தன்னை இழக்கும் சோகம்

தன்னை இழக்கும் சோகம்
Updated on
2 min read

தொ

ண்ணூறுகளில் பிறந்த ஈழ எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணனின் இரண்டாம் சிறுகதை தொகுப்பு ‘பச்சை நரம்பு’ வெளிவந்திருக்கிறது. போர்க் காலத்திலும் போருக்கு பின்பும் ஈழத்தின் இயல்பு வாழ்க்கையை அதன் கொண்டாட்டங்களை நசிவுகளை கதையாக்கியிருக்கிறார் அனோஜன். போர் குறித்த கற்பனாவாத சாய்வுகளோ அல்லது உரத்த குரலில் ஒலிக்கும் விமர்சனமோ அவருடைய கதைகளில் எழவில்லை. போர், வாழ்வின் வண்ணத்தை நுட்பமாக மாற்றி அன்றாடத்தை குலைத்து விடுவதை அவருடைய கதைகள் வழியாக கலையமைதியுடன் சாதித்திருக்கிறார்.

அனோஜனின் பெரும்பாலான கதைகளில் மனிதர்கள் ஏதோ ஒரு புள்ளியில் இடம் பெயர்ந்து செல்கிறார்கள். ஆனால் எங்கும் அது நாடகீயமாக சொல்லப்படவில்லை. ‘உறுப்பு’ கதையில் பள்ளிக்குச் செல்லும் பாதையில் கடமை செய்யும் ரணசிங்கே. ‘இணைகோடு’ கதையில் ராணுவ முகாம் அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் சடலங்களைக் கடந்து செல்கிறான் செழியன். ‘வெளிதல்’ கதையில் வரும் பாலியல் தொழிலாளி புகையிரத நிலையத்தில் வடக்கே கடமையாற்றிவிட்டு வீடு திரும்பும் ராணுவ வீரர்கள் வாடிக்கையாளர்களாக கிடைப்பார்கள் என கணக்கு செய்கிறார்.

‘400 ரியால்’ மற்றும் ‘மன நிழல்’ கதைகள் மதிப்பீடுகளின் வீழ்ச்சியைப் பேசுகின்றன. மனிதன் மகத்தான சல்லிப்பயல் எனும் ஜி. நாகராஜனின் வரி நினைவில் எழுந்தது.‘400 ரியால்’ இக்கட்டான சூழலில் ஊர் திரும்ப 400 ரியாலுக்காக அவன் ஏங்குவதும், கையறு நிலையில் தவிப்பதும் கதையில் பதட்டமளிக்கிறது. எல்லோரும் கைவிட்டபின்னர் எதிர்பாராமல் கிடைக்கும் உதவிக்கு அவன் ஆற்றும் எதிர்வினை மனிதர்களின் அப்பட்டமான சுயநலத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் சுட்டுகிறது. ‘மன நிழல்’ கொல்லப்பட்ட நெருங்கிய சகாவின் சவ அடக்கத்துக்கு, அம்மாவின் பேச்சை கேட்டுக்கொண்டு செல்லாமல் இருக்கிறான். அச்சத்தை மறைத்துக்கொள்கிறான். இக்கதைகள் பொறுப்பேற்கத் துணிவின்றி, தப்பித்தலையே தன்னறமாக கொண்ட சந்தர்ப்பவாத வாழ்வை சித்தரிக்கின்றன..

தந்தை, காதலன், கணவன் என தானறிந்த ஆண்களைப் பற்றிய கதை ‘வாசனை’. பெண் பிள்ளை அறியும் முதல் ஆண் தந்தை. தந்தையின் ‘ஆண் தன்மையான கருணை நிரம்பி வழியும்’ வாசனையை அவள் தேடிச் சலிக்கிறாள். இந்தக் கதையின் உணர்வு நிலையின் நேரெதிர் வடிவம் என ‘கிடாய்’ கதையைச் சொல்லலாம். அப்பாவின் வாசனையை அறிந்து, வெறுத்து, பழிதீர்க்கிறாள். தீரா வஞ்சத்தால் தன்னை மாய்த்துக் கொண்ட அன்னைக்காக தந்தை மீது வஞ்சம் வளர்த்துக் கொள்கிறாள் தேவி. வாசனையில் உன்னதப்படுத்தப்பட்ட தந்தை அன்பு இங்கே தலைகீழாகிறது.

அன்பின்மை, அல்லது அன்பிற்கான ஏக்கம் அனோஜனின் கதைகளை பிணைக்கும் மற்றொரு சரடாகத் திகழ்கிறது. அனோஜன் பெண்களின் அகத்தை நுண்மையாகச் சித்தரிக்கிறார். இத்தொகுதியில் உள்ள அனைத்து கதைகளுமே பால்ய, இளம்பருவ காலத்து கதைகள்தான். அனோஜனுக்கு இருக்கும் சவாலென்பது தனக்கு வசதியான, வாகான தளங்களிலிருந்து புதிய தளங்களில் கதை சொல்வதில் உள்ளது. அனுபவ புலம் விரிவடையும் போது அவர் மேலும் சிறந்த கதைகளை எழுதுவார் அதற்கான எல்லா சாத்தியங்களையும் கொண்ட நல்ல சிறுகதைத் தொகுப்பாக பச்சை நரம்பு திகழ்கிறது.

-சுனில் கிருஷ்ணன்,

‘அம்புப் படுக்கை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்;

தொடர்புக்கு: drsuneelkrishnan@gmail.com

பச்சை நரம்பு, அனோஜன் பாலகிருஷ்ணன்,

கிழக்குப் பதிப்பகம்,

சென்னை – 600 014.விலை: ரூ.140

தொடர்புக்கு: 044-42009603

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in