Last Updated : 25 Jun, 2019 10:42 AM

 

Published : 25 Jun 2019 10:42 AM
Last Updated : 25 Jun 2019 10:42 AM

இன்று சென்னை... நாளை? கொட்டும் மழையை சேமிக்க வெட்டி வைப்போம் குளங்களை!

கடந்த 5 ஆண்டுகளாக பிஏபி திட்டத்தில் பாசன சபை தேர்தல் நடத்தி, சங்கத்துக்கு முறையான  நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவில்லை. இதனால், பிஏபி திட்டக் கால்வாய்களில் தண்ணீர் திருட்டைத் தடுக்கவும்,  கிளை வாய்க்கால், பகிர்மான வாய்க்கால்களைத் தூர் வாரி  சீரமைக்கவும் இயலவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர் விவசாயிகள்.

பாசன நீர் மேலாண்மையில் விவசாயிகளின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே, அணைகளிலிருந்து திறந்து விடப்படும்  தண்ணீர் கடைமடை வரை செல்லும் என்பது உலக அளவிலான கோட்பாடு. இந்த அடிப்படையில் தமிழகத்தில்  பாசன சபைகள் உருவாகின. ஒன்பது ஆற்றுப் படுகைகளில், மத்திய அரசின் பாசன மேம்பாட்டுத் திட்டத்தில் (சிஏடிபி) பாசன சபைகள் அமைத்து, விவசாயிகளும், பொதுப்பணித் துறை அலுவலர்களும் இணைந்து நீர் நிர்வாகம் செய்து வந்தனர்.

பாலாறு படுகையில் உள்ள  திருமூர்த்தி அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3,77,152 ஏக்கர் நிலங்களும்,  ஆழியாறு ஆற்றுப் படுகையில் உள்ள ஆழியாறு அணையின் மூலம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 44,378 ஏக்கர் நிலங்களும் பாசன சபைகளால் நீர் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தன.

விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகளை  அளித்த வேளாண் பொறியியல் துறையினர், பிஏபி திட்டத்தில் உள்ள வாய்க்கால்களை முறைப்படுத்தினர். பின்னர்,  பாசனத் தலைவர் மற்றும்  வேளாண் பொறியியல் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் பெயரில் வங்கியில் கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. அதில், ஒரு ஹெக்டேருக்கு விவசாயிகளின் பங்களிப்பு ரூ.50, மத்திய அரசின் பங்களிப்பு ரூ.225, மாநில அரசின் பங்களிப்பு ரூ.225 என மொத்தம் ரூ.500  வரவு வைக்கப்பட்டது. இதிலிருந்து கிடைக்கும் வட்டியைக்  கொண்டு, கிளை வாய்க்கால்களைத் தூர் வாரத் திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மைச் சட்டத்தின் மூலம், பாசன சபைகள் கலைக்கப்பட்டு, அவை கிராம நீரைப் பயன்படுத்துவோர் சங்கமாக மாற்றப்பட்டன. பாசன சபைகளில் பொறுப்பில் இருந்தவர்களே, இதிலும் பொறுப்பு வகித்தனர்.

எனினும், மத்திய அரசின் பாசனப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில், பாசன சபைகள் அமைக்கப்பட்டு, நீர் நிர்வாகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், கால்வாய் மற்றும் வாய்க்கால்களை புனரமைக்க நிதி கோரி, உலக வங்கியை அரசு அணுகியபோது,  பாசன சபைகளை சட்டப்பூர்வமாக்கி,  அவைகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று உலக வங்கி  தெரிவித்தது. இதையடுத்து, 2004-ல்

பாசன சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு, விவசாயிகளிடம் நீர் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது.

பாசன சபை தேர்தல் நடைபெறுமா?

இரண்டாவது முறையாக 2009-ல் பாசன சபை தேர்தல் நடைபெற்றது. அந்த சபையின் ஆட்சிக்காலம் 2014-ல் முடிவடைந்தது.  அந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3-வது பாசன சபை தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் . ஆனால், இன்று வரை பாசன சபை தேர்தல்  நடத்தப்படவில்லை.

