Published : 15 Jun 2019 09:15 AM
Last Updated : 15 Jun 2019 09:15 AM

360: தமிழறிஞர் அ.தாமோதரன் காலமானார்!

தமிழறிஞர் அ.தாமோதரன் காலமானார்!

தமிழ் மரபிலக்கணத்தில் சிறந்து விளங்கிய அறிஞர்களில் ஒருவரான அ.தாமோதரன் தனது 85-வது வயதில் காலமானார். காட்டுமன்னார்கோவிலில் பிறந்த தாமோதரன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏ.சி. செட்டியார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் உள்ளிட்டோரிடம் பயின்ற பிறகு கேரளப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியத்திடம் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்து ‘திருக்குறளில் மொழியாய்வு’ என்ற தலைப்பில் பட்டம் பெற்றார். இவருடைய முனைவர் பட்ட ஆய்வேட்டைப் படித்த செக் நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில் இவரை ஜெர்மனியிலுள்ள ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிறுவனத்துக்குப் பரிந்துரைத்தார். அங்கே 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற தாமோதரன், தன் சொந்த ஊரான காட்டுமன்னார்கோவிலுக்கே திரும்பி வந்து இறுதிக்காலம் வரை அங்கேயே இருந்தார். கூழங்கைத் தம்பிரான் நன்னூலுக்கு எழுதிய உரையை லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கண்டுபிடித்து அதைக் கைப்பட எழுதிக்கொண்டுவந்து பதிப்பித்தது அவருடைய சாதனைகளுள் ஒன்று. ‘திருக்குறள் மேற்கோள் விளக்கம்’, ‘சங்கரநமச்சிவாயர்’, ‘இறையனார் களவியல்’ பதிப்பு போன்ற நூல்கள் அ.தாமோதரனின் முக்கியமான பங்களிப்பு. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் (2008) உருவாக்கத்திலும் செம்மொழி உயராய்வு மையத்தின் செயல்பாடுகளிலும் அ.தாமோதரன் பங்கெடுத்திருக்கிறார். ‘தமிழ் தொடர்பான எந்தப் பணியிலும் முழு மூச்சாகச் செயல்பட்டவர் அ.தாமோதரன்’ என்கிறார் தமிழறிஞரும் அ.தாமோதரனின் நீண்ட நாள் நண்பருமான பா.ரா.சுப்பிரமணியன்.

சபரிநாதனுக்கும் தேவி நாச்சியப்பனுக்கும் சாகித்ய விருதுகள்!

இந்த ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதும் பால யுவபுரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. யுவபுரஸ்கார் விருதுக்கு ‘வால்’ (மணல் வீடு வெளியீடு) கவிதைத் தொகுப்புக்காக சபரிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 29 வயதாகும் சபரிநாதன் ‘களம் காலம் ஆட்டம்’, ‘வால்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். நோபல் பரிசு வென்ற ஸ்கான்டிநேவியக் கவிஞர் தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகளை ‘உறைபனிக்குக் கீழே’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். சபரிநாதனின் கவிதைகள் புராதனமும் நவீனமும் அன்றாட வாழ்க்கையின் அழகுகள், சிக்கல்கள் யாவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து வெளிப்படுபவை. ஒவ்வொரு தலைமுறைக்கும் சபரி போன்று தீவிரமாக வெளிப்படுபவர்கள் மிகச் சிலரே. இலக்கியம், வாழ்க்கை குறித்த அவரது ஆழமான பார்வையே அவருடைய கவிதைகளின் ஆழத்தையும் தீர்மானித்துக்கொண்டிருக்கிறது. முன்னதாக, தன் புத்தகங்களுக்காக சபரிநாதன் விகடன் விருது, குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது, களம் புதிது விருது, கலை இலக்கியப் பெருமன்ற விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

சாகித்ய அகாடமியின் இந்த ஆண்டுக்கான பாலபுரஸ்கார்  விருது குழந்தை இலக்கிய பங்களிப்புக்காக எழுத்தாளர் தேவி நாச்சியப்பனுக்கு வழங்கப்படுகிறது. காலம்சென்ற குழந்தை இலக்கியப் படைப்பாளியான அழ.வள்ளியப்பாவின் மகளான தேவி நாச்சியப்பன், கடந்த பல ஆண்டுகளாக குழந்தைகளுக்கான படைப்புகளைப் படைத்துவருகிறார். குழந்தைகளுக்கான கதைகள், மொழிபெயர்ப்புகள், ஆய்வு நூல்களென 12 நூல்களை எழுதியுள்ளார். ‘பந்தும் பாப்பாவும்’, ‘புத்தகத் திருவிழா’ ஆகிய சிறுவர் சிறுகதை நூல்கள் பரவலான பாராட்டுகளைப் பெற்றவை. ஆண்டுதோறும் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாளை ‘குழந்தைகள் தின’மாக தேவி நாச்சியப்பன் கொண்டாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவபுரஸ்கார் விருது பெற்ற சபரிநாதனுக்கும் பாலபுரஸ்கார் விருது பெற்ற தேவி நாச்சியப்பனுக்கும் வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x