Published : 31 Mar 2018 09:22 AM
Last Updated : 31 Mar 2018 09:22 AM
தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்க் குரல்
ம
துரை பாத்திமா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எம்.ஏ.சுசீலா, ரஷ்ய இலக்கிய மேதை பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘நிலவறைக் குறிப்புகள்’ ஆகிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ரஷ்யாவுக்குப் பயணம்செய்து, கதை நிகழ்ந்த இடங்களையும் பார்த்துவந்திருக்கிறார். தஸ்தயேவ்ஸ்கியின் உலகப் புகழ்பெற்ற இலக்கிய ஆக்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்த எம்.ஏ.சுசீலாவுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், சென்னையில் வருகின்ற ஏப்ரல் 7-ல் ஒரு பாராட்டுக் கூட்டத்தை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, தென்னக ரஷ்யக் கலாச்சார நிலைய துணைத் தலைவர் மிகயீல் கார்ப்பட்டோவ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். எம்.ஏ. சுசீலாவின் இலக்கியப் பங்களிப்பைப் பற்றி எழுத்தாளர்கள் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், ராஜ கோபாலன், சுரேஷ்பிரதீப் ஆகியோர் பேசுகிறார்கள்.
யூமா வாசுகிக்குப் யூமா வாசுகிக்குப் பாராட்டு விழா பாராட்டு விழா
நாஞ்சில்நாடனை வழிகாட்டியாகக் கொண்டு ஈரோட்டில் தாமோதர் சந்துரு, ஆ.பா.ஜெகதீசன், என்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் இலக்கியச் சுற்றம் என்ற அமைப்பை நடத்திவருகிறார்கள். தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களை நடத்திவரும் இலக்கியச் சுற்றம், வருகின்ற ஏப்.8-ல் ஈரோடு ராணா லாட்ஜ் அரங்கத்தில் யூமா வாசுகிக்குப் பாராட்டு விழாவையும், சமீபத்தில் வெளியான இரண்டு நூல்களைப் பற்றிய அறிமுக விழாவையும் நடத்துகிறது. யூமா வாசுகியின் படைப்புலகம் பற்றி போகன் சங்கர் பேசுகிறார். தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘கொங்குதேர் வாழ்க்கை’- இரண்டாம் பாகத்தின் மறுபதிப்பு பற்றி கவிஞர் தபசி பேசுகிறார். சக்தி ஜோதியின் ‘சங்கப் பெண் கவிதைகள்’ நூலைப் பற்றி ராஜ சுந்தரராஜன் உரையாற்றுகிறார்.
பாரதி சர்ச்சைகள்?
பாரதியாருடன் நெருங்கிப் பழகியவர்களின் நினைவுக் குறிப்புகளைத் தொகுத்து ‘பாரதி விஜயம்’ என்ற பெரும் தொகுப்பை வெளியிட்டார் கவிஞர் கடற்கரய். அத்தொகுப்பு வந்தபிறகு கிடைத்த நினைவுக் குறிப்புகளை இரண்டாவது பாகமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார். கூடவே பாரதியைப் பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி ஒரு நூலை எழுதவும் தொடங்கியிருக்கிறார்.
பத்தாவது ஆண்டில் ஒரு தொடர்கதை..
தஞ்சை மாவட்ட விவசாயக் குடும்பங்களின் வாழ்க்கையை எழுத்தில் பதிவுசெய்யும் வண்டல் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் உத்தம சோழன். இவர், ‘கிழக்கு வாசல் உதயம்’ மாத இதழில் கடந்த 2009-ல் ‘சுந்தரவல்லி சொல்லாத கதை’ எனும் தொடர்கதையை எழுதத் தொடங்கினார். இதில், கடந்த அரை நூற்றாண்டுகால கீழத்தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கை போக்குகள், விவசாய முறைகள், மருத்துவம், பண்பாட்டு நிகழ்வுகள் என அனைத்தையும் பற்றி சுந்தரவல்லி எனும் பெண் கதாபாத்திரம் ஒன்றின் வாழ்க்கை அனுபவமாக எழுதிவருகிறார். ஒன்பதாவது ஆண்டினைக் கடந்து, பத்தாவது ஆண்டிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது இந்தத் தொடர்கதை
பொள்ளாச்சி எழுத்தாளர் பட்டியல்
பொள்ளாச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளரும் கவிஞருமான அபி, பொள்ளாச்சியைச் சேர்ந்த படைப்பாளிகளின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்தார். மேலும், அதனைப் பெரிய அளவில் பிளக்ஸ் பேனராகவும் வைத்தார். தமிழின் மூத்த கவிஞரும் பொதுவுடமை இயக்கத் தலைவருமான கே.சி.எஸ்.அருணாசலம் தொடங்கி, 100-க்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் பெயர்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இதனை ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டார். விடுபட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் என மேலும் பலரது பெயர்களை நண்பர்கள் பகிர, பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இப்போது பொள்ளாச்சியைச் சேர்ந்த மொத்த படைப்பாளிகளின் தகவல்களையும் ஒன்றாகத் தொகுத்து, ஒரு கையேடாக வெளியிடும் முயற்சியிலும் இறங்கியுள்ளார் அபி.
சிலைகளுக்கு மரணமில்லை...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14-ஆவது மாநில மாநாடு புதுச்சேரியில் வரும் ஜூன்-21 முதல் 24-வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான வரவேற்புக் குழுத் தலைவராக எழுத்தாளர் பிரபஞ்சன் பொறுப்பேற்றிருக்கிறார். இந்த மாநாட்டில் மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி மொழி எழுத்தாளர்கள், கவிஞர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இந்த மாநாட்டின் இரண்டாம் நாள் மாலையில் ‘சிந்தனைக்கு வீழ்ச்சியில்லை; சிலைகளுக்கு மரணமில்லை’ எனும் தலைப்பில் நிகழ்வொன்று நடைபெறவிருக்கிறது. மேடையில் லெனின், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளை, புகழ்பெற்ற சிற்பிகள் வடிவமைத்துக்கொண்டிருக்க, கவிஞர்களின் கவிதை வாசிப்பும், இசைப் பாடல்களும் நிகழவிருக்கின்றன.
தொகுப்பு: மு.மு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT