Last Updated : 05 May, 2019 08:11 AM

 

Published : 05 May 2019 08:11 AM
Last Updated : 05 May 2019 08:11 AM

ந.முத்துசாமி: தணல் கனலும் கலை மனம்

மேலே மேலே என்று பயணிப்பதற்கான தணல் உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்த படைப்பு மனம் முத்துசாமியுடையது. முழுமையான கலை நம்பிக்கையோடு தன் செயல்பாடுகளை உத்வேகத்துடன் தொடர்ந்து நிகழ்த்தியபடி இருந்தவர். தன்னுடைய கலைச் செயல்பாடுகளின் பெறுமதிகள் குறித்து ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தன் நம்பிக்கைகளுக்கும் கனவுகளுக்கும் செயல் வடிவம் கொடுப்பதில் எப்போதும் சளைக்காது தீவிரம் காட்டியபடி இருந்தார்.

அவரது ‘நற்றுணையப்பன்’ நாடகப் பனுவல் சுந்தர ராமசாமி நடத்திய ‘காலச்சுவடு’ இதழில் 1988-ல் வெளிவந்த அதேசமயம், அந்த நாடகம் ‘மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்’பில் அரங்கேறியது. ஒரு நாடகப் பனுவல் வாசிப்புக்கு உள்ளாகியிருக்கும் அதேசமயம் தியேட்டர் வடிவமும் காணக்கூடியதாக அமைந்தது. அச்சமயத்தில் ‘வயல்’ என்றொரு இதழ் கொண்டுவர உத்தேசித்திருந்தேன். அதில் ‘நற்றுணையப்பன்’ நாடகப் பிரதி தந்த அனுபவமும், அப்பிரதியின் நாடக நிகழ்வு தந்த அனுபவமும் எத்தன்மையனவாக இருந்தன என்பதைப் பலரிடமிருந்தும் கேட்டுப் பதிவுசெய்ய விரும்பினேன். அதன் அடிப்படையில் கேள்விப் படிவம் ஒன்றைத் தயாரித்து அச்சிட்டு அதை நாடகம் பார்க்கவந்த பார்வையாளர்களிடம் விநியோகித்தோம். அப்படிவத்தின் கேள்விகளுக்கு முப்பதுக்கும் அதிகமானோர் சிரத்தையுடன் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தனர். அந்த இதழ் முயற்சி அறிவிப்போடும் ஆசையோடும் முடிந்துவிட்ட நிலையில், பூர்த்திசெய்யப்பட்டு வந்துசேர்ந்த கேள்விப் படிவங்களை, பெயர் மற்றும் முகவரியை மறைத்துவிட்டு, ஒருநாள் முத்துசாமியைச் சந்தித்து ஒப்படைத்தேன். புன்சிரிப்போடு பெற்றுக்கொண்டார்.

என் கலை இலக்கிய உறவுகளில் முத்துசாமியுடனான நட்பும் உறவும் குடும்பரீதியாகவும் பிணைப்பு கொண்டது. முத்துசாமியின் மூத்த மகன் நடேஷ் ஓர் ஓவியனாக அறிமுகமாகி, மிக நெருங்கிய நண்பனாக இருந்துகொண்டிருப்பவர். இளைய மகன் ரவி ஆரம்பத்தில் நடேஷுடன் இணைந்து ஸ்கிரீன் பிரிண்டிங் நடத்திக்கொண்டிருந்தபோது தொழில்ரீதியாக அறிமுகமாகி நெருக்கமானவர். நடேஷுடனான நட்பு மிகவும் விசேஷமானது. என் சென்னை வாழ்க்கையின் ஆரம்பத்தில் சென்னையின் வளமான சில பக்கங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நடேஷ்.

கொட்டிவாக்கத்தில் ‘கூத்துப்பட்டறை’ இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் ஒருமுறை நான் அங்கு செல்லும்படி ஆனது. அது கூத்துப்பட்டறை நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த காலம். லலிதா ஜுவல்லரி சுகுமாரன் மதுரையில் என் கல்லூரிக் கால நண்பர் என்பதாலும், கலை இலக்கிய ஈடுபாடுகள் உள்ளவர் என்பதாலும் அவரைச் சந்தித்தோம். ‘கூத்துப்பட்டறை’ நாடகங்களை தொலைக்காட்சித் தொடராக எடுத்துக்கொடுத்தால் அதைத் தான் ஸ்பான்ஸர் செய்வதாக ஒரு யோசனையை சுகுமாரன் முன்வைத்தார். இதுபற்றி முத்துசாமியுடன் கலந்து பேசத்தான் நான் கொட்டிவாக்கம் போனது. நான் போன நேரத்தில் நடேஷ் அங்கு வந்துசேர்ந்திருக்கவில்லை. முத்துசாமி மாடியில் மாணவர்களோடு பேசிக்கொண்டிருப்பதாகச் சொன்ன ஒருவர், வாங்க என்றபடி விரைவாக மாடிக்குச் சென்றார். “நடேஷோட ஃபிரண்ட் வந்திருக்காரு” என்று அவர் முத்துசாமியிடம் சொன்னபோது, நானும் மாடியை அடைந்திருந்தேன். திரும்பிப் பார்த்த முத்துசாமி அங்கிருந்த மாணவர்களிடம், “இவர் இப்பத்தான் நடேஷுக்கு ஃபிரண்ட். எனக்குப் பல வருசமா ஃபிரண்ட்” என்று ஆரம்பித்து, என்னைப் பற்றியும் எங்களுடைய பல வருட நட்பைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார்.

தன்னுடைய நாடக உருவாக்கத்துக்குத் தான் பார்த்த நவீன நடனங்கள் உந்துதலாக இருந்ததாகக் குறிப்பிடும் முத்துசாமியிடம் மொழி வெளிப்பாடும் நடனமாகத்தான் சதிராடியது. படைப்பு மொழியில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் நடன குணம் கூடியிருந்தது. பேச்சு மொழியில் சாமான்யத்தை ஒழித்துக்கட்டும்போது உருவாகும் நடனம் அது. உணர்ச்சிவசச் சொல்லாடல்களின் வழி கேட்பவர்களிடம் அவரது பரவச நிலையைக் கடத்திவிடும் வித்தகம் அவருக்கு இயல்பாகக் கூடியிருந்தது. ஆனால், அந்தப் பரவசத்துக்கான காரண காரியத் தர்க்கங்கள் அவ்வளவு எளிதில் கேட்பவருக்கு வசப்படாது. அதை ஒரு அவசியமாகவும் அவர் கருதியிருக்கவில்லை. பரவச நிலைக்கு அழைத்துச்செல்லும் மாயத்தை அவரது நடன மொழி அறிந்திருந்தது. அவரது உணர்ச்சித் தகிப்பில் எப்போதும் ஓர் அதீதத் தன்மை இருந்துகொண்டிருந்தது. அதுவே அவரது ஆளுமையின் தனித்துவமாகவும் இருந்தது.

ஒருசமயம், 1981 இறுதி அல்லது 1982 ஆரம்பமாக இருக்