Published : 22 Jun 2019 08:37 AM
Last Updated : 22 Jun 2019 08:37 AM

360: குளச்சல் மு.யூசுப்பின் அதிரடி!

வைக்கம் முகம்மது பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா, திருடன் மணியன்பிள்ளை என்று பேசும்போதெல்லாம் கூடவே குளச்சல் மு.யூசுப்பும் நினைவுக்குவருவார். கேரளத்தின் இலக்கியங்களை மலையாள மணம் குன்றாமல் தமிழுக்குக் கொண்டுவந்த அவருக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது - 2018 வழங்கப்பட்டது. கடந்த 14 அன்று திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது, விருதில் பொறிக்கப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை மாற்றி தமிழில் வழங்கும்படி யூசுப் விடுத்த வேண்டுகோளைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறது சாகித்ய அகாதமி. அரசமைப்புச் சட்டம் 8-வது அட்டவணையிலுள்ள மொழிகள் அனைத்துக்குமே இந்தி மொழியில்தான் இதுவரை விருது வாசகங்கள் இடம்பெற்றுவருகின்றன. முதல் உரிமைக் குரலை தெற்கிலிருந்து தொடங்கி வைத்திருக்கிறார் குளச்சல் மு.யூசுப்.

தமிழ் விருதொன்றுக்குக் குறும்பட்டியல்

சர்வதேச அளவில் வழங்கப்படும் விருதுகளுக்கு முன்னதாக நெடும்பட்டியல், குறும்பட்டியலெல்லாம் வெளியிடப்படுவதுண்டு. இந்தியாவில் வெகு சில விருதுகளுக்கே அப்படிச் செய்யப்படுவதுண்டு. தமிழில் அந்தக் கலாச்சாரம் கிடையாது எனும் வசையை ‘ஆத்மாநாம் விருது’ சமீபகாலமாக ஒழித்திருக்கிறது. ஐந்தாவது ஆண்டு விருதுக்கான குறும்பட்டியலை ‘ஆத்மாநாம் அறக்கட்டளை’ வெளியிட்டிருக்கிறது. 31 கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேன்மொழி தாஸ், ஸ்டாலின் சரவணன், முகுந்த் நாகராஜன், நேசமித்ரன், வெய்யில், கவின், ந.பெரியசாமி, ஷக்தி, பெரு.விஷ்ணுகுமார் ஆகியோரது கவிதைத் தொகுப்புகள் இந்தக் குறும்பட்டியலுக்குத் தேர்வாகியிருக்கின்றன.

முதல் நாவலில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த எமிலி

ஆங்கில மொழியில் உள்ள நாவல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான சர்வதேச டப்ளின் இலக்கிய விருது, இந்த ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்த எமிலி ரஸ்கோவிச்சின் ‘ஐடஹோ’ (Idaho) நாவலுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அவரது முதல் நாவல். பிரெஞ்சு இலக்கியத்துக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ப்ரீ காங்கூ விருது வென்ற மத்தியாஸ் எனார், புக்கர் விருது வென்ற ஜார்ஜ் சாண்டர்ஸ் உள்ளிட்ட சமகாலத்தின் மிக முக்கியமான படைப்பாளிகள் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் எமிலிக்குக் கிடைத்திருக்கும் இவ்விருது அவர் மீது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தவிர இன்னும் ஆறு விருதுகள் இந்நாவலுக்குக் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

லத்தீன் அமெரிக்காவில் சாருவின் கொடி

இணையம், சினிமா டிவிடிகள் அறிமுகமாகாத 1980-களிலிருந்து லத்தீன் அமெரிக்க சினிமாவையும் இலக்கியத்தையும் அறிமுகப்படுத்தி வருபவர் சாரு நிவேதிதா. தமிழ் வாசக உலகத்துக்கு அர்ப்பணிப்புணர்வோடு லத்தீன் அமெரிக்காவை அறிமுகப்படுத்திய சாரு, தனது நெடுநாள் கனவான பெரு-பொலிவியா-சிலி பயணத்துக்குத் தயாராகிவருகிறார். பெருவின் மருத்துவக் குணங்கள் கொண்ட எலுமிச்சைகள் முதல் பயணத் தயாரிப்பு, விசா குறித்த பொதுக்குறிப்பு என உற்சாகத்தோடு தனது இணையதளத்தில் பகிர்ந்தும்கொள்கிறார். மூன்று வாரப் பயணமாக ஜூன் இறுதியில் புறப்படுகிறார். உங்கள் கனவுப் பிரதேசத்தில் கொடி நாட்டிவாருங்கள் சாரு.

