Published : 09 Mar 2018 10:28 AM
Last Updated : 09 Mar 2018 10:28 AM

பார்த்திபன் கனவு 22: தந்தையும் மகளும்!

கு

ந்தவி தாயில்லாப் பெண். அவளுடைய அன்னையும் பாண்டிய ராஜகுமாரியும் நரசிம்மவர்மரின் பட்ட மகிஷியுமான வானமாதேவி, குந்தவி ஏழு வயதுக் குழந்தையாயிருந்தபோதே சொர்க்கமடைந்தாள்.

இந்த துக்கத்தை அவள் அதிகமாக அறியாத வண்ணம் சில காலம் சிவகாமி அம்மை அவளைச் செல்லமாய் வளர்த்து வந்தாள். இந்தச் சிவகாமி பிரசித்தி பெற்ற ஆயனச் சிற்பியின் மகள். நரசிம்மவர்மரால் வாதாபியிலிருந்து சிறை மீட்டு வரப்பட்டவள், பட்ட மகிஷியின் மரணத்துக்குப் பிறகு நரசிம்மவர்மர் சிவகாமியை மணம் புரிந்து கொள்வாரென்று சில காலம் பேச்சாயிருந்தது. ஆனால் அவ்விதம் நடக்கவில்லை. சில வருஷகாலத்துக்கெல்லாம் சிவகாமி தேவியும் சொர்க்கம் புகுந்து விட்டாள்.

பிறகு, சக்கரவர்த்தியே குந்தவிக்குத் தாயும் தகப்பனுமாயிருந்து அவளை வளர்க்க வேண்டியதாயிற்று. அந்தப்புரத்தில் குந்தவிக்குப் பாட்டிமார்கள் - மகேந்திரவர்மருடைய பத்தினிகள் சிலர் இருந்தனர். ஆனால் அவர்களுக்கும் குந்தவிக் கும் அவ்வளவாக மனப் பொருத்தம் ஏற்படவில்லை. குந்தவி தாயாரைக் குறித்து “தெற்கத்தியாள்” என்று அவர்கள் குறை கூறியதையும் சிவகாமி தேவியைப் பலவிதமாக நிந்தை செய்ததையும் குந்தவி குழந்தைப் பருவத்தில் கேட்டிருந்தாள். இதனாலேயே பாட்டிமார்களிடத்தில் அவளுக்குப் பற்றுதல் உண்டாகவில்லை. குந்தவியின் நடை உடை பாவனைகளும், அவள் எதேச்சையாகச் செய்த காரியங்களும் அந்தப் பாட்டிமார்களுக்குப் பிடிக்கவில்லை. நரசிம்மவர்மர் இந்தப் பெண்ணுக்கு ரொம்பவும் இடங்கொடுத்துக் கெடுத்து வருகிறார் என்ற குறையும் அவர்களுக்கு உண்டு. இக்காரணங்களினால் குந்தவிக்குத் தன் தந்தையிடமுள்ள இயற்கையான பாசம் பன்மடங்கு வளர்ந்திருந்தது. அப்பாவுடன் இருக்கும்போதுதான் அவளுக்குக் குதூகலம்; அவருடன் வார்த்தையாடுவதில்தான் அவளுக்கு உற்சாகம். அவருடன் சண்டை பிடிப்பதில்தான் அவளுக்கு ஆனந்தம். அவர் தன்னை உடன் அழைத்துப் போகாமல் ராஜரீகக் காரியங்களுக்காக வெளியூர்களுக்குப் போயிருந்தால், அவளுக்கு ஒரு நாள் போவது ஒரு யுகம் போவது போலிருக்கும். சக்கரவர்த்திக்கோ அவருடைய பிராணனே குந்தவியாக உருக்கொண்டு வெளியில் நடமாடுகிறது என்று கருதும்படி இருந்தது. அவருடைய விசால இருதயமானது ஓரானொரு காரணத்தினால் பல ஆண்டுக் காலம் வறண்டு பசையற்றுப் பாலைவனமாயிருந்தது. அப்படிப்பட்ட இருதயத்தில் குந்தவியின் காரணமாக மீண்டும் அன்பு தளிர்த்து ஆனந்தம் பொங்கத் தொடங்கியது. குந்தவியின் ஒவ்வொரு சொல்லும், செயலும், நோக்கும், சமிக்ஞையும் சக்கரவர்த்திக்குப் புளகாகிதம் உண்டாக்கின.

தந்தையின் வரவை எதிர்நோக்கிக் குந்தவி தேவி அரண்மனை உப்பரிகையில் நிலா மாடத்தில் உட்கார்ந்திருந்தாள். பௌர்ணமிக்குப் பிறகு மூன்று நாள் ஆகியிருக்கலாம். கிழக்கு அடிவானத்தில் வரிசையாக உயர்ந்திருந்த பனை மரங்களுக்கு நடுவில், சிறிது குறைந்த சந்திரன், இரத்தச் சிவப்பு ஒளியுடன் உதயமாகிக் கொண்டிருந்தான். மற்ற நாட்களாயிருந்தால் அழகு மிகுந்த இந்த வானக் காட்சி யின் வனப்பில் ஈடுபட்டு மெய் மறந்திருப்பாள். ஆனால், இன்று இரவு அவளுக்கு எதிலுமே மனம் செல்லவில்லை. வீதியில் குதிரை மீது வைத்துச் சங்கிலியால் பிணைத்துக் கொண்டு போகப்பட்ட இராஜகுமாரனுடைய ஞாபகமாகவே அவள் இருந்தாள். அவனைப் பற்றி விசாரிப்பதற்காகவே தந்தையின் வருகையை வழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

- மீண்டும் கனவு விரியும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x