

பழந்தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும், நவீனத் தமிழ் இலக்கியத்தில் நுட்பமான பார்வையும், உலக இலக்கியப் பரிச்சயமும், சமய ஞானிகளின் கவித்துவ தரிசனங்களில் மனத் தோய்வும், ஜே.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சமகாலத் தத்துவ ஒளிச் சேர்க்கையும், வானியல் ஞானமும், ஜோதிட அறிவும், எண்கணித ஈடுபாடும் எனப் பரந்துபட்ட ஈடுபாடுகள் கொண்டவர் மா.அரங்கநாதன். தன் வாழ்க்கை அனுபவங்களைத் தத்துவ ஒளியில் பரிசீலிக்கும் புனைவுப் பயணம் இவருடையது.
நாஞ்சில் நாட்டில் திருவெண்பரிசாரத்தில் 1932 நவம்பர் 3-ல் பிறந்தவர். சொந்த ஊரில் இருந்த சிறு நூலகம் இவரது சிறு வயது வாசிப்புக்குத் துணையாக இருந்திருக்கிறது. சிறு வயதிலேயே புதுமைப்பித்தன், லா.ச.ரா. கதைகள் மீது லயிப்பு ஏற்பட்டிருக்கிறது.
அப்போது ‘சக்தி’ இதழில் திருகூடசுந்தரம் மொழிபெயர்ப்பில் வெளிவந்த டால்ஸ்டாயின் ‘போரும் காதலும்’ நாவலை வாசித்து டால்ஸ்டாய் மீது அபரிமிதமான ஈடுபாடு கொண்டிருந்திருக்கிறார். அதுவே ஆங்கில நாவல் வாசிப்புக்கு அவரை இட்டுச்சென்றிருக்கிறது. பள்ளிப் படிப்பின் இறுதி வருடங்களில் சில கதைகளும் எழுதியிருக்கிறார். அவை பிரசுரமும் ஆகியிருக்கின்றன.
பள்ளிப் படிப்பு முடிந்ததும், 1952-ல் சென்னை வந்துவிட்ட இவர், சென்னை நகராட்சியில் எழுத்தராகப் பணியமர்ந்தார். சென்னை வாழ்க்கையில் “கன்னிமரா நூலகம் கிடைத்தது ஒரு தெய்வ அருள்” என்கிறார். பரந்துபட்ட வாசிப்புக்கான காலமாக அது இருந்திருக்கிறது. ஆங்கில நாவல்கள் மட்டுமன்றி, ஆங்கிலத்தில் உள்ள வானியல், ஜோதிடம், எண்கணிதம் ஆகிய துறை சார்ந்த நூல்களையும் வேட்கையோடு வாசித்திருக்கிறார்.
டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, செகாவ், ஸ்டீன்பெக், ஹெமிங்வே, ஃபாக்னர், சரோயன், காம்யு ஆகிய படைப்பாளிகள் அவரைப் பெரிதும் வசப்படுத்தியிருக்கிறார்கள். அவரது இன்னொரு ஈடுபாடு, சினிமா. ஊரில் பள்ளிப்பருவ நாட்களிலேயே பக்கத்து நகரத்துக்குச் சென்று ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது. சென்னை வாழ்க்கையில் அது ஒரு வேட்கையானது. அன்று வெளிவந்த ‘சினிமா கதிர்’ இதழில் ஆங்கிலப் படங்கள் பற்றித் தொடர் எழுதியுள்ளார்.
அவர் பெரிதும் நாவல் வாசிப்பை மேற்கொண்டாலும் அவரது மனம் கவிதையின் மகத்துவம் பற்றிய சிந்தனை களில்தான் அதிகமும் ஈடுபட்டிருந்திருக்கிறது. ‘கடவுள் என்றால் என்ன?’ என்ற கேள்வியைப் போலவே, ‘கவிதை என்றால் என்ன?’ என்ற கேள்வியும் அவரை ஆக்கிரமித் திருக்கிறது. கவிதையில் அவர் மனம் கொள்ளும் விசேஷ ஈர்ப்பு ஒரு புதிராக அவரைத் தொடர்ந்துகொண்டே இருந்திருக்கிறது.
அதற்கு விடை தேடிய பயணத்தின் தொடர்ச்சியாகத்தான் அவரது முதல் புத்தகமாக, ‘பொருளின் பொருள் கவிதை’ 1983-ல் வெளிவருகிறது. அவரது அலுவலக நண்பர்கள் சிலர் முதலீடு செய்து அப்புத்தகத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அவரது 51-வது வயதில் வெளிவந்த முதல் புத்தகம் அது. இப்புத்தகம் க.நா.சுப்ரமண்யம், நகுலன் போன்றோரின் சிறப்பான கவனத்தைப் பெற்றது. சிறுபத்திரிகை உலகில் அவர் பயணம் தொடங்கியது. அவர் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார்.