முகிலுக்கும் ரோஜாகுமாருக்கும் அஞ்சலி!

விருத்தாசலத்தை அடுத்த நாரையூரில் கூத்து வாத்தியாரின் மகனாகப் பிறந்த முகில் பரமானந்தன் ஒரு கவிஞராக, பாடகராக, நாடகப் பயிற்றுநராக, நாட்டுப்புறப் பாடல்களின் ஆய்வாளராக எனப் பன்முகம் கொண்டவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டக் களங்களில் முன்நின்றவரும்கூட. ’பழகிய மரணம்’ கவிதை நூலும், ‘ஞானம் புதுசு’ நாவலும், ‘ராமையாவின் குடிசை’ நாடகமும் அவரது பெயர் சொல்லும் படைப்புகளாகும். ஜூன் 14 அன்று காலமானார் முகிலன். அவரது உடல், வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்குத் தானமாகத் தரப்பட்டது.

மதுரை மேலூரில் ‘பழக்கடை காதர் மைதீன்’ என்று அறியப்பட்ட ரோஜாகுமார், தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். தன் கதைகளில் எளிய இஸ்லாமிய மக்களின் குடும்ப வாழ்க்கையை உணர்வுபூர்வமாக அணுகியவர். ‘மொசக்குட்டி’, ‘உள்வீட்டிலிருந்து நிலா முற்றம் வரை’, ‘சித்திரக் குகை’ ஆகிய மூன்று தொகுப்புகளிலுள்ள பல்வேறு சிறுகதைகள் என்றென்றும் ரோஜாகுமாரின் பெயர் சொல்லும்.

ஓஎம்ஆரில் புத்தகக்காட்சி

ஐடிக்கும் இலக்கியத்துக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் உண்டுபோல. ஐடி நிறுவனங்களிலிருந்து கடந்த சில ஆண்டுகளில் எண்ணற்ற எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். தமிழ் வாசகர்களில் கணிசமானவர்களும்கூட ஐடிக்காரர்கள். அவர்கள் புத்தக வேட்டை நடத்துவதற்காக நாவலூர் ‘ஓஎம்ஆர் ஃபுட் ஸ்டீரிட்’டில் புத்தகக்காட்சியை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். நேற்று தொடங்கிய புத்தகக்காட்சி ஜூன் 30 வரை நடக்கிறது. என்ஜாய் மக்கழே!

பருவநிலை மாற்றத்தை இலக்கியம் பேச வேண்டும்: அமிதவ் கோஷ்

மனிதகுல இருப்பை அச்சுறுத்துவதும், மனிதர்களால் ஏற்பட்டதுமான பருவநிலை மாற்றம் குறித்து கலை இலக்கிய உலகம் பேச வேண்டும் என்று வலியுறுத்தும் நாவல்தான் அமிதவ் கோஷின் ‘கன் ஐலேண்ட்’. இந்நாவல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த கோஷுடன் பாடகர் டி.எம்.கிருஷ்ணா கலந்துரையாடினார். புராணங்கள், சூழலியல் சிக்கல்கள், அது தொடர்பாக ஆட்சியாளர்களின் அணுகுமுறை, பருவநிலை மாற்றம் என இந்நாவல் பேசியிருக்கும் விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இந்தியாவில் நிலவிவரும் கடும் வறட்சியும் தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாடும் விவாதத்தின் மையமாக இருந்தன. சர்வதேச கவனம் பெற்ற இந்திய எழுத்தாளரான அமிதவ் கோஷின் சொற்பமான எழுத்துகளே தமிழுக்கு வந்திருக்கின்றன. அயல் தேச மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தும் நம் பதிப்பாளர்கள், முக்கியமான இந்திய எழுத்தாளர்களையும் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x