Published : 26 May 2019 00:00 am

Updated : 26 May 2019 09:01 am

 

Published : 26 May 2019 12:00 AM
Last Updated : 26 May 2019 09:01 AM

கிளிங் என்று ஒரு சத்தம்: தேவதச்சனின் கவிதை மீதான குறிப்புகள்

கவிதை ஜடப்பொருள் அல்ல. காகிதத்திலோ இலக்க வெளியிலோ அச்சடிக்கப்பட்டிருந்தாலும், அது ஜடப்பொருள் அன்று. ஒருவர் ஒரு கவிதையை வாசிக்கத் தொடங்கும்போது, அது உயிர்பெற்றுவிடுகிறது. அப்போது அதற்கான இயங்குதளம் ஒன்றும் உருவாகிறது. இந்த இயங்குதளம் ஒவ்வொரு வாசகனுக்கும் மாறுபடும். ஒரே வாசகனுக்கும் வெவ்வேறு தருணங்களில் அது மாறும். கவிதையின் புரிதல் பெரும்பாலும் இந்த இயங்குதளத்துக்குள் நுழையும் வழியால் தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கவிதையின் தலைப்பு (இருந்தால்) தரும் குறிப்பின் வழியாகக் கவிதையை அணுகலாம். ஆனால், அது பெரும்பாலும் கவிதையை எழுதியவரின் மனநிலை அல்லது அவர் சொல்ல நினைத்ததை நோக்கி வாசகர் செலுத்தப்படும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும். எழுதியவர் நினைத்ததையே வாசகன் அப்படியே வரித்துக்கொள்வான் எனச் சொல்லவில்லை. மாறாக, கவிதையை ஒருமுறை படித்த பின், வாசகன் தனக்குப் பிடித்தமான வாக்கியம் அல்லது சொற்றொடரின் வழியாக முழுக் கவிதையையும் அணுகலாம்.

சில மாதங்களாகவே தேவதச்சனின் ‘மர்ம நபர்’ தொகுப்பைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். சமவாய்ப்பு தந்து - ஏதேனும் ஒரு பக்கத்தைத் திறந்து - தினமும் ஒரு கவிதையை மட்டும் வாசித்து அதைப் பற்றி யோசிக்கும் முறையைப் பின்பற்றுகிறேன். இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகளும் ஒவ்வொரு விதத்தில் என்னைக் கவர்ந்தவை. அவற்றைக் குறித்துச் சொல்ல ஏராளமான செய்திகள் உள்ளன. சமீபத்தில் வாசித்து எனக்குள் சில சிந்தனைகளைத் தோற்றுவித்த கவிதை ‘கிளிங் என்று ஒரு சத்தம்’. உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மர்ம நபர்’ தொகுப்பில் இது கீழ்வருமாறு அச்சாகியுள்ளது.


கிளிங் என்று ஒரு சத்தம்

என் ஊருக்கு இன்னும்

பெயர் வைக்கப்பட வில்லை

என் கண்கள்

எந்த நூற்றாண்டைப் பார்த்துக்

கொண்டிருக்கின்றன என்று

தெரியவில்லை. விடிகாலை

கதவைத்

திறந்து

வாசலில் கிடந்த

பழுத்த இலை ஒன்றை

எடுத்து

அன்புடன் பார்க்கிறேன்

அதை

விரல்களில் பற்றியபடி

முன்னும் பின்னும்

திருப்புகிறேன். காற்றைப் போல

பிறகு

தூக்கி எறிகிறேன்

இலை தரையில் சாயும்போது

கேட்கிறது

கிளிங்

என்று ஒரு சத்தம் கேட்கிறது

கண்ணாடிகள் உடையும்போது

கேட்குமே

அந்த சத்தம்.

முதல் வாசிப்பிலேயே என் கவனத்தை ஈர்த்த வரி ‘இலை சாயும்போது’. பொதுவாக ‘மரம் சாய்தல்’, ‘கம்பம் சாய்தல்’, ‘தூண் சாய்தல்’ போன்ற தொடர்கள் நமக்கு நன்கு பழக்கமான, மரபான தமிழ்ச் சொற்றொடர்கள். ‘இலை தரையில் விழும்போது’ என தேவதச்சன் எழுதியிருந்தால், அந்த வரி வித்தியாசமாகத் தெரியாமல், நம் கவனத்தை ஈர்த்திருக்காது. அவர் போன்ற திறமையான, மிகுந்த அனுபவம் மிக்க கவிஞர் காரணமில்லாமல், போகிறபோக்கில் இப்படிப்பட்ட வரியை எழுதியிருக்க வாய்ப்பில்லை. எனவே, இத்தொடரை முழுக் கவிதையின் இயங்குதளத்துக்கான திறவுகோலாகக் கருதி, சிலமுறை கவிதையைத் திரும்ப வாசித்தேன்.

