாமத்தில் அடுத்தடுத்து வந்த பணமும் முதலாளித்துவமும் அறிவியலும் இன்றைக்கு மனிதர்களை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பதை வரலாற்று ஆதாரங்களோடு சுவைபடப் பேசுகிறது.

சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

யுவால் நோவா ஹராரி

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்

விலை: ரூ.499

 9819459857

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x