Last Updated : 31 Mar, 2018 09:17 AM

 

Published : 31 Mar 2018 09:17 AM
Last Updated : 31 Mar 2018 09:17 AM

தாக் ஸூல்ஸ்தாத்: நார்வேஜிய மௌனி

நா

ர்வேவின் மிக முக்கியமான எழுத்தாளராகக் கருதப்படும் தாக் ஸூல்ஸ்தாத், 'நார்வேஜியன் லிட்டரரி கிரிட்டிக்ஸ்' விருதை மூன்று முறை வாங்கிய ஒரே எழுத்தாளர். அவரின் புகழ்பெற்ற நாவலான 'உடைந்த குடை' தற்போது ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியாகியிருக்கிறது. தாக் ஸூல்ஸ்தாத்தின் மிகக் குறைந்த புத்தகங்களே ஆங்கிலத்துக்குச் சென்றிருக்கின்றன. தமிழுக்கு இதுதான் ஸூல்ஸ்தாத்தின் முதல் வருகை.

தாக் ஸூல்ஸ்தாத்தை நார்வேஜிய மௌனி என வர்ணிக்கிறார் ஜி.குப்புசாமி. அக உலகின் அடியாழத்துக்கு ஆழ்துளையிட்டுப் பயணித்தவர் மௌனி. 'உடைந்த குடை' நாவல், அதன் மையக் கதாபாத்திரமான எலியாஸ் ருக்லாவின் அகத்தைப் பின்தொடர்வதாக எழுதப்பட்டிருக்கிறது. எலியாஸின் புதிரான மனதைத்தான் நாமும் தொடர்கிறோம். சமூகம், கல்விச் சூழலின் அவலம், அரசியல் என தனிமனிதனின் அகத்தைப் பின்தொடர்ந்து சமூகத்தை விமர்சிக்கிறார் ஸூல்ஸ்தாத்.

நாவலுக்குள் நாடகம்

எலியாஸ் ருக்லா தனது குடையை உடைப்பதுவரையிலான பகுதி மிக நேர்த்தியாக எழுதப்பட்ட ஒன்று. இந்நாவலின் மிகச் சிறப்பான பகுதி இது. ஹென்ரிக் இப்ஸனின் ‘காட்டு வாத்து’ நாடகத்தை மாணவர்களுக்கு எலியாஸ் ருக்லா விளக்குவதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த முதல் முப்பது பக்கங்கள், மொழிநடை, கதை சொல்லும் விதம், உள்ளடக்கம் என எல்லா வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தனித்துவமானவை!

‘காட்டு வாத்து’ நாடகத்தின் ஒரு பகுதியை எலியாஸ் ருக்லா அலசுகிறான். முதலில் ஒரு வரி பின்பு இன்னும் கொஞ்சம் மறுபடியும் அதே காட்சியின் வேறு பகுதி என நாவலுக்குள் ஒரு நாடகத்தை நிகழ்த்துகிறார்.

ஸூல்ஸ்தாத்தும் ஒரு நாடகாசிரியர் என்பதால் இது உயிரோட்டமாக மிளிர்கிறது. இப்பகுதியில் எலியாஸைத் தவிர எலியாஸைச் சுற்றி நடப்பவை எல்லாம் ஒரு மௌனச் சித்திரமாக இருக்கிறது. எலியாஸின் குரலும் மனமுமே பிரதானமாக ஒலிக்கின்றன. பல்வேறு ஆண்டுகளாக ஒரே பாடத்தைச் சலிப்புடன் சொல்லித்தர நேர்வது, முதிர்ச்சியற்ற விடலைப் பருவத்துக்குப் பொருந்தாதப் பாடத்தைக் கட்டாயப்படுத்தியிருப்பது, தகுதியற்ற ஆசிரியர்கள் நிறைந்திருக்கும் சூழலைப் பகடிக்குள்ளாக்குவது என கல்விச்சூழலின் அவலத்தை இந்தப் பக்கங்கள் உட்பிரதியாகக் கொண்டிருக்கின்றன.

இப்ஸனின் நாடகத்தை மாணவர்களுக்கு விளக்குகையில் டாக்டர் ரெல்லிங் பாத்திரத்தை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்துகிறான் எலியாஸ். சில வினாக்களை எழுப்பி அப்பாத்திரம் ஏன் அவ்வாறு நடந்துகொண்டது எனும் கேள்விக்குப் பல்வேறு பதில்களை அடைகிறார்.

