Published : 10 Mar 2018 12:10 PM
Last Updated : 10 Mar 2018 12:10 PM

நூல் நோக்கு: கண் முன்னே விரியும் பரதவர் வாழ்க்கை

கண் முன்னே விரியும் பரதவர் வாழ்க்கை

டலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்கிறது அல்லது சுடுகிறது. சிலசமயம் புயல் காணாமல் அடித்துவிடுகிறது. மீனவர் வாழ்க்கையின் மிக மோசமான துயரங்கள் இதுமட்டுமில்லை, கடலோர வாழ்வில் இன்னும் கவனத்துக்கு வராத துயரங்கள், வலிகள், வேதனைகள் இருக்கின்றன என்பதைச் சொல்கிறது ‘வேளாப் பாடு' சிறுகதைத் தொகுப்பு. இரையுமன் சாகரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது.

‘வடத்திலிருந்து விழும் கடல்நீர்த் துளிகளுக்கும் உடம்பிலிருந்து விழும் வியர்வைத் துளிகளுக்கும் அங்கே வித்தியாசம் தெரியவில்லை!'- என்று எழுதும் இரையுமன் சாகர் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பாடுகளை அவர்களின் மொழி யிலேயே சொல்கிறார்.

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீன்பாடுகள் பற்றி மட்டுமல்ல; அவர்களது வீட்டில் உள்ள நல்லது கெட்டதுகளையும் ஆழமாய் பேசிச் செல்கின்றன, இத்தொகுப்பின் கதைகள். குழந்தைகளை ஆசையாய்ப் பெற்றெடுத்து, எல்லோரையும் தகுந்த இடங்களில் கட்டிக்கொடுத்து எந்த சுகமும் காணாமல் கடைசிக் காலத்தில் கடலிலேயே மறித்துப்போன ரேச்சல், பள்ளியில் மகனுக்கு பீஸ் கொடுத்துவிட முடியாமல் அவன் கரைந்து செல்வதை நினைத்த படி மனம் வெதும்பும் அந்தோனி, மீன்பிடிக்க வள்ளத்தில் கடலுக் குச் சென்ற கணவன் கரைக்குத் திரும்பாமலே இறந்துவிட்ட செய்தி வந்ததிலிருந்து ‘கெரவங்கெட்டவளின் ராசிதான் காரணம்' என்று ஊரே கரித்துக்கொட்ட துடிதுடிக்கும் ஸ்டெல்லா.. என கண்முன்னே விரிகிறது பரதவர்களின் வாழ்க்கை.

கன்னியாகுமரி மாவட்ட கிறித்தவ மக்களின் பல கதைகளை தமிழ் புனைகதை உலகம் கடந்துவந்திருக்கிறது. ஆனால், கிறித்தவ மீனவர்களின் வாழ்க்கை அதிகம் எழுதப்படவில்லை. இது நிச்சயம் புதிது.

- பால்நிலவன்

தை எழுச்சியின் வரலாற்று ஆவணம்

வரலாற்றின் பல முக்கியப் பக்கங்கள் நினைவிலிருந்து அழியாமலிருக்க அவற்றை ஆவணப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். அப்படி யான வரலாற்றுத் தேவையை உணர்ந்து, கடந்த 2017 ஜனவரியில் சென்னை மெரினா கடற்கரையிலிருந்து தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் ‘தை எழுச்சி’யாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்ட நிகழ்வு , 34 தமிழக ஆளுமைகளின் கட்டுரைகளால் ஆவணமாகி உள்ளது.

இந்தப் போராட்டம் தமிழகம் மட்டுமல்லாது, தென்னிந்திய மாநிலங்களிலும், உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதி களிலும் ஆதரவுக் கிளர்ச்சிகளை உண்டாக்கியது. தலைநகரான சென்னையை மட்டுமே மையமாகக் கொள்ளாமல் மதுரை, கோவையில் நடைபெற்ற நிகழ்வுகளையும் பற்றியதாகக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஏழு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள இக்கட்டுரைகளைச் சமூக தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் கள ஆய்வாளர் களும், எழுத்தாளர்களும் எழுதியிருக் கிறார்கள். ‘அரசியல் பகுப்பாய்வு: பன்முகப் பார்வைகள்’ எனும் தலைப்பிலான கட்டுரைகள் ஆழ்ந்த வாசிப்புக்கு நம்மை இட்டுச்செல்கின்றன.

- மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x