Published : 15 Sep 2018 09:19 am

Updated : 15 Sep 2018 11:04 am

 

Published : 15 Sep 2018 09:19 AM
Last Updated : 15 Sep 2018 11:04 AM

பாராட்டுப் பெறவா பாட்டு எழுதினான் பாரதி..?

இந்தியச் சமூகம், வெற்று சடங்குகளில் மூழ்கிக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. பின்பற்ற வேண்டாம்; பின்பாட்டுப் பாடினால் போதும் என்கிற அளவில், பிறந்த நாள், நினைவுநாள் நிகழ்ச்சிகளைக் குறுக்கிவிட்டோம்.

மேலை நாட்டுப் புரட்சியாளர்களிடம் இருந்து பெருமளவில் மாறுபட்டவர்கள் கீழைநாட்டுச் சிந்தனையாளர்கள்.


ஒரே சமயத்தில், பல்வேறு களங்களில், வெவ்வேறு தளங்களில் இயங்கிய இவர்கள், அரசியல் விடுதலைக்காக மட்டுமின்றி, தனி மனித உயர்வையும் முன் நிறுத்தியவர்கள்.

இந்தியாவிலும் இப்படித்தான். மகாத்மா காந்தி, வினோ பாவே உள்ளிட்ட தலைவர்கள் தொடங்கி, ரவீந்திரநாத் தாகூர், மகாகவி பாரதி போன்ற கவிஞர்கள் வரை, அத்தனை பேருமே, மிகப் பெரிய ஆளுமை கொண்டு இருந்தார்கள். அந்நிய ஆட்சியின் கீழ் அல்லாமல், சுதந்திர இந்தியாவில் பிறந்து இருந்தாலும், இதே அளவு சிறப்பு பெற்று இருப்பார்கள்.

ஆனால், இவர்களைப் பற்றிய சினிமாத்தனமான சித்தரிப்புகளை வளர்த்து விட்டு, கதாநாயக பிம்பம் உருவாக்குவதில் காட்டுகிற அக்கறையை, அவர்களின் கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்வதில் தவறிவிட்டோம்.

எட்ட முடியாத உயரத்தில் வைத்து ஆராதிக்கிற மனநிலை காரணமாக, நமது அன்றாட வாழ்க்கையில் இருந்து, காந்தியையும் பாரதியையும் வெகுவாக அந்நியப்படுத்தி விட்டோம்.

ஆட்சியில் இருந்த ஆதிக்கவாதிகளை விடவும், தனி மனிதர்களை நோக்கி பாரதி எழுப்பிய கேள்விகள்தாம் மிக அதிகம்.

மகாகவி பாரதியின் பாடல்கள், அமரத்துவம் பெற்றன; உத்வேகம் ஊட்டுவன; ஊருக்கு நல்லது சொல்வன; அனைத்துக்கும் மேலாக, சுயமாய் சிந்தித்து, சொந்தமாய் உழைத்து, உயர வழி வகுப்பன.

ஒவ்வொருவரும், ஒரு முழு மனிதனாக பரிணமிக்க வேண்டும். பாரதியின் படைப்புகள் முழுவதிலும் இது, அடிநாதமாகவே ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் பெரும்பாலான சமயங்களில், சுதந்திரப் போராட்டத்துடன் இணைத்து, ஏறத்தாழ ஓர் அரசியல் கவிஞனாக மட்டுமே முன்நிறுத்துகிற போக்கு, விரவிக் கிடக்கிறது.

நமது தேசிய கீதத்துக்கு இணையாக, ‘where is the mind without fear' பரவலாகச் சென்று சேர்ந்து இருக்கிறது. தாகூரின் பரந்துபட்ட கவிதா விலாசம் வெளியில் சொல்லப்பட்ட அளவுக்கு, பாரதியின் ‘பிற முகங்கள்', அதிகம் கொண்டு செல்லப்படவில்லை. தேசம், மொழி, சமூகம் ஆகியன தாண்டி, தனி மனித உணர்வுகளை, நுண்ணிய வாழ்வியல் கருத்துகளைத் தாங்கிய பாரதியின் அற்புதமான வரிகள், வாசகங்கள், பலரின் கண்களுக்குப் படுவதே இல்லை.

"நுனியளவு செல்" - இலக்கு நோக்கிப் பயணிக்கும் இளைஞர்களுக்கான யதார்த்த அறிவுரை; ஆலோசனை.

