ரூ. 1.76 லட்சம் கோடி அதிர்வேட்டு

ரூ. 1.76 லட்சம் கோடி அதிர்வேட்டு
Updated on
2 min read

மீண்டும் செய்திகளில் படபடக்கிறார் வினோத் ராய். இந்தியா வில், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) என்கிற பதவி இருப்பதைப் பலருக்கு உணர்த்தியவர். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி தேசத்துக்கு இழப்பு ஏற்பட்டது என்ற வினோத் ராயின் அறிக்கைதான் மன்மோகன் சிங் அரசுக்கு அடிக்கப்பட்ட முதல் அபாய மணி. அரசுத் தரப்பிலிருந்து எவ்வளவோ நெருக்கடிகள் வந்தபோதும், அசராமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த வினோத் ராய் எழுதியிருக்கும் ‘நாட் ஜஸ்ட் அன் அக்கவுன்டன்ட்’ புத்தகம், இந்த ஆண்டின் பெரும் அதிர்வேட்டுகளில் ஒன்று.

அரசியல் விமர்சகர் சஞ்சய் பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’, நிலக்கரித் துறையின் முன்னாள் செயலாளர் பி.சி. பாரக் எழுதிய ‘குருசேடர் ஆர் கன்ஸ்பிரேட்டர்?’, முன்னாள் காங்கிரஸ் தலைவர் நட்வர் சிங் எழுதிய ‘ஒன் லைஃப் இஸ் நாட் இனஃப்’ ஆகியவற்றையெல்லாம்விட முக்கியமான புத்தகம் ராயினுடையது. டெல்லி ராஜ்ஜியத்தின் இன்னொரு முகத்தைக் காட்டுவதோடு மட்டும் அல்லாமல், இதுவரை நமக்குத் தெளிவில்லாத ஓர் இடமான தணிக்கைத் துறையை விரல் பிடித்து அழைத்துச் சென்று காட்டுகிறார் ராய் என்று புகழ்கிறது அறிவுஜீவிகள் வட்டாரம்.

வினோத் ராய் என்றதும் எல்லோர் நினைவுக்கும் வருவது ரூ. 1.76 லட்சம் கோடி எனும் அந்த எண்தான்.

“அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், பொது ஏலம் மூலம் உரிமங்களை வழங்காமல், முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற குயுக்தியான முறை மூலம் வேண்டிய சிலருக்கு மட்டும் சலுகை காட்டப்பட்டது. அதனால், அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 1,76,000 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டேன். நீங்கள் கணக்கிட்டது தவறு என்றார்கள். பொருளாதாரப் பேராசிரியரான மன்மோகன் சிங், தன்னுடைய மாணவர்களுக்குக் கற்றுத் தரும் அதே முறையில்தான் இழப்பைக் கணித்திருந்தேன்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசுக்கு இழப்பே இல்லை என்று அப்போதைய மத்திய அமைச்சர்கள் சிலர் வாதிட்டனர். ஆனால், ஒரு மாதத்துக்குப் பிறகு, அது மிகவும் அபத்தமானது என்று அவர்களுக்கே உறைத்து, வாயை மூடிக்கொண்டனர். ரூ.1,76,000 கோடி என்ற தொகை கிடைத்தபோது, ஒருமுறைக்குப் பலமுறை அதைச் சரிபார்த்துதான் அறிக்கையில் சேர்த்தேன்.

நான் மட்டும் அந்தத் தொகையைக் குறிப்பிடாமல், அரசின் முடிவால் கோடிக் கணக்கான ரூபாய் இழப்பு என்று பொத்தாம் பொது வாக எழுதியிருந்தால் அறிக்கையை யாரும் படித்திருக்கக்கூட மாட்டார்கள்” என்று பின்னாளில் சொன்னார் ராய். அரசின் அனைத்துவிதமான ஆவணங்களையும் கோப்பு களையும் பார்க்கும் வாய்ப்பு தணிக்கையாளருக்கு உண்டு. இந்த வாய்ப்பின் மூலம், ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் திரை

மறைவில் நடத்தும் முறைகேடுகளை வினோத் ராயால் அறிய முடிந்தது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், விமானப் போக்குவரத்து ஊழல் போன்ற முறைகேடுகளின் பின்னணிபற்றி இந்த நூலில் குறிப்புகள் வருகின்றன. நம்மை ஆள்பவர்கள் ஆடும் சதுரங்க வேட்டையை அவை கட்டம்கட்டிக் காட்டுகின்றன. தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய நூல்களில் ஒன்று!

நாட் ஜஸ்ட் அன் அக்கவுன்டன்ட்,

ஆசிரியர்: வினோத் ராய்,

268 பக்கங்கள், விலை: 500,

வெளியீடு: ரூபா பதிப்பகம், 7/16, அன்சாரி ரோடு, தரியாகஞ்ச், புதுடெல்லி-110002

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in