ரெல்லிங் பாத்திரத்தை இப்ஸனின் ஊதுகுழல் எனும் விமர்சன வர்ணனையை எலியாஸ் உதிர்ப்பதும், பின்பு ரெல்லிங்கை இப்ஸனின் எதிரி என்றழைப்பதும், சிறிது நேரத்தில் வேறோரு முடிவை நோக்கி எலியாஸ் நகர்வதும் என சோர்வான விஷயத்தை சுவாரசியமாகக் கையாள்கிறார். தவிரவும், பல்வேறு அடுக்குகள் ஒன்றுக்கொன்று இணையாக இயங்குகின்றன; எலியாஸின் மனநிலை, இப்ஸனின் நாடகம், மாணவர்களின் மனநிலை, கல்விச் சூழலின் அவலம் என.

கடந்த காலத்துக்குள் பயணம்

குடையை உடைத்த பின்பு பள்ளியைவிட்டு வெளியேறவும் எலியாஸின் கடந்த காலத்துக்குள் நாவல் பயணிக்கிறது. அதாவது, எலியாஸ் யோசித்துப்பார்க்கிறான். இதன் பின்பான பகுதிகளில் பூடகமான விஷயங்கள் ஏராளம். சட்டகத்துக்குள் எலியாஸின் நண்பன் ஜோஹான் நுழைகிறான், பின்பு ஏவா லிண்டே நுழைகிறாள், அவளைத் தொடர்ந்து காமிலா. பிறகு, ஒருவர் பின் ஒருவராக வெளியேறி இறுதியாக எலியாஸ் மட்டுமே தனித்திருக்கிறான்.

இப்ஸன் நாடகத்தின் ஒவ்வொரு வரியையும் நுட்பமாக அணுகும் எலியாஸ் பாத்திரம், நம்மை ‘உடைந்த குடை’யையும் அதேபோல வினா எழுப்பிச் செல்லப் பணிக்கிறது. இந்நாவலின் ஒவ்வொரு தனித்தனியான பகுதிக்கும், ஒவ்வொரு சம்பந்தமற்றதுபோல தோன்றும் குறிப்புகளுக்கும் எலியாஸோடு ஏதோ ஒரு தொடர்பு இருப்பதுதான் ‘உடைந்த குடை’யின் சிறப்பம்சம்.

நண்பன் ஜோஹானின் காதலி ஏவா லிண்டேவை விரும்பியபோதும் அதை மனதளவில் தனக்குள்ளாகச் சொல்லிக்கொள்ளக்கூட எலியாஸ் விரும்புவதில்லை. ஜோஹானின் வெளியேற்றத்துக்குப் பின்பாக எலியாஸை ஏற்றுக்கொள்ளும் ஏவா லிண்டேவால் ஏன் தன்னை முழுவதுமாக எலியாஸுக்குத் தர இயலவில்லை? தனக்காக ஏவா நடிக்கிறாள் என்ற எண்ணம் ஏன் எலியாஸை வாட்டுகிறது? ஜோஹானுக்கு காமிலா பதில் கடிதம் எழுத வேண்டுமென ஏன் வற்புறுத்துகிறான்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பெரிதாக என்ன பதில் இருந்துவிடப் போகிறது; ‘சராசரி மனிதன் ஒருவனிடமிருந்து போலிப் பிரமைகளை நீங்கள் பிடுங்கிவிடும்போது, அவனது மகிழ்ச்சியையும் கூடவே பிடுங்கியெடுத்து விடுகிறீர்கள்.’

எலியாஸ் ருக்லாவோடு நம்மை ஏதோ ஒருவகையில் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது. நார்வே கல்விச் சூழலின் அவலமும் இன்னபிற சமூக அரசியல் பார்வைகளும் நமது சூழலுக்கு நெருக்கமாக இருக்கின்றன. இது தவிர, நாவலின் அமைப்பு, மொழி, களம், எடுத்துரைத்திருக்கும் விதம், பாத்திர வார்ப்பு என பல வகைகளில் தமிழ் இலக்கியச் சூழலுக்கு முக்கியமான வரவாக இருக்கிறது ‘உடைந்த குடை’.

- த.ராஜன்,

தொடர்புக்கு: mepco.rajan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x