Published : 22 Jun 2019 08:34 AM
Last Updated : 22 Jun 2019 08:34 AM

வாசிப்பு வண்டி வருது... ஓடி வா!

கேரள நூலக இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் பி.என்.பணிக்கரின் நினைவு தினத்தை (ஜூன்-19), நாட்டில் உள்ள பள்ளிகளெல்லாம் தேசிய வாசிப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்றும், அதன் மூலம் 2022-க்குள் 30 கோடி பேரை வாசிப்புக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்றும் இரண்டு வருடங்களுக்கு முன்பாக அறிவித்தார் பிரதமர். அதன் பெயர் ‘ரீடிங் மிஷன் 2022’.

இதைப் பற்றி தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளும் நூலகங்களும் போதிய அளவு விழிப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்பதை உணர்ந்த கோவைபுதூர் கிளை நூலக நூலகர் விஜயன், ஒரு விழிப்புணர்வு வாகனத்தை ஏற்பாடுசெய்திருக்கிறார். வாசிப்பு குறித்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கிய இந்த வாகனம், கோவையில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் செல்கிறது. 50 மாணவர்களுக்குப் புத்தகங்கள் தருகிறார்கள். அதையொட்டி போட்டிகளும் நடத்துகிறார்கள். பரிசுகள் தருகிறார்கள். உள்ளூர் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கவிஞர்களை அழைத்து மாணவர்களிடையே வாசிப்பு பற்றிப் பேசவும் வைக்கிறார்கள். வாசிப்பு எனும் அருங்கலையை வளமோடு விஸ்தரிக்கிறார்கள்.

கடந்த ஜூன்-19 அன்று கோவை மாவட்ட நூலகத்தின் முன்பு புறப்பட்ட விழிப்புணர்வு வாகனத்தை, கோவை மைய நூலக நூலகர் பி.ராஜேந்திரன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். ‘விஜயா’ வேலாயுதம், எழுத்தாளர் அமரந்த்தா உள்ளிட்டோர் பேசினார்கள். “புத்தகமே அறிமுகமில்லாத மலைவாழ் மக்களை மலைக்குடியிருப்புகளில் போய்ச் சந்திக்க வேண்டும் என்பது எனது ரொம்ப நாள் ஆசை. சில சிக்கல்களால் உடனடியாக அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. எனவே, நம் மாநகராட்சிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கலாம் என முடிவெடுத்தேன். ஜூலை 18-க்குள் குறைந்தபட்சம் 50 ஆயிரம் மாணவர்களையாவது சந்தித்துவிட வேண்டும்!’’ என்றார் விஜயன்.

தனிநபராக, சொந்தக் காரை எடுத்துக்கொண்டு, நூலகப் புத்தகங்களோடு பல்லாயிரக்கணக்கான மாணவர்களைச் சந்திக்கிறார் விஜயன். வளமான எதிர்காலத்தை உருவாக்கும் கனவோடு பயணிக்கிறார் அவர். ‘ரீடிங் மிஷன் 2022’யை விஜயன் சாதித்துவிடுவார்!

தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x