

‘கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் காட்சி பழகிக்’ கிடந்தவர்களின் வரிசை நீண்டுகொண்டே செல்வது. இசை காஷ்மீரின் பனிவெளியில் பரவிக் கொண்டிருக்க, அவருடைய தாயார் கிருஷ்ணனுக்கு முடிசூட்டும் கணம், ஆகா ஷஹித் அலியின் கவிதையில் உறைந்திருக்கிறது. அந்த அளவு சில்லென்று உயிரைச் சந்திக்கும் பிம்பம் கண்ணனுடையது. முதுமையின் இருளும், சலிப்பின் நிழலும் சிறிதும் படியாத உருவம் என்றே கண்ணனைச் சொல்லத் தோன்றுகிறது. ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்று வியக்கிற நம்மாழ்வாரும், ‘உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்/ கண்ணன் எம்பெருமான் என்றென்று கண்கள் நீர்’ மல்குகிறார்.
கண்ணீரை மறுப்பவனையும் ஏதோ ஒரு விதத்தில் அதைத்துக்கொண்டே இருக்கிறான் கண்ணன். தன்னை நேசிக்கிறவர்களையும் பல உறவுநிலைப் பாத்திரங்களை இயல்பாக ஏற்கவைக்கிறான் கண்ணன். பாரதியாரின் கண்ணன் உலகமோ தடைகள் அற்றும், எல்லைகள் அற்றும் விரிந்து செல்கிறது. தாய், தந்தை, தோழன், அரசன், சேவகன், சற்குரு, சீடன், காதலன், காதலி, குழந்தை, குலதெய்வம் என்று அனைத்து உறவு நிலைகளிலும் கண்ணனை அனுபவிக்கிறது பாரதியாரின் கவிதை.
‘பிரியம் மிகுந்த கண்ணன் காத்திருக்கிறான்
வெண்கல வாணிகரின் வீதிமுனையில்
வேலிப்புறத்தில் எனைக் காண் என்றான்’
என்ற ‘கண்ணன் என் காதலன்’ கவிதையின் வரிகள், இடக்குறிப்பு, த்வனி ஆகியவற்றின் காரணமாக, என்னைப் போன்றவர்களுக்கு வேறு தோற்றம் கொள்கின்றன. கவிஞர் ஷண்முக சுப்பையாவின் குழந்தைக் கவிதையான ‘கண்ணன் என் தம்பி’, கண்ணன் என்ற பெயர்ச் சொல் பூசும் மாயத்தின் காரணமாக எளிய கவிதை என்பதற்கு அப்பால் ஆன தளத்துக்குப் பெயர்ந்து செல்கிறது.
இளம் கவிஞர் செல்மா பிரியதர்ஸனின் ‘தெய்வத்தைப் புசித்தல்’ கவிதைத் தொகுதியில் உள்ள ‘கண்ணன் பாட்டு’ என்ற கவிதைத் தொடரில் ‘தொடர்பெல்லைக்கு வெளியில் ராதா’, ‘ராதையின் உதடுகளில் புதிய பற்தடங்கள்’, ‘காளையர் கூட்டத்தில் ஒருவனாக கண்ணன்’, ‘கண்ணன் அல்லாதவளோடு நேர்ந்துவிட்ட உரையாடல்’ என நான்கு கவிதைகள் கோக்கப்பட்டிருக்கின்றன. இக்கவிதைகள் மரபான உறவுநிலைக்கு அப்பால் கண்ணனை வைத்துப் பார்க்கும் நவீனச் சொல்லாடல்கள். ஒரு புள்ளியை நோக்கிக் குவியாமல், உறவின் பரந்த வெளியில் சிதறல்களாய்த் தெறித்துச் செல்கிறது கவிதை இங்கு.
எப்போதும் அதிகாலையில் எழுந்துகொள்பவள் தான் ராதா
இரவு ஒரு கனவு கண்டிருந்தாள்
கண்ணன் சிலந்தி கடித்து இறந்து போயிருந்தான்
துக்கம் விசாரிக்க வந்தவர்களில்
ஒருவர் முகமும் ஞாபகமில்லாத மங்கலான கனவு அது
அருகில் கண்ணன் உறங்குகிறான்
சிலிண்டர் வெடித்து உனக்கு ஒன்றும் ஆகவில்லையே என
உளறியபடி விழித்த கண்ணனுக்கு
தேநீர் தயாரிக்கச் சென்றுவிட்டாள் ராதா
சமையலறையில் சுடர் பிரகாசமாக எரிகிறது
தேநீர் சுவையாக இருக்கிறது என்றான் கண்ணன்
என்றுமில்லாதபடி
ராதா முத்தமிட்டாள்
உறவு, விழிப்பு, உறக்கம், கனவு - விருப்பம், விழிப்பு, மரணம், உயிர்ப்பு ஆகிய அவஸ்தைகளைத் தாண்டிய சுத்த உணர்வு நிலை துல்லியமாகப் பதிவான கவிதை இது.
நிபந்தனகளற்ற அன்பு சுடர்விடும் கவிதை. கண்ணன் என்றதும் கண்ராய், கண்ண நீரராய் உருகும் நிலைக்கு எதிர் நிலையில், அதே சமயம் கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் ஆரா அமுத ருசியையும் நுட்பமாய் உணர்த்திவிடுகிற இந்தக் கவிதைகளின் வழியாகக் கண்ணன் 21-ம் நூற்றாண்டுத் தமிழில் நுழைகிறான்.