Published : 23 Jun 2019 09:02 am

Updated : 23 Jun 2019 09:02 am

 

Published : 23 Jun 2019 09:02 AM
Last Updated : 23 Jun 2019 09:02 AM

சபரிநாதன்: நூறு புலன்கள் முளைத்த கவிஞர்

ஒரு குழந்தை, ‘தாத்தா இந்த முறுக்கைத் திறந்து தா’ என்று தன்னிடம் கேட்டதாக மறைந்த கலை-இலக்கிய விமர்சகர் தேனுகா ஒருமுறை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை முறுக்கு ஒரு உலகம்; அதைத் திறந்துதான் அடைய வேண்டும். கவிஞர்கள் அந்தக் குழந்தையைப் போல்தான் இருக்க வேண்டும். சபரி கீழ்க்காணும் வரிகளில் அப்படி ஒரு குழந்தையாகத் தெரிகிறார்: “அப்படி ஒரு கணம் இது/ ஒவ்வொரு பொருளிலும் ஒரு கதவு திறக்கிறது/ காண முடியாதது எதுவுமில்லை கேட்க முடியாதது எதுவுமில்லை/ நூறுநூறு புலன்கள் முளைத்த புத்துயிரி நான்.”

ஒரு மொழியின் அசாதாரணக் கவிஞர் நூறு நூறு புலன்கள் முளைத்த புத்துயிரியாக இருக்கும்போது அவரால் எல்லாப் பொருட்களிலும் கதவு இருப்பதைக் காண இயலும். ஆரஞ்சுப் பழம் வழியாக இவ்வுலகத்தைப் பார்க்க முடியும். அப்படிப் பார்க்கும்போது அவரையும் இவ்வுலகம் ஆரஞ்சு வழியாக முறைக்கவும் செய்யும்.


யதார்த்த வாழ்வில் நாம் பார்க்கும் பல விஷயங்களை எந்தக் கேள்வியும் கேட்காமல் கடந்துவிடுகிறோம். அதேபோல் காலப்போக்கில் மறக்கப்பட்ட விஷயங்களையும் ஆழ்மனதின் ஓரத்துக்கே தள்ளிவிடுகிறோம். உதாரணத்துக்கு, ஒரு கவிதையில் சம்பந்தமே இல்லாதது போன்ற இடத்தில் ‘இப்போதெல்லாம் யாரும் யாரையும் குட்டி பூர்ஷ்வா என்று திட்டுவதில்லை’ என்று ஒரு வரி வரும். இதற்கு நம்மிடமிருந்து ‘ஆமாம்தானே’ என்று பதில் வருகிறது. இன்று ‘குட்டி பூர்ஷ்வா’ இல்லாமலா போய்விட்டார்? இது சாதாரண விஷயம்தான் என்று நாம் போய்விடுகிறோம். ஆனால், எவ்வளவு சாதாரண விஷயங்களை நம் ஆழ்மனதுக்குள் கொட்டிவைப்பது? அவையெல்லாம் தங்களுக்குள் கலைந்து கலைந்து விளையாட்டு நடத்தும் கோலம்தான் சபரியின் பல கவிதைகள்.

இதுபோன்று சம்பந்தமே இல்லாதது போன்ற வரிகள் சபரியின் கவிதைகளில் ஏராளமாகத் தலைகாட்டும். நம் நினைவு அப்படித்தானே! கவிதையாக மாறும் சாதாரண விஷயங்களைக் கவிதைக்குள் கொண்டுவர மிகவும் தயாரான ஒரு மனது வேண்டும். தன் மேல் பதியப்படும் இசைக்கீறலுக்காகத் தயாராக இருக்கும் பதிவுசெய்யப்படாத இசைத்தட்டு போன்ற மனது வேண்டும். இதற்கேற்ப சபரியின் கண் இழுவலையாக மாறி சம்பவங்களின் சொற்களை இழுத்துவருகிறது. ‘தள்ளுவண்டியில் சென்னா கொதிக்கும் மாலையில் திரும்பும் எனக்கு’ எனும்போது அந்த வரியில் சொல்லப்படாத, மாலைக்கு உரிய எல்லா விஷயங்களையும் அந்த வரி சேர்த்து இழுத்துக்கொண்டே தன் வீட்டுக்குத் திரும்புகிறது.