ஊரில் பள்ளி இறுதி நாட்களில் சில கதைகளை எழுதிய இவர், 20 வயது முதல் தொடங்கிய சென்னை வாழ்வில், தனது 54-வது வயதில், 1986-ல் மீண்டும் கதைகள் எழுதுகிறார். அடுத்த இரண்டாண்டுகளில் இவர் எழுதிய 20 கதைகள் ‘வீடுபேறு’ என்ற தொகுப்பாக 1987-ல் வெளியானது. இத்தொகுப்பு அதன் முற்றிலும் தனித்துவமான புனைவுத் தன்மையினாலும், சமகால வாழ்க்கை பற்றிய தத்துவார்த்த பரிசீலனையாலும் சமயத்துவப் புத்தொளி கொண்டதாக ஒரு திகைப்பை ஏற்படுத்தியது.
க.நா.சுப்ரமண்யம், அசோகமித்திரன், நகுலன் போன்ற மூத்த படைப்பாளிகளின் தனிக் கவனத்தைப் பெற்றது. ஓர் அபூர்வத்தைக் கண்டடைந்த பரவசத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். தமிழ் நிலப்பரப்பும் வாழ்வியலும் ஞான மரபும் தெளிந்த நடையும் ஒரு தனித்த புனைவுப் பாதையை வடிவமைத்தன.
இந்த 20 கதைகளிலும் முத்துக்கறுப்பன் என்ற ஒரு பாத்திரம் இடம்பெறுகிறார். வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களில் அவரின் இருப்பு அமைகிறது. பிராமணரல்லாத வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவராகவும், சிறுவன் முதல் முதியவர் வரை வெவ்வேறு வயதினராகவும், பல்வேறு தொழில் பிரிவுகளைச் சார்ந்தவராகவும், பலதரப்பட்ட பொருளாதார நிலை கொண்டவராகவும், மாறுபட்ட குணநலன்கள் அமைந்தவராகவும், சமூக வாழ்வின் சகல சாத்தியங்களிலும் வாழும், மனிதராக வெவ்வேறு பின்புலங்களில் வெவ்வேறு பாத்திரமாக முத்துக்கறுப்பன் இவரது எல்லாக் கதைகளிலும் வருகிறார். ஒரே பெயர்தான். ஆனால், ஒரே நபரல்ல. ஒரே மன அமைப்பு கொண்டவருமல்ல. அவர் ஒரு கூட்டு நபர். கூட்டு மன உருவகம். தொன்மமான தமிழ்ச் சமூகத்தின் கூட்டு மன வெளிப்பாடு.
இத்தொகுப்பிலுள்ள ‘சித்தி’ கதை அவரது தீர்க்கமான படைப்பு. தத்துவார்த்தப் புனைவு மனதின் உச்சம். அக்கதை ஏதோ ஒரு நாட்டில் நடைபெறுகிறது. அக்கதையின் நாயகன் ஓர் அபூர்வமான ஓட்டக்காரன். ஓடுவதில் அடையும் அலாதி இன்பத்துக்காக ஓடுபவன். வாழ்வின் லெளகீக அக்கறைகள் தீண்டாத ஓட்டம். அவனது அந்த நிலைதான் இவ்வாழ்வில் ஒருவன் அடைகிற சித்தி நிலை. அவனது அபூர்வ மனோபாவம் மிக எளிமையாகவும் லகுவாகவும் கதையில் வெளிப்பட்டிருக்கிறது.
ஒரு மாரத்தான் வீரனாகவும், நாட்டின் பெருமிதமாகவும், நாட்டின் பெருமையை நிலைநிறுத்தப்போகிறவனாகவும் அவன் உருவாகிக்கொண்டிருந்தான். ஒலிம்பிக்கில் புதிய சாதனை படைக்கக்கூடியவனாகக் கருதப்பட்டான். அவனது பெயர் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்பட்டன. “தென்புலத்தில் ‘கறுப்பன்’ என்று இருந்திருக்கக்கூடும்” என்கிறார் கதாசிரியர்.
இக்கதையில் இந்த ஒரு குறிப்பாக மட்டுமே முத்துக்கறுப்பன் வருகிறார். ஆனால், ஓர் உலகளாவிய பார்வையின் வெளிப்பாடாக, முத்துக்கறுப்பனின் பார்வையைக் கதை கொண்டிருக்கிறது. தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள், ஜென் தத்துவத்தில் அரங்கநாதன் கொண்டிருந்த ஈடுபாட்டையும் உணர முடிகிறது.
இக்கதையில் வெளிப்படும் ஓட்ட வீரனின் மனோபாவம் தான் அரங்கநாதனின் கலை இலக்கியப் பார்வையாகவும் உள்ளுறைந்திருக்கிறது. எந்த ஒன்றிலும், ஆசை, வெற்றி, புகழ், நோக்கம், இலக்கு என்ற எல்லைகளற்று லயித்துத் திளைப்பதுதான் ஞானநிலை. அதுவே கவித்துவ மனநிலை. அதுவே இவ்வாழ்வினூடாக இவ்வாழ்வில் முக்தி பெறும் உன்னத நிலை என்பது அரங்கநாதனின் கலைப் பார்வை மட்டுமல்ல; வாழ்க்கைப் பார்வையும்கூட.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com