நாளுக்கு நாள், சிறிது சிறிதாக, படிப்படியாக, அங்குலம் அங்குலமாக முன்னேறச் சொல்கிற ஆக்கப்பூர்வமான செயல் திட்டம். யாராக இருந்தாலும், ஒட்டு மொத்தமாக ஒரே நாளில், தடாலடியாக எதையும் சாதித்து விட முடியாது. நீண்ட காலத் தொடர் வினைகளின் விளைவாகத்தான் நீடித்த நற்பயன் விளையும் என்கிற உண்மையை, இரு சொற்களில் அடக்கிவிட்ட அற்புதம், எத்தனை பேரைச் சென்று சேர்ந்து இருக்கிறது...?

"கிளைபல தாங்கேல்; சொல்வது தெளிந்து சொல்; தூற்றுதல் ஒழி; தோல்வியில் கலங்கேல்; நன்று கருது; நாளெலாம் வினை செய்; பணத்தினைப் பெருக்கு; வருவதை மகிழ்ந்துண்"... பாரதியின் படைப்புகளில், புதிய ஆத்திசூடி, வித்தியாசமாகத் தனித்து நிற்கிறது.

"காதல் போயின் சாதல்" மட்டுமே அல்ல பாரதி.

‘நீ பெண் குலத்தின் வெற்றியடி' என்கிற பிரகடனம் தருகிற பெருமிதம், எத்தனை இளைஞர்களால் தம் மனதுக்கு நெருக்கமான தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருக்கிறது...?

இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்.

செயல் இங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்; சீர்மிகவே

பயிலுநல் லன்பை இயல்பெனக் கொள்ளுதீர் பாரிலுள்ளீர்!'

இன்றைய நிலையில், எத்தனை பொருள் நிறைந்த வாசகம் இது...? எடுத்துச்சொல்ல யார் இருக்கிறார்..?

சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச் செத்த உடலாக்கு.

திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்.

நம்பினோர் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு.

நோயிலே படுப்பதென்னே? நோன்பிலே உயிர்ப்பதென்னே?

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ!

மேதையில்லா மானுடரே! மேலும் மேலும்

மேன்மேலும் புதிய காற்று எம்முள் வந்து

மேன்மேலும் புதிய உயிர் விளைத்தல் கண்டீர்.

தனி மனித வாழ்க்கையைத் தரமுள்ளதாக மாற்றுகிற தளராத முயற்சி. இதுவல்லவா பரவலாகச் சொல்லப்பட வேண்டும்...?

இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்றபோதிலும்....,

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும்..

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..!

கூட்டமாக முழக்கம் இட்டுக் கொண்டு செல்வதாகத்தானே நாம் அறிவோம்...? உண்மையில் இது, அச்சமின்மையை வலியுறுத்துகிற ஞானப் பாடல்.

பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்.

தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய்.

எது மாதிரியான அகிம்சைப் பாடல் வரிகள் இவை. எங்கேயாவது ஒலிக்கக் கேட்கிறோமா...?

‘கற்பனையூர்' என்றொரு பாடல். அதன் வரிகள் பாருங்கள் -

குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணம் காண் - அங்கு

கோல் பந்து யாவிற்கும் உயிருண்டாம்.

நினைந்து நினைந்து உள்ளம் மகிழ்வதற்கான ‘வேய்ங்குழல்' - ‘‘எங்கிருந்து வருகுவதோ? - ஒலி யாவர் செய்குவதோ? - அடி தோழி.’’ மனதை வருடும் இதமான மெல்லுணர்வின் மீது கட்டமைக்கப்பட்டது.

சாதாரணமாகக் கடைபிடிக்க முடிகிற, செயல் பாட்டுக்கு உரித்தான, எளிய வழிமுறைகளைச் சொல்லியதில், பாரதி அனைவருக்குமான வழிகாட்டி என்கிற உண்மையை ஆழமாகப் பதிவு செய்வது மட்டுமே, உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்து, ‘பாரதி இன்று இருந்தால்...?' போன்ற வறட்டுக் கற்பனைகளுக்கு வடிவம் தருகிற வெட்டிமன்றப் பேச்சுகளில் சிறை பிடிக்காமல், எப்போது நாம் பாரதியைச் சுதந்திரமாக உலவ விடப் போகிறோம்..?

பாரதியைப் பற்றிப் பேசிக் கேட்பதை விடவும், பாரதியைப் படித்து உணர்தலே பயன் தரும்.

‘‘பேசுவதில் பயனில்லை;

அனுபவத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம்''.

(சுயசரிதை)Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x