அப்பாக்கள் ஒப்படைக்கும் வாள்

சிறுவயதிலிருந்து எனக்கு அப்பாவுடன் சைக்கிளில் செல்வது ரொம்பவும் பிடிக்கும். ஆரம்பத்தில் முன்னாலும் இன்னும் கொஞ்சம் வயது கூடிய பின் பின்னாலும் அமர்ந்துபோவேன். அப்பாவுக்கு வயதாகி நான் இளைஞனாக மாறிய பிறகும் கொஞ்சநாள் அது தொடர்ந்துகொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் சைக்கிளை என்னிடம் கொடுத்து ‘ஓட்டு’ என்று சொல்லிவிட்டு சைக்கிளின் பின்னால் உட்கார்ந்துகொள்ள அவர் தயாரானபோது என் உலகமே இடிந்து தலைமேல் விழுந்ததுபோல் இருந்தது.

சபரியின் ‘அப்பாவுக்கு டை அடித்த நான்கு நிமிடங்கள்’ கவிதையைப் படித்தபோது அதேமாதிரியான உணர்வு மேலிட்டது. மருத்துவமனையில் இருக்கும் அப்பாவுக்கு மகன் டை அடிப்பது பற்றிய கவிதை இது. அதன் இறுதி வரிகள் இவை: “…நான் குழைக்கிறேன் மயிர்ச்சாந்தை/ நரைக்கூச்சலுக்கு எதிராக கரும்மௌனத்தை/ இக்கூர்ச்சகை தான் எனது வாள்/ இனி அவர் சார்பாக/ நான் போரிடுவேன்.”

அப்பாக்கள் நம்மிடம் சைக்கிளையும் சாயம் பூசும் புருசையும் தந்துவிடும் கணம்தான் நம் பிராயத்துடனான எல்லாத் தொடர்புகளையும் ரத்தம் சிந்தச் சிந்த அறுக்கும் கத்தியாக உருவெடுத்துவிடுகிறது. அதேநேரத்தில், நம் அப்பாக்கள் சார்பாகப் போரிடுவதற்கான வாளாகவும் அந்தக் கணம் நம் கையில் வந்து உட்கார்ந்துகொள்கிறது.

பரிசோதித்திராத பிரக்ஞை

ஒரு கவிதையில் “அன்பைப் பரிசோதித்திராத/ பால்கன்னி ஆடுகளின் காலம் அது” என்று எழுதுகிறார் சபரி. இது வழக்கமான அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் இடையிலான ஒப்பீட்டைத் தாண்டியும் ஒவ்வொரு காலமும் தனது வெகுளித்தனத்தைத் தொலைத்துக்கொண்டே வருவதை நமக்கு உணர்த்துகிறது. வெகுளித்தனம் என்பது இயல்பறிவைக் குறித்த பிரக்ஞையற்று அதைக் கொண்டிருத்தல். அதைத் தொலைக்கும்போது சபரி சொல்வதுபோல் அன்பைப் பரிசோதித்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.

ஒரு காட்சியை எந்தக் கோணத்தில் உள்வாங்கி, அதை எப்படிப்பட்ட வார்த்தைகளில் வெளிப்படுத்துவது என்பதில் அடங்கியிருக்கிறது கவிஞரின் வீச்சு. ஜெபமாலையை உருட்டிக்கொண்டே முணுமுணுக்கும் ஜெபா சித்தியின் உதடுகளைப் பற்றி சபரி இப்படி எழுதுகிறார். “…வா போ வா போ வா போ… இப்படித் தொடர்ந்து தட்டச்சு செய்கிறது/ புலனாகாத துணிச்சரிகையொன்றைத் தைக்கிறது, அதை/ ஈரமான கத்தரியால் வெட்டுகிறது மீண்டும்/ தைக்கிறது மீண்டும்/ வெட்டுகிறது.”