இதனால் கிராம நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்கள் மற்றும் வேளாண்மைப்  பொறியியல் துறையின் கண்காணிப்புப்  பொறியாளர்கள் ஆகியோர் பெயரில், வங்கியில் இருக்கும் வைப்புத் தொகையிலிருந்து வரும் வட்டித் தொகையை எடுத்து, பாசனக்  கால்வாய்களைத் தூர்வார முடியாத நிலை ஏற்பட்டது. மேலும்,  தண்ணீர்த் திருட்டை தடுக்க இரவு ரோந்துப் பணி உள்ளிட்ட பணிகளும்  முடங்கின.

கால்வாய்களைத் தூர் வார பொதுப்பணித் துறைக்கும் நிதி ஒதுக்கப்படுவதில்லை. இதனால், கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டுசேர்க்க முடிவதில்லை. மேலும், பாசன உதவியாளர்கள், பொறியாளர்கள்  பற்றாக்குறையால், தண்ணீரை உரிய முறையில் பாசனத்துக்கு கொண்டு சேர்க்க இயலாத சூழ்நிலையும் உள்ளது.

திருமூர்த்தி அணையில் 134 கிராம நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்களும்,  1000-க்கும் மேற்பட்ட ஆட்சிமன்றத் தொகுதி உறுப்பினர்களும் சேர்ந்து செய்து வந்த நீர் நிர்வாகத்தை,  15 உதவிப் பொறியாளர்களும், 15 பாசன உதவியாளர்கள் மட்டுமே செய்கின்றனர். இதனால் தண்ணீர் திருட்டைத் தடுக்கவோ, நீர் பகிர்வில் விவசாயிகளுக்கு இடையே ஏற்படும் பூசல்களைத் தீர்க்கவோ இயலவில்லை . இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டும், இன்று வரை  பாசன சபை தேர்தல் நடத்தப்படவில்லை.

வறண்டு போன நீர்நிலைகள்!

கடந்த பல ஆண்டுகளாக வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழை சரிவர பெய்யாததால், ஆறுகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றில் தண்ணீர் குறைந்ததுடன், சில வறண்டும் போய்விட்டது. மேலும், நீராதாரங்கள் குப்பை கொட்டும் இடமாகவும்,  கழிவுநீர் கலக்கும் சாக்கடைகளாகவும் மாறிவருகின்றன.

2001-ல்  உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது, அதில்,  “ஒரு நீர்நிலையில்  தண்ணீர் இல்லை என்பதாலேயே, அதை பிற பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது. நீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீர்நிலை,  நீர்நிலைதான்.

அதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2005-ல்  நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், “தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், ஓடைகள், நீர் வழித்தடம் உள்ளிட்டவற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என்று தெரிவித்தது. அதேபோல,  2006-ல் ஒரு தீர்ப்பில், “நீர்நிலைகள் அரசுக்கு சொந்தமானவை அல்ல,  அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பாளர்களாகத்தான் அரசு இருக்க வேண்டும். அவற்றை எடுத்துக் கொள்ளவும்,  பிறவற்றுக்குப் பயன்படுத்த அனுமதிக்கவும் அரசுக்கு அனுமதி இல்லை” என்று குறிப்பிடப்பட்டது. இந்த உத்தரவுகளை முழு அளவில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் தண்ணீரில் மிதந்த சென்னை நகரம், இன்று தண்ணீருக்காகத்  தவிக்கிறது.  பருவமழைக் காலங்களில் கொட்டித் தீர்க்கும்  மழையை சேமித்து வைக்க  புதிதாக குளங்களை வெட்டாமலும், ஏற்கெனவே உள்ள நீர்நிலைகளைத் தூர் வாரி, சீரமைக்கவும் தவறியதே இதற்குக் காரணம்.

தற்போது சென்னைக்கு ஏற்பட்ட நிலை, வருங்காலங்களில்  தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும். இதைத்தான் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே `நீரின்றி அமையாது உலகு’ என்றார் திருவள்ளுவர்.

பிஏபி பயணம் நிறைவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x