Published : 01 Jun 2019 08:52 AM
Last Updated : 01 Jun 2019 08:52 AM

வலிகளைச் சொல்லும் வாசனைகள்!

சிவப்புக்கூடை திருடர்கள்

எஸ்.செந்தில்குமார்

உயிர்மை பதிப்பகம்

தேனாம்பேட்டை,

சென்னை-18.

விலை: ரூ.320

 044 48586727

எழுத்தைக் கைவிட்டுச் செல்வதற்கே வாழ்க்கை நிர்ப்பந்தித்தாலும் அந்தச் சவாலோடு மல்லுக்கட்டி நிற்பவர் எஸ்.செந்தில்குமார். தற்காலிகப் பணிகள் பலவற்றையும் தாண்டிவந்து, தற்போது சிறுபத்திரிகைகளின் பொறுப்பாசிரியராக எழுத்தை மட்டுமே பற்றிக்கொண்டிருக்கிறார். அவரது சமீபத்திய முப்பது சிறுகதைகளின் தொகுப்பு, ‘சிவப்புக்கூடை திருடர்கள்’. மாய எதார்த்தம், அடித்தட்டு மக்களின் கதை, நகர்ப்புற வாழ்வு, பேஸ்புக் காலச்சாரம் என்று வெவ்வேறு கதைக்களங்கள். உறவுச் சிக்கல், பெண்ணியம், உறவுகளுக்கு இடையேயான போலிப் பிணைப்பு, குரூரம் என்று பல்வேறு உணர்வுநிலைகள். நாவிதர்கள், பொற்கொல்லர்கள், கணினிப் பொறியாளர்கள், வெள்ளாடு வளர்க்கும் குடியானவர்கள் என்று பலதரப்பட்ட மாந்தர்கள்.

செந்தில்குமாரின் சிறுகதைகளில் உள்ளடக்கத்துக்கு நிகராக வடிவத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. ஒவ்வொரு கதையிலும் புதிதுபுதிதாக முயன்றுபார்க்கும் அவரது உத்தி, இயல்பாகவே கதைகளுக்கு சுவாரசியம் கூட்டிவிடுகின்றன.

‘சிவப்புக்கூடை திருடர்கள்’, ‘கதலி’ ஆகிய கதைகளில் நடப்பது மாயவித்தை என்பதை நம்பவியலாத எதார்த்த நடையில் கதை சொல்லியிருப்பது சிறப்பு. சிவப்புக்கூடை திருடர்களில் ‘க’ எழுத்தும், சிவப்பு நிறமும் மிக முக்கியமான எதிர் இணைப்பு. உழைப்பைக் குறிக்கும் நிறம் சிவப்பு. இங்கே உழைப்பின்றிக் கண்கட்டு வித்தையாக நடக்கும் திருட்டுக்கு இந்த நிறத்தையும், ‘க’ என்பதைக் கயமை, கள்ளத்தனம், களவு என்று பொருள்படும்படியும் எடுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கிறது. இதுபோல, ‘நிர்மலாவின் சைக்கிள்’ கதையில் சைக்கிளின் முகப்பில் குறிப்பிட்டிருக்கும் ‘நி’ என்ற எழுத்து நிர்மலாவைக் குறிப்பதா அல்லது அது ஒரு நினைவை மீட்டெடுக்கும் குறியீடாகப் பார்ப்பதா என்று யோசித்துக்கொண்டே கதையின் இறுதியை அடையும்போது கொண்டை ஊசி வளைவில் திரும்புவதுபோல அந்த எழுத்து வேறொரு அர்த்தம் பெற்றுவிடுகிறது. பலதரப்பட்ட வாசிப்புக்கு வித்திடுகிறது.

‘மணிமேகலை’ கதையில் நகர்ப்புற உழைக்கும் பெண்களின் உடலில் தீராது ஒட்டியிருக்கும் ஸ்வீட் வாசனையையும், வலிநிவாரணத் தைலங்களின் வாசனையையும் அவர்களது பொருளாதாரச் சிக்கலின் குறியீடுகளாகவே பார்க்க முடியும். மகளிர்க் காப்பக விடுதியில் தங்கியிருக்கும் அபலைகளின் கண்ணீர், சென்னை வெள்ளத்தைப் படிமமாகக் கொண்டு வெளிப்படும் நெடுங்கதைதான் ‘மணிமேகலை’.

ஒரே ஒரு வரலாற்றுக் கதையாக வரும் ‘புத்தன் சொல்லாத பதில்’ கதையைக்கூட யசோதரைக்கு நியாயம் கேட்டுப் பெண்ணியம் பேசுவதாகக் கொள்ளலாம். குதூகலச் சிறுவர் உலகம் பற்றிப் பேசும் கதைகள் ஒருபுறமிருக்க, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காகத் தங்களது பால்யத்தைத் தொலைத்த சிறுபிள்ளைகள் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் நிலையைச் சொல்கிறது ‘உமிக்கருக்கு’.

மிகச் சமீபகாலத்தில் எழுதப்பட்ட கதைகள் என்பதால் தொழில்நுட்ப வளர்ச்சியின் பொருட்டு பயன்பாட்டிலுள்ள செல்போன், லேப்டாப், பேஸ்புக் கலாச்சாரம் மிக சகஜமாய் செந்தில்குமாரின் கதையுலகில் அமைந்திருக்கின்றன. ‘மைதானம் அளவு உலகு’ கதையில் பேஸ்புக்கில் நடக்கும் அவலங்கள் பலவும் பகடிகளாகப் பதிவாகியுள்ளன. சமகால விஷயங்களைக் கையாளும் அதேவேளையில், நம் வழக்கத்திலுள்ள பல சடங்கு நிகழ்வுகளையும் பதிவுசெய்திருக்கிறார்.

தனது கதைகளில் சம்பவங்களைத் தனித்தனிக் கோடுகளாக இன்றி பிரதேசங்களின் எல்லைக்கோடுகளாக வடிக்கிறார் செந்தில்குமார். இறுதியில் அவையெல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு பெரிய வரைபடமாக மாறுகின்றன. நீளம் சற்றே அதிகமென்று கருதக்கூடிய சில கதைகள் இந்தத் தொகுப்பில் இருந்தாலும், ஆரம்பித்த முதல் வரியில் தொடங்கி முடிக்கும் கடைசி வரி வரை வாசகரைக் கதையோடு கட்டிவைத்திருக்கும் வித்தை செந்தில்குமாருக்கு வசமாகியிருக்கிறது. அதுவே அவரது கதைகளிலிருக்கும் பிசிறுகளைப் புடவையின் பூவேலைப்பாடுகள்போல தோற்றமளிக்கச் செய்கின்றன.

- லாவண்யா சுந்தர்ராஜன்,

‘அறிதலின் தீ’, ‘இரவைப் பருகும் பறவை’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.

தொடர்புக்கு: lavanya.sundararajan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x