Published : 01 Jun 2019 08:55 am

Updated : 01 Jun 2019 08:56 am

 

Published : 01 Jun 2019 08:55 AM
Last Updated : 01 Jun 2019 08:56 AM

நூல் நோக்கு: பயணம் தரும் பாடம்

பயணம் தரும் பாடம்

ரயில் நிலையங்களின் தோழமை


எஸ்.ராமகிருஷ்ணன்

தேசாந்திரி பதிப்பகம்

சாலிகிராமம்,

சென்னை-93.

விலை: ரூ.125

 044 23644947

தேசாந்திரியாகச் சுற்றித் திரிந்து தனது பயண அனுபவங்களை எளிமையான எழுத்துகளாக வாசகர்களிடம் சென்றுசேர்த்த எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய பயணக்கட்டுரைத் தொகுப்பு இது. வட இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள், இந்து தமிழின் ‘காமதேனு’ வார இதழில் தொடராக வந்தன. நயாகராவின் சாரலும், உதயகிரிக் கோட்டையின் வெம்மையும், மைசூர் அரண்மனையின் அழகியலும், குகை வாழ்க்கையும், பாஷோவின் நினைவிடமும் துல்லியமாகப் பதிவாகியிருக்கின்றன. வர்ணனைகளைக் கடந்து அதன் வழியே ராமகிருஷ்ணன் முன்வைக்கும் அனுபவங்களும், வரலாற்றுடன் பிணைந்திருக்கும் உணர்வுகளும் புதிய திறப்புகளைத் தருகின்றன. பயணம் என்பதன் அர்த்தம் இடங்களால் மட்டுமே நிரம்பியதன்று என்பதை உணர்த்துகிறார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், ஒவ்வொரு கட்டுரையும் ஒப்புமைகளால் நிரம்பியிருப்பது. சில இடங்களில் வாழ்க்கையுடன் ஒப்புநோக்குகிறார், சில இடங்களில் வரலாற்றை ஒப்புமைசெய்கிறார். பாஷோவின் நினைவிடம் பற்றிய கட்டுரையில் கம்பர் வருகிறார். கைவிடப்பட்ட கம்பரின் நினைவகமும், கொண்டாடப்படும் பாஷோவின் நினைவகமும் வரலாற்றுத் தன்மையற்ற இயல்பால் நம் சிறப்புகளை நாமே கைவிட்டுவிடுகிறோம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. எங்கெங்கு பயணிக்க வேண்டும் என்பதைத் தாண்டி பயணத்தில் எப்படியான பார்வை வேண்டும் என்பதையும், பயணம் தரும் பாடம் சொற்களுக்கு அப்பால் உணர்தலால் நிரம்பியிருக்கிறது என்பதையும் கோடிட்டுக்காட்டுகிறார்.

- கிருஷ்ணமூர்த்தி

 

******************************************************

உயர் நீதிமன்றத்தில் தமிழ்?

கருத்துக் குவியல்

ஏ.ஆர்.லெட்சுமணன்

முல்லை பதிப்பகம்

அண்ணாநகர்,

சென்னை-40 விலை: ரூ.150

தொடர்புக்கு : 9840358301

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணனின் கட்டுரைகளையும் உரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவராகவும் திராவிட இயக்கத்தின் மீது நன்றியுணர்ச்சி மேலிட்டவராகவும் அவரது சிந்தனைகள் வெளிப்பட்டிருக்கின்றன. உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாவதற்கான வாய்ப்புகளை விவாதிக்கும் உரை, இத்தொகுப்பில் குறிப்பிடத்தக்க ஒன்று. உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாகப் பயன்படுத்துவதில் சட்டரீதியாகச் சிக்கல் இல்லை. குடியரசுத் தலைவரின் இசைவோடு ஆளுநர் அனுமதிக்கலாம். நீதிமன்றத் தீர்ப்புகளை ஆங்கிலத்திலேயே பெற முடியும் என்றாலும் தமிழில் நிச்சயமாக வழக்காடும் வாய்ப்பைப் பெறலாம். ஆனால், அதற்கான நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க மாநில சட்ட ஆணையமும் ஆட்சிமொழி ஆணையமும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் ஏ.ஆர்.லெட்சுமணன்.

- புவி

 

**********************************************************

அறிவியலுக்குப் பின்னுள்ள கணிதம்

கணிதத் தேன் துளிகள்

ராமானுஜம்

அறிவியல் வெளியீடு

சென்னை - 86

விலை: ரூ.40

 044 28113630

அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த வரலாற்று நிகழ்வுகளுக்கென்று தனி வண்ணம் உண்டு. கண்டுபிடிப்புகள் ஆய்வில் இருந்த தருணங்கள், அதை மேற்கொண்டவரின் அப்போதைய மனநிலை, காலம், நிலம், சூழல் என ஒவ்வொன்றும் வசீகரத்தையும் படிப்பினைகளையும் அளிக்கக்கூடியவை. கணிதச் சூத்திரங்களின் வழியே நிரூபணம் செய்யப்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னுள்ள கணிதத் தேற்றங்களைப் பற்றித்தான் இந்நூல் பேசுகிறது. ஆர்க்கிமிடிஸ், கெப்ளர், கலிலியோ, நியூட்டன், ஜான் ஹாரிசன், லெகார்பெல்லியர் ஆகிய அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள், அவர்களின் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கு அடிப்படையாக இருந்த கணிதத் தேற்றங்களை, அது உருவாக்கப்பட்ட வரலாற்று தருணங்களுடன் சுருக்கமாக வழங்குகிறது. தேர்ந்த லாவகமான மொழியில் அறிவியலைப் பேசுவது இந்நூலின் தனிச்சிறப்பு.

- முகமது ரியாஸ்Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x