ஒரு ஈயின் பாதையைப் பின்தொடர்ந்தால் என்னென்ன கோட்டோவியங்கள் கிடைக்குமோ அதைப் போலவே சித்தியின் ஜெபம் கூறும் உதடுகளைப் பின்தொடர்ந்து சொற்கோலங்களை உருவாக்குகிறார் சபரி.

‘பின்காட்சி ஆடியில் அஸ்தமனம்’ என்ற கவிதையில் இந்தப் பகுதி: “…தூரப்புஞ்சையில் மங்கலாக ஒளிரும் அது ஒரு கோழிப்பண்ணை/ - விபத்து நடக்க வாய்ப்பே இல்லாத இடம் -/ உபயத்தில் இரண்டு காரைச்சுவர்கள்,/ அர்த்தமின்மைக்கு எதிராக ஒரு மஞ்சள் விளக்கு/ மேலே சாய்வோடுகள் மீது குந்தியிருக்கும் உடுக்கள் பொரித்த பேரந்தகாரம்/ முட்டையை அடைகாக்கும் காட்டெருமை/ உள்ளிருந்து ஒரு கோழியாவது வெளியேறி வந்து/ இதையெல்லாம் அண்ணாந்துபார்த்தால்/ மாரடைப்பில் சரிந்து விழக் கூடும்/ ஒருவருக்காவது அப்படியொரு வீரமரணம் வாய்க்கட்டும்.”

இதில், “விபத்து நடக்க வாய்ப்பே இல்லாத இடம்” என்ற வரி அவ்வளவு ஈர்ப்பையும் புதிரையும் கொண்டிருக்கிறது. சபரி சங்க காலத்துக் கவிஞராக இருந்திருந்தால் ‘மீனெறி தூண்டிலார்’, ‘விட்ட குதிரையார்’போல மேற்கண்ட கவிதையால் ‘முட்டையை அடைகாக்கும் காட்டெருமையார்’ என்று பெயர் பெற்றிருக்கக்கூடும். ‘விபத்து நடக்க வாய்ப்பே இல்லாத இடம்’ என்ற ஒரு வரி சொல்லும் அந்தகாரத்தின் மேலே இருக்கும் ‘உடுக்கள் பொரித்த அந்தகாரம்’ ஒரு கோழிக்கு மட்டுமல்ல; நமக்கும் வீரமரணத்தை ஏற்படுத்தும் அர்த்தமின்மையைச் சுமந்துகொண்டிருக்கிறது. அதற்கு எதிராக ஒரு மஞ்சள் விளக்கு எப்போதும் எரிந்துகொண்டிருக்கும். இந்தக் கவிதையில் மட்டுமல்ல, சபரியின் பெரும்பாலான கவிதைகளிலும்.

29 வயது ஆகும் சபரிநாதன் ஏற்கெனவே ‘களம்-காலம்-ஆட்டம்’ (2011, ‘புது எழுத்து’ வெளியீடு) தொகுப்பின் மூலம் பரவலாக அறியப்பட்டவர்; இளம் கவிஞர். ‘வால்’ (2016, ‘மணல் வீடு’ வெளியீடு) தொகுப்பு அவரைச் சமகாலத்தின் பெருங்கவிஞர் ஆக்குகிறது. இவரது கவிதைகளில் வட்டார வழக்கு, சங்கக் கவிதைகளின் தாக்கம், விவிலியத் தமிழ், புதிதாக உருவாக்கும் சொற்கள், சொல்லிணைவுகள் என்று மொழிப் பயன்பாட்டில் பெரும் வீச்சு தெரிகிறது.

சம காலத்தின் முக்கியமான இளம் கவிஞரான சபரிநாதனுக்குக் கடந்த வாரம் யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சபரி போன்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும்போதுதான் விருதுகளின் தரநிர்ணயம் உயர்கிறது. யுவபுரஸ்கார் விருது பெற்றிருக்கும் சபரிநாதனுக்கு வாழ்த்துகள்!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.inSign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x