Published : 01 Sep 2018 10:25 am

Updated : 01 Sep 2018 10:25 am

 

Published : 01 Sep 2018 10:25 AM
Last Updated : 01 Sep 2018 10:25 AM

மதுரையில் கோலாகலம் 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் மதுரையில் நடத்தப்படும் புத்தகத் திருவிழா வெற்றிகரமாக 13-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆகஸ்ட் 31 முதல் நடக்கும் இந்தப் புத்தகக்காட்சியில், சிறந்த பதிப்பாளுமையான சக்தி வை. கோவிந்தனின் பங்களிப்புகளை நினைவுகூரும் விதமாக, கலை அரங்கத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 250-க்கும் மேற்பட்ட அரங்குகள். தமிழ்ப் புத்தகங்களுக்காக 157 அரங்குகளும், ஆங்கிலப் புத்தகங்களுக்காக 74 அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான புத்தகங்கள் காத்திருக்கின்றன, வாசகர்களே! அனுமதி இலவசம்.

நேற்று மாலை நடந்த தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையேற்றார். புத்தகக்காட்சியைத் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார். மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


எதுவரை?

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும். 10% கழிவில் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம்.

சிறப்பு நிகழ்ச்சிகள்

ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் இன்னிசை, தமிழிசை நிகழ்வுகள், மாணவர்களின் கலை-பல்சுவை-பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை புத்தகக்காட்சியில் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திருவள்ளுவர் சிலை, மதுரை புத்தகக்காட்சியிலும் நிறுவப்படவுள்ளது. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் இன்று மாலை திறந்துவைக்கிறார்.

‘தி இந்து’ அரங்கு: 60 E

புத்தகக்காட்சியில் வாசகர்களைப் பெருமகிழ்வுடன் வரவேற்கிறது ‘தி இந்து’ அரங்கு. அரங்கு எண்: 60 E. சுப்பையா பாண்டியனின் ‘அறிவியல் ஆயிரம்’, ந.வினோத் குமாரின் ‘வான் மண் பெண்’, பாமயனின் ‘முன்னத்தி ஏர்’, கா.சு.வேலாயுதனின் ‘யானைகளின் வருகை’ போன்ற புதிய வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலின் ஐந்தாம் பதிப்பு வெளியாகியிருக்கிறது.

புதிய வெளியீடுகள்

சென்னை புத்தகக்காட்சிக்கு நிகராக இப்போது ஈரோடு, கோவை, மதுரை புத்தகக்காட்சிகளும் பிரம்மாண்டமாக உருவெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. இதையடுத்து, ஜனவரியில் மட்டுமே புதிய தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டிருந்த பதிப்பகங்கள், இப்போது ஈரோடு, கோவை, மதுரை புத்தகக்காட்சிகளுக்கும் புதிய வெளியீடுகளைக் கொண்டுவரத் தொடங்கியிருக்கின்றன. மதுரை புத்தகக்காட்சிக்காக மட்டுமே 400+ புதிய தலைப்புகளில் புத்தகங்கள் வெளியாகியிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி!

சிறுவர் இலக்கியங்கள்

சிறுவர் இலக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் சூழலில் எண்ணற்ற சிறுவர் இலக்கியப் படைப்பாளிகளும், மொழிபெயர்ப்பாளர்களும் உற்சாகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மதுரை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 2 அன்று காலை 11 மணியளவில் ‘புக்ஸ் ஃபார் சில்ட்ரன்’ சார்பில் 50 புதிய நூல்கள் வெளியிடப்படுகின்றன. இப்புத்தகங்களை 50 குழந்தைகள் அறிமுகப்படுத்துகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

மாணவர்களுக்கான போட்டி விவரங்கள்

பொதுவாக, விடுமுறை நாட்களில் மட்டும்தான் காலையிலிருந்தே புத்தகக்காட்சி செயல்படும். ஆனால் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கருத்தில் கொண்டு இம்முறை எல்லா நாட்களிலும் 11 மணிக்குத் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. “பகல் நேரங்களில் பொது வாசகர்களின் வரத்து குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் மாணவர்களைப் புத்தகக்காட்சிக்கு வரவழைக்கவும் அவர்களுக்காகப் போட்டிகள் நடத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார் பபாசி துணைத்தலைவர் பெ.மயிலவேலன்.

செப்டம்பர் 2: 5 முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஓவியப்போட்டி.

செப்டம்பர் 4: ‘உலகு நன்று வாழ்ந்ததாம்’ என்ற தலைப்பில் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், ‘அச்சத்தால் நாடியெல்லாம் அவிந்துபோகும்’ என்ற தலைப்பில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பேச்சுப்போட்டி.

செப்டம்பர் 5: ‘புவி வாழ்வதுதான் எந்தத் தேதியோ’ என்ற தலைப்பில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி.

செப்டம்பர் 6: ‘வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி.

செப்டம்பர் 7: 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடிவினா போட்டி.

காலை 11 மணியளவில் புத்தகக்காட்சி வளாகத்தில் போட்டிகள் நடைபெறும். போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் அந்தந்தத் தேதிகளில் தங்களது பள்ளி/கல்லூரி அடையாள அட்டையுடன் பதிவுசெய்துகொள்ளலாம்.

 Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x