Published : 29 Sep 2018 09:27 am

Updated : 29 Sep 2018 09:27 am

 

Published : 29 Sep 2018 09:27 AM
Last Updated : 29 Sep 2018 09:27 AM

குழந்தைகளுக்கு ஒழுங்காகப் பாலூட்டினாலே பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்!- டாக்டர் செல்வன் பேட்டி

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களை எளிய மொழியில் ஸ்மார்ட் நூலாகக் கொண்டுவந்திருக்கிறது இந்திய குழந்தைகள் மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை. ஒரு குழு அமைத்து தமிழகம் முழுவதுமுள்ள குழந்தைகள் நல மருத்துவர்களின் ஆலோசனைகளின் பேரில் இப்புத்தகம் உருவாகியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தாய்மொழியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார்கள். இப்புத்தகத்தைத் தொகுத்து செம்மைப்படுத்திய டாக்டர் செல்வன் 28 ஆண்டுகளாக ஈரோட்டில் குழந்தைகள் நல மருத்துவராகப் பணிபுரிகிறார். அவருடன் உரையாடியதிலிருந்து...

இப்படி ஒரு புத்தகம் உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் எப்படி வந்தது?


எல்லோருக்குமே குழந்தையைச் சிறப்பாக வளர்க்க வேண்டுமென்ற அக்கறை, ஆசை, எண்ணம் இருக்கிறது. ஆனால், எது சரி எது தவறு என்பது குறித்த புரிதலில் பிரச்சினை இருக்கிறது. எனவே, குழந்தை வளர்ப்பில் அடிப்படை விஷயங்களான உணவு, சுத்தம், தடுப்பு மருந்துகள், வாழ்கைமுறை சார்ந்த (டிவி, மொபைல்) நவீன பிரச்சினைகள், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த விஷயங்களை எளிய முறையில் இந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறோம். சின்னச் சின்ன விஷயங்களுக்காகவும் மருத்துவர்களை நாடுகிறார்கள். தேவையில்லாமல் பதற்றமடைகிறார்கள். அதை தவிர்ப்பதற்கான அடிப்படைப் புரிதல்களை ஏற்படுத்தவும் முயன்றிருக்கிறோம். குறைந்தபட்சமாக முதலுதவி என்ற அளவுக்காவது பெற்றோர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

இன்றைய தலைமுறையினரிடம் இணையதளம், செல்போன் பயன்பாடுகள் அதிகரித்திருக்கும் வேளையில் கண்மூடித்தனமாக எதையும் நம்பும் போக்கும், தவறான தகவல்கள் விரவிக் கிடப்பதால் எதிலும் நம்பிக்கையற்றிருக்கும் போக்கும் காணப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சரியான தகவல்கள் இருந்தாலும் தவறான தகவல்களே விரவிக்கிடக்கின்றன. மீண்டும் மீண்டும் பொய்யான விஷயங்கள் பரப்பப்பட்டு அது உண்மை என்பதாகவே நம்ப வைக்கப்படுகிறது. உதாரணமாக, சமீபத்தில் நடந்த தடுப்பூசி விவாதத்தை எடுத்துக்கொள்வோம். தடுப்பூசியின் பயனால் நோய்கள் குறைந்திருக்கும் இந்தக் காலத்தில் இருந்துகொண்டு சவால் விடுகிறார்கள். இன்றும்கூட தடுப்பூசி முறையாக இல்லாத இடங்களிலும், மத நம்பிக்கையால் தடுப்பூசிகளைத் தவிர்க்கும் மாநிலங்களிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அடிப்படையான புரிதல்கள் நமக்கு இருக்கும்போது பொய்களை நம் மனம் எளிதில் விலக்கிவிடும் இல்லையா?

குழந்தை வளர்ப்பு தொடர்பான நம்பகமான இணையதளம், யூட்யூப் சேனல்கள் ஏதேனும்?

‘க்ளோபல் ஹெல்த் மீடியா ப்ராஜெக்ட்’ பிரமாதமான காணொலிகளைப் பதிவேற்றியிருக்கிறார்கள். அவர்களிடம் அனுமதி பெற்று பாலூட்டுவது தொடர்பான சில காணொலிகளைத் தமிழில் ‘டப்’ செய்து பதிவேற்றியிருக்கிறோம். இப்போது, இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம் இதுபோன்ற விஷயங்களில் தீவிர ஆர்வம் காட்டிவருகிறது.

தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாகத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறீர்கள். இந்தப் புத்தகத்திலும் அதற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது...

ஆமாம். தாய்ப்பாலூட்டும் தாய்க்கு உதவ போதுமான அமைப்புகள், வழிகாட்டிகள் இல்லை. பலருக்கும் குழந்தைகளை எப்படி வைத்து பாலூட்டுவதென்றும், குழந்தைகள் சரியாக குடிக்கிறதா என்றும் தெரிவதில்லை. பிறந்த குழந்தை அழத் தொடங்கினால் பால் பத்தாமல்தான் அழுகிறது என்ற தவறான எண்ணத்தில் வேறு ஏதாவது கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். தாய்ப்பால் அருந்துவதை எப்படி ஒழுங்குபடுத்தலாம் என்றே யோசிக்க வேண்டும். பால் நிறுத்திய பிறகுகூட மறுபடியும் பால் கொடுக்க வைக்க முடியும். 90% இது சாத்தியம். தாய்ப்பால் முறையாக வழங்குவதன் மூலம் பிற்காலத்தில் வயதான பிறகாக சந்திக்கவிருக்கும் சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். ஆறு மாதம் ஒழுங்காகப் பாலூட்டினால் போதும். பல பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் தொடர்ந்து பாலூட்டுவதற்கான வழிமுறைகள் இருக்கின்றனவா?

புகழ்பெற்ற பெண்மணிகள் பலரும் வேலை முடிந்த பிறகாகவும், வேலையின்போதும் பாலூட்டும் புகைப்படங்களைப் பார்த்தோம்தானே? ஒருவேளை நம் ஊரில் சாத்தியமில்லை என்று தோன்றினால் அதற்கு வேறு சில வழிமுறைகள் இருக்கின்றன. பாலைக் கறந்து வைத்துவிட்டுச் செல்லலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து 7 நாளும், உறைபனி அறையில் 3 மாதமும் கெடாமல் வைத்திருக்க முடியும். தாயின் மார்பகம் குளிர்சாதனப் பெட்டியை மிஞ்சிய பெட்டகம். எனவே, வேலைக்குச் சென்று திரும்பியவுடன் மார்பிலுள்ள கட்டுப்பாலையும் தரலாம். குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது.

ஸ்மார்ட் நூல்

புத்தக விநியோகம்:

ஸ்ரீ சக்தி பிரிண்டர்ஸ்

ஈரோடு, விலை: ரூ.50, 94437 88166Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x