Published : 15 Jun 2019 09:13 AM
Last Updated : 15 Jun 2019 09:13 AM

நூல் நோக்கு: மூன்று பெண்களின் கதை

மூன்று பெண்களின் கதை

சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்தி, ஆங்கில எழுத்தாளர் மிருதுலா கர்க், இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய சமூகத்தில் ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றி இந்தியில் எழுதிய ‘மிலிஜூல் மன்’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர், சிறுகதையாளர் க்ருஷாங்கினி இந்த நூலை மொழிபெயர்த்துள்ளார்.

1950-களில் பிறந்த குல்மோஹர், மோக்ரா ஆகிய சகோதரிகளையும் அவர்களது தோழியையும் சுற்றி நடக்கும் கதை இது. மாறும் காலத்தோடு மாறும் மக்களின் மனநிலைகளும் மாறுவதைச் சித்தரிக்கும் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு ‘இணைந்த மனம்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஏகதேசமாக மக்கள் கனவு கண்ட சுதந்திரம் கிடைத்த பிறகும் சந்தோஷம் நிலவவில்லை. தேசப் பிரிவினையுடன் வந்த துயர நிஜத்தை, சுதந்திரம் என்ற கனவின் நிறைவால் எதிர்கொள்ளவே முடியவில்லையென்ற எதார்த்தத்தைப் பேசும் நாவல் இது.

இணைந்த மனம்

மிருதுலா கர்க்

தமிழில்: க்ருஷாங்கினி

வெளியீடு: சாகித்ய அகாடமி, சென்னை-18.

விலை: ரூ.395

 044-2431 1741

த்ரில் மான்யா... தில் மஹிமா... திகில் லயா...

ராஜேஷ்குமார் சமீபத்தில் எழுதிய 3 குறுநாவல்களின் தொகுப்பு. புவனேஸ்வரிலும் சென்னையிலும் மாறி மாறிப் பயணிக்கும் ‘பஞ்சமாபாதகம்’, சிலைத் திருட்டின் பின்னணியில் இருக்கும் வலைப்பின்னலையும் அதில் பெரிய மனிதர்களின் தொடர்பையும் பற்றியது.  ‘அரேபிய ரோஜா’ ‘காமதேனு’ வார இதழில் வெளிவந்த தொடர்கதை. மென்பொருள் நிறுவனங்களின் பின்னணியில் நடக்கும் அறிவுத் திருட்டைப் பற்றிய கதை. ‘ரெடிமேட் சொர்க்கம்’ கோவையில் நடக்கிறது. கவனம் ஈர்க்கும் பெண் கதாபாத்திரங்கள். ஸ்லோமோஷன், மில்லி செகண்ட் என்று ராஜேஷ்குமாரின் முத்திரை வாக்கியங்கள் ஆங்காங்கே எதிர்ப்பட, வழக்கம்போல கதைநெடுகிலும் திடுக்கிடும் திருப்பங்கள். ஆங்கில ‘பெஸ்ட் செல்லர்’ நாவல் வரிசையைப் போன்ற புத்தகக் கட்டமைப்பு. அமேசானில் மின்னூலாகவும் கிடைக்கிறது.

பஞ்சமாபாதகம்,

ராஜேஷ்குமார்,

வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன், மதுரவாயில்,

சென்னை-95.

விலை: ரூ.299

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x