மரத்தின் ஒரு பகுதியாக இருந்த இலை, தற்போது கவிதைசொல்லியின் வாசலில் கிடக்கிறது. மரமே இலையை விலக்கியிருக்கலாம். அல்லது இலை மரத்தை விட்டு விலகிவந்திருக்கலாம். இலையை உயிருள்ள ஒன்றாகக் கருதுவது கவிதையை அணுகுவதற்கான அடிப்படைப் புரிதல். இப்போதைக்கு, ஏதோ காரணத்தால் இலையே மரத்தை விட்டு விலகிவிட்டதாகக் கொள்ளலாம். அதாவது, இலை தன் தாய்வீடான மரத்திலிருந்து தன் தனித்தன்மை, சுயமரியாதை அல்லது புதிய அடையாளம் என ஏதோ ஒன்றைத் தக்கவைத்துக்கொள்ள விலகிவந்ததாகக் கொள்வது வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு நம்மை இட்டுச்செல்கிறது. இதன் அடிப்படையில் கவிதையை மீண்டும் வாசித்தால், அதன் தொடக்க வரிகளான

என் ஊருக்கு இன்னும்

பெயர் வைக்கப்படவில்லை

என்பவற்றுக்குப் பொதுப்புத்திக்கு அப்பாற்பட்ட பொருள் விளங்குகிறது. பெயர் இல்லாமல் எந்த ஊரும் இருக்க முடியாது. ஆனால், கவிதைசொல்லியின் ஊருக்கு ஏன் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை? காரணம், இதுவும் இலையைப் போலவே புதிய அடையாளத்தை நாடுகிறது. இதை நம் நாளாந்திர அனுபவத்திலிருந்தும் அறியலாம். நன்கு வளர்ந்த ஓர் ஊரின் புறப்பகுதியில் புதிதாக நான்கைந்து தெருக்கள் உருவாகி, நாளடைவில் அவையே தனி ஊராக அடையாளம் காணப்பட்டுப் புதிய பெயரை அடைவதை நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நாம் பார்த்திருக்கிறோம். கூட்டுக் குடும்பத்திலிருந்து ஒரு மகன் தனிக்குடித்தனம் செல்வதைப் போலத்தான் இதுவும். ஆம், இலையும் இன்னும் பெயர் வைக்கப்படாத இப்பகுதியும் (ஊரும்) தனிக்குடித்தனம் வந்திருக்கின்றன. இவை தம் அடையாளத்துக்காகக் காத்திருக்கின்றன. இன்னும் பெயர்வைக்கப்படாத ஊரில் வசிக்கும் கவிதைசொல்லி அதனால்தான் ‘விரல்களால் பற்றியபடி இலையை அன்புடன் பார்க்கிறார்’.

ஆகவே, தனித்த அடையாளத்தை (விட்டு விடுதலையாதலாகக்கூட இருக்கலாம்) நாடும் ஜீவன்களைக் கவிதை காட்சிப்படுத்துவதான இயங்குதளம் நமக்குக் கிடைக்கிறது. இங்கே ஒரு தர்க்கச் சிக்கல் எழுகிறது. மரத்திலிருந்து இலை ‘சாய்வது’ கவிதையில் நேரடியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. கவிதைசொல்லி அதைத் தூக்கி எறியும்போதுதான் அது சாய்கிறது. இப்படியிருக்க, இலை மரத்திலிருந்து சாய்வதாகக் கொண்டு கவிதையை அணுகுவது எப்படிச் சரியாகும்? கவிதைசொல்லி தூக்கி எறியும்போது இலை சாய்வதை அடிப்படையாகக் கொண்டு, அது மரத்திலிருந்தும் சாய்ந்திருக்கும் எனக் கொண்டுகூட்டிப் பொருள்கொள்வது கவிதை அழகியலின் அரிச்சுவடி.

இது கவிதையின் ஒரு வாசிப்பு முறை. இதுவே முற்ற முடிவான வாசிப்பும் அல்ல. மற்றபடி,

‘என் கண்கள்

எந்த நூற்றாண்டைப்

பார்த்துக்கொண்டிருக்கின்றன என்று

தெரியவில்லை’

‘கண்ணாடிகள் உடையும்போது

கேட்குமே

அந்தச் சத்தம்’

போன்ற வரிகளை, ‘மர்ம நபர்’ தொகுப்பின் பின்னட்டைக் குறிப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் மிகச் சரியாகச் சொல்லியுள்ளதுபோல், தினசரி வாழ்வின் மீது தேவதச்சன் கொண்டுள்ள ருசியின் வெளிப்பாடுகளாக இப்போதைக்குக் கொள்கிறேன்.

தொடர்புக்கு: nanzundan@gmail.comSign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x