Last Updated : 08 Jun, 2019 10:01 AM

 

Published : 08 Jun 2019 10:01 AM
Last Updated : 08 Jun 2019 10:01 AM

கோலாகலமாக வெளியாகியிருக்கும் ’கோவேறு கழுதைகள்’: சிறப்புப் பதிவு

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் முன்னுதாரணமற்ற பதிப்பாக ‘கோவேறு கழுதைகள்’ வெள்ளி விழாப் பதிப்பு நூலைக் கொண்டுவந்திருக்கிறார் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன். தமிழில் இப்படி ஒரு புத்தக வடிவத்தை எந்த நாவலும் பெற்றதில்லை என்று சொல்லத்தக்க அளவில், ஒவ்வொரு அம்சத்திலும் மிளிர்கிறது ‘கோவேறு கழுதைகள்’ சிறப்புப் பதிப்பு.

தமிழுக்கு இமையம் எனும் கதைசொல்லியை அறிமுகப்படுத்தியது இந்த நாவல்தான். “மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் பிரிவுகளின் சகல கீழ்மைகளையும் மனந்திறந்து கலாபூர்வமாக முன்வைத்து, மனித துக்கத்தை இந்த அளவுக்குத் தேக்கியதிலும் சரி, அதன் அனுபவப் பரிமாற்றத்தில் பெற்ற வெற்றியிலும் சரி, இதற்கு இணையாகச் சொல்ல, தமிழில் மற்றொரு நாவல் இல்லை” என்று சுந்தர ராமசாமியால் புகழப்பட்ட இந்நாவல் வெளியானபோது இமையத்துக்கு வயது 27. அன்று தொடங்கி இமையம் - எஸ்.ராமகிருஷ்ணன் இணை ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நெடுங்கதை, ஐந்து நாவல்களை இதுவரை வெளிக்கொணர்ந்திருக்கிறது. அந்த வகையில், ‘கோவேறு கழுதைகள்’ நாவலுக்கு மட்டும் அல்லாது இமையம் - எஸ்.ராமகிருஷ்ணன் உறவுக்கும் இது வெள்ளி விழா ஆண்டு.

 

இரண்டையும் சேர்த்தே கொண்டாடுவதுபோல சிறப்புப் பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறார் ராமகிருஷ்ணன். இந்தச் சிறப்புப் பதிப்புக்கு என்றே கலைஞர்கள் பெனிட்டா பெர்சியாள், தாஸ், மணிவண்ணன், குமரன், நரேந்திரன், வெங்கட்ராஜா, கிருஷ்ணப்ரியா, முரளி ஆகியோரைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு ஓவியங்கள் - இரண்டு சிற்பங்களைப் படங்களாகப் புத்தகத்தில் சேர்த்திருப்பது புத்தகத்தின் பெறுமதியை மேலும் பல மடங்குக்கு விரிக்கிறது. தமிழில் ‘நடை’ (1968 - 1970) பத்திரிகையில், இலக்கிய உலகத்துடன் நவீன ஓவியர்கள் உருவாக்கிக்கொண்ட உறவு அதன் உச்சத்தைத் தொட்டிருக்கும் நிகழ்வு என்று இதைக் குறிப்பிடலாம்.

 

கெட்டி அட்டை, தரமான காகிதம், கவர்ச்சிகரமான வடிவமைப்பு என்று உருவாக்கப்பட்டிருக்கும் புத்தகத்தைப் பாதுகாப்பாக வைத்திடத்தக்க அளவில் ஒரு சிறப்புப் பெட்டியும் இணைத்துத் தருகிறார்கள். படைப்பாளியையும் படைப்பையும் கண்ணியப்படுத்துவது என்று ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டால் அதற்கான பதிலாக இந்தச் சிறப்புப் பதிப்பைச் சொல்லலாம். இமையத்துக்கு மட்டும் அல்ல; தமிழுக்கும் மரியாதை செய்திருக்கிறார் ராமகிருஷ்ணன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x