Published : 04 Mar 2018 12:20 PM
Last Updated : 04 Mar 2018 12:20 PM

லத்தீன் அமெரிக்காவுக்கும் மாய யதார்த்தத்துக்குமானபொருத்தம் இயல்பானது! இஸபெல் அயெந்தே பேட்டி

த்தீன் அமெரிக்க இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவர் இஸபெல் அயெந்தே . சிலியின் முன்னாள் அதிபர் சால்வதோர் அயந்தேயின் மருமகள். 1973-ல் சிஐஏ ஆதரவுடன் சிலியில் நடந்த ராணுவப் புரட்சியின் விளைவாக சால்வதோர் அயெந்தே படுகொலை செய்யப்பட்ட பிறகு இஸபெல் அயெந்தே தலைமறைவாகிப் போனார். பிறகு, 1982 -ல், ‘தி ஹவுஸ் ஆஃப் தி ஸ்பிரைட்ஸ்’ என்கிற படைப்பின் வழியாக இலக்கியத்தில் அவருடைய வருகை நிகழ்ந்தது. இன்று மிகவும் பரவலாக வாசிக்கப்படும் ஹிஸ்பானியப் பெண்ணிய எழுத்தாளர் அவர். சமீபத்தில் அவரது புதிய நூல் ‘இன் தி மிட்ஸ்ட் ஆஃப் வின்ட்டர் ’ வெளிவந்திருக்கிறது. அவருடனான பேட்டி:

லத்தீன் அமெரிக்க இலக்கிய எழுச்சி முன்வைத்த இலக்கியப் போக்கு பின்நவீனத்துவக் கோட்பாடுகளிலிருந்து தோன்றியதா? அல்லது லத்தீன் அமெரிக்க நிலத்துக்கே உரிய சுயமான பார்வையா?

லத்தீன் அமெரிக்க இலக்கிய எழுச்சியின் முன்னோடி க்யூபாவின் அலெஹே கார்பெந்தியேவாக (Alejo Carpentier ) இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் தன் வாழ்வின் பகுதி காலம் பிரான்சில் வாழ்ந்திருந்தார். அங்கு அவர் சர்ரியலிஸ்டுகள் சிலருடன் நட்புறவு ஏற்படுத்திக்கொண்டிருந்தார். சாதாரண விஷயங்களை இணைத்து அசாத்தியமான நிகழ்வுகளை உருவாக்கும் இயக்கம் அது. உதாரணமாக, உடலைக் கூறு போட்டு ஆய்வுசெய்யும் மேசையில் ஒரு தையல் இயந்திரமும் குடையும் இருக்கலாம். லத்தீன் அமெரிக்காவில் இதுபோல் இணைக்க வேண்டிய அவசியமில்லை, அவை ஏற்கனவே பிணைந்திருக்கின்றன என்றார் கார்பெந்தியே. ஐரோப்பிய அழகியலுக்குக் கட்டுப்படாமல் லத்தீன் அமெரிக்க நிதர்சனத்தைச் சொல்வதற்குரிய மொழியையும் பாணியையும் கண்டறிவதே சவாலாக இருந்தது. இப்படித்தான் மாய யதார்த்தம் உருவானது. அதன் சிறந்த பிரதிநிதி, காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸ், அவரது "ஒரு நூற்றாண்டு தனிமை வாசம்" நாவல் எங்களுக்கு அது சர்ரியலிசமாக இருக்கவில்லை. பேதலிப்புக்கு ஆட்பட்ட எங்கள் நிதர்சனத்தை அது விவரித்தது.

உங்களுடைய புதிய நூல் எதை முன்வைத்துப் பேசுகிறது என்று சொல்லலாமா?

2016 ஜனவரி மாதம் நியூயார்க் மாகாணத்தில் வீசும் கடுமையான பனிப்புயல்தான் என் புதிய நாவலின் களம். ப்ரூக்லினில் உள்ள ஒரு வீட்டில் கதை தொடங்குகிறது. அது நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு பேராசிரியருக்குச் சொந்தமானது. அந்தக் கட்டிடத்தில் உள்ள வீட்டில் சிலியைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் பணியாற்ற வந்தவர். வாழ்வா சாவா என்ற ஒரு நெருக்கடியான சூழலில் உள்ள க்வாதமாலா தேசத்தின் பெண் ஒருத்தி பனிப்புயல் வீசும் அந்த இரவுப் பொழுதில், அவர்களிடம் உதவி கேட்டு வருகிறாள். அவள் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அங்கு குடியேறி வசிப்பவள். பேராசிரியரும் எழுத்தாளரும் அந்தப் பெண்ணுக்கு உதவ முடிவுசெய்கிறார்கள். அப்போது, அவர்கள் வாழ்வை மாற்றும் சாகசம் தொடங்குகிறது.

நீங்கள் அரசு அதிகாரம் சார்ந்த குடும்பத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் செயல்படும் எழுத்துச் செயல்பாடுகள் அதிகாரத்தைத் திறப்பதற்கான நிலையா? அதிகாரத்தை அடைவதற்கான யத்தனிப்பா?

என் எழுத்துக்கு அரசியலோடு எந்தத் தொடர்பும் இல்லை. என் உறவினர் இஸபெல் அயெந்தே புஸ்ஸி சிலியில் செனட்டராக இருக்கிறார். என்னையும் அவரையும் பலர் குழப்பிக் கொள்கிறார்கள். நான் அரசியலில் பங்கேற்றதேயில்லை. அந்த மாதிரியான அதிகாரத்தில் எனக்கு ஆர்வமில்லை. என்றாலும், என் புத்தகங்களில் சமூக, அரசியல் பிரச்சினைகள் தொடர்ந்து எழுகின்றன. ஏனென்றால் இவை நம் யதார்த்தத்தின் உறுப்புகள்.

எங்கள் தமிழ் மொழி, பெண்ணுக்கு முக்கியத்துவம் தருவது, தாய்வழிச் சமூகம் கொண்டது எனும் பார்வையில் இந்தக் கேள்வியை கேட்கிறேன்: மாய யதார்த்தம் (மேஜிக்கல் ரியலிசம்) என்கிற கதைச்சொல் முறை பெண்ணிடமிருந்துதான் பிறக்கிறதா?

நான் முன்னரே குறிப்பிட்டதுபோல், மாய யதார்த்தம் என்ற இலக்கிய மரபு ஐரோப்பிய சர்ரியலிஸ்ட்டுகளின் தாக்கத்தில் உருவானது. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். என்றாலும், கார்ஸியா மார்க்கேஸ் அடிக்கடி சொன்னதுபோல், அவர் எழுதிய அந்த அற்புதமான நாவல் அவரது பாட்டி பேசிய மொழியில் எழுதப்பட்டது. அதிலுள்ள பல கதைகளும் பாத்திரங்களும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என் முதல் நாவலும் அப்படித்தான். அது என் குடும்பத்தை அடிப்படையாய்க் கொண்டதுதான். லத்தீன் அமெரிக்காவுக்கு மாய யதார்த்தம் இயல்பாய்ப் பொருந்திவருகிறது. ரகசியம் எங்களைச் சூழ்ந்துள்ளது என்ற உணர்வு எங்களுக்கு உண்டு. அசாதாரணமானவற்றை விளக்க முற்படாமல் அவ்வாறே ஏற்றுக்கொள்கிறோம். தமிழிலும் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட நோக்கு பார்வை பெண்மைக்கு மட்டும் உரியதல்ல, பல ஆண்களும் இவ்வாறுதான் உள்ளனர்.

லத்தின் அமெரிக்க இலக்கியம் உருவாக்கிய மேஜிக்கல் ரியலிசம் என்னும் உங்கள் கதைச் சொல்முறையில் பெண்ணுக்கான, அதாவது பெண் தன்மைக்கான இடம் எது?

மாய யதார்த்தத்தைத் தன் தனிச்சிறப்பாகக் கொண்ட லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் எழுச்சி, ஆண்களால் மட்டும் நிகழ்த்தப்பட்ட ஒன்று. எழுச்சி காலகட்டத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் பெண்கள் ஒருவரும் இல்லை. அந்த நாவல்களில் பெண்கள் வழமையான தாய், மனைவி, வேசி பாத்திரங்களில் சித்தரிக்கப்பட்டார்கள். அந்த ஆண் எழுத்தாளர்களில் வெகு சிலரே தேய்வழக்காய் இல்லாத, நினைவில் நிற்கக்கூடிய, நம்பத்தகுந்த பெண் பாத்திரங்களைப் படைத்தனர். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டு முதற்கொண்டே பெண்கள் லத்தீன் அமெரிக்காவில் எழுதிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் எழுச்சியில் ஒருவராய் அங்கீகரிக்கப்படவேயில்லை என்றாலும் அறுபதுகள் முதல் எண்பதுகள் வரை நிலவிய எழுச்சி காலகட்டத்திலும் அவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருந்தார்கள், இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருபோதும் ஆண்கள் அளவு பெண்களுக்கு வாய்ப்பதில்லைதான். எனினும், நல்ல வேளையாக, பெண்கள் இப்போது பதிப்பிக்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டு, மதிக்கப்படுகின்றனர்.

“நான் எழுத்தைத் திட்டமிட்டு எழுதுவதில்லை. அதுவாகவே எழுதிக்கொள்கிறது” என்று ஒரு பேட்டியில் சொல்லியுள்ளீர்கள். அப்படியானால், இந்தக்கருத்தை ‘ஆட்டோஃபிக்‌ஷன்’ எனும் எழுத்துமுறை பற்றிய பிரக்ஞையோடு சொல்கிறீர்களா? உங்களது மொழியின் தனித்துவமாக உள்ள மேஜிக்கல் ரியலிச எழுத்துமுறையிலிருந்து இது நேர்மாறானதல்லவா?

நான் எந்த முன்திட்டமும் இல்லாமல், பாத்திரங்கள் தம்மை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதித்து, கதை தன் போக்கில் போகட்டும் என்று நினைத்து எழுத முயற்சிக்கிறேன். ‘என் பாணி’ என்று எதையும் வைத்துக்கொள்வதில்லை. ஒவ்வொரு கதையும் தனக்கென்றே சொல்லக்கூடிய பாணி கொண்டது, என் புத்தகங்கள் அத்தனைக்கும் சுவை கூட்ட நான் மாய யதார்த்தத்தை உப்பு காரம் போல் பயன்படுத்துவதில்லை. கதையுடன் தொடர்புள்ளபோது மட்டுமே அதைப் பயன்படுத்துகிறேன். புனைவு நம்பத் தகுந்ததாய் இருக்க வேண்டும்.

சமகால லத்தீன் அமெரிக்க இலக்கியப் போக்கு குறித்து உங்களது பார்வை என்ன?

எழுச்சி முடிந்துவிட்டது. லத்தீன் அமெரிக்க எழுத்தில் வாசகர்களுக்கு இருந்த ஆர்வம் விலகிவிட்டது. ஆனால் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகிவருகிறார்கள். அவர்களில் பலர் பெண்கள். தம் இலக்கிய முன்னோடிகள் அளவுக்கு இவர்களும் சிறந்தவர்கள்தாம்!

- கௌதம சித்தார்த்தன், எழுத்தாளர்,

‘உன்னதம்’ இதழின் ஆசிரியர்.

தொடர்புக்கு: unnatham@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x