தொடு கறி: பிரெஞ்ச் மொழியில் ‘கோபல்ல கிராமம்’

தொடு கறி: பிரெஞ்ச் மொழியில் ‘கோபல்ல கிராமம்’
Updated on
2 min read

பிரெஞ்ச் மொழியில் ‘கோபல்ல கிராமம்’

கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல், தற்போது பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

“பாரீஸ்லேந்து எலிசபெத்துன்னு ஒரு அம்மா வந்து ‘கோபல்ல கிராமம்’ நாவல பிரெஞ்ச் மொழியிலே மொழிபெயர்க்கப் போறேன்னு கேட்டாங்க. ‘நீங்க எப்படி தமிழ் கத்துக்கிட்டீங்க?’ன்னு கேட்டேன். இலங்கைத் தமிழரான தன்னோட கணவர் சேதுபதி மூலமா கத்துக்கிட்டாங்களாம். ‘தமிழக கோயில்களில் பணியாற்றும் ஓதுவார்கள் வாழ்க்கை முறை’யப் பத்தி தான் அவங்க டாக்டர் பட்டத்துக்கு ஆய்வு செஞ்சிருக்காங்க. நம்ம பொஸ்தவத்த மொழிபெயர்க்க சரியான ஆள்தான்னு நானும் சரின்னேன். நா நெனச்சது வீணாகலே. பொஸ்தவம் பாக்க ரொம்ப நல்லா வந்திருக்கு. ஒருத்தரு இதை இந்தியில மொழிபெயர்க்கக் கேட்டதா சொல்றாங்க...” என்றார். இந்தியிலும் வீசட்டும் கரிசல் மண் வாசனை!

பள்ளிகளை நோக்கி வாசிப்பரங்கம்...

thoduJPG 

புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவரங்குளம் கிளை, மாதந்தோறும் புத்தக வாசிப்பரங்கங்களைப் பொது இடங்களிலும் நூலகங்களிலும் நடத்திவருகிறது. அதன் அடுத்தக்கட்ட முயற்சியாகப் பள்ளிகளை நோக்கியும் இப்போது பயணப்படத் தொடங்கியிருக்கிறார்கள். சென்ற வாரம் பள்ளத்திவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கான வாசிப்பரங்கம் நடைபெற்றது. “குழந்தைகள் ஆர்வத்தோடு புத்தகங்களை நூலகங்களில் தேடியெடுத்து, அவற்றை கதைகளாகவும், பாடல்களாகவும், நாடகங்களாகவும் நடத்திப் பிரமிக்க வைத்தார்கள்” என்கிறார் வாசிப்பரங்க ஒருங்கிணைப்பாளரான அறிவொளி கருப்பையா.

நிஜநாடக இயக்கம் வழங்கும் பரிசுத்தொகை!

தனது மனைவி செண்பகம் ராமசுவாமியின் நினைவு நாளையும் நிஜ நாடக இயக்கத்தின் விழாவையும் ஆண்டுதோறும் நடத்தி வருகிறார் நாடகத் துறை பேராசிரியர் மு.இராமசுவாமி. செண்பகம் ராமசுவாமி குறிப்பிடத்தக்க சிறுகதைகள் எழுதியவர்.

சமீபத்தில் நடந்த நிகழ்வில், மு.இராமசுவாமி எழுதிய ‘மொழி - நாடக மொழி - திரைமொழி’ எனும் நூல் வெளியீடும், ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகத்தின் திரையிடலும் நடைபெற்றன. இதுவரை கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்பட்டுவந்த பொருளுதவி, இந்த ஆண்டு சமூகதளத்தில் ஈடுபட்டுவரும் செயற்பாட்டாளர்களுக்குப் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மகேஷ் (காஞ்சிபுரம் மக்கள் மன்றம்), திவ்யா (’கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர்), பிரியா பாபு (திருநங்கையர் வள மையம்) மூவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.

போரும் அமைதியும்... இன்னும் ஒரு மொழிபெயர்ப்பு!

முதுபெரும் மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் நா. தர்மராஜன், லியோ டால்ஸ்டாயின் 'அன்னா கரீனினா' உள்ளிட்ட புகழ்பெற்ற பல ரஷ்ய புத்தகங்களை மொழிபெயர்த்ததற்காக அறியப்பட்டவர். ரஷ்யாவுக்கே சென்று எட்டு ஆண்டுகள் தங்கி மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டவர். தற்போது டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' நாவலை மொழிபெயர்க்கத் திட்டமிட்டிருக்கிறார். இந்த நாவலை ஏற்கெனவே இதழாளர் டி.எஸ். சொக்கலிங்கம் 60 ஆண்டுகளுக்குமுன் மொழிபெயர்த்திருக்கிறார். இருந்தபோதும் உலகப் புகழ்பெற்ற படைப்புகளுக்கு பல மொழிபெயர்ப்புகள் வருவது புதிதல்ல. தாஸ்தாயெவ்ஸ்கியின் 'கரமசோவ் சகோதரர்கள் ' புத்தகத்துக்குத் தமிழில் புவியரசு, அரும்பு சுப்பிரமணியம் என இருவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகியிருக்கின்றன. அந்த வகையில் இந்த மொழிபெயர்ப்பு வேறொரு பரிமாணத்தில் அமையும்.

கவிதை மாதம்

மகளிர் தினத்தையொட்டி சாகித்ய அகாடமி அனைத்திந்திய அளவில் நடத்திவரும் நிகழ்ச்சிகளில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் படைப்பாளிகள் பலரும் பங்கேற்று வருகிறார்கள். தேசிய அளவிலான பெண் படைப்பாளர்களுக்கான கருத்தரங்கம் டெல்லியில் மார்ச் 8-ல் நடைபெற்றது. கவிஞர் சக்தி ஜோதி கலந்துகொண்டு, தமிழில் ஒரு கவிதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டு கவிதைகளும் வாசித்துள்ளார்.

சாகித்ய அகாடமியும் மிஜோ அகாடமியும் இணைந்து பன்மொழிக் கவிஞர்கள் சந்திப்பை கடந்த மார்ச்-15,16 ஆகிய இரு நாட்கள் மிஜோராம் தலைநகர் ஐசாலில் நடத்தின. மிஜோராம் பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த கவிஞர்கள் சந்திப்பில் கவிஞர் அ.வெண்ணிலா கலந்துகொண்டு கவிதை வாசித்தார்.

‘வட கிழக்கு மற்றும் தெற்கு பெண் எழுத்தாளர்கள் சந்திப்பு’ எனும் நிகழ்வை சாகித்ய அகாடமி பெங்களூருவில் மார்ச்-16, 17 இருநாட்கள் நடத்தியது. இதில், கவிதை வாசிப்பு பிரிவுகளில் குட்டி ரேவதி, கனிமொழி.ஜி மற்றும் மஞ்சுளா தேவி மூவரும் கவிதைகளை வாசித்தனர். சிறுகதை வாசிப்புப் பிரிவில் கலைச்செல்வி, தனது ஆங்கிலச் சிறுகதையை வாசித்திருக்கிறார்.

தொகுப்பு- மு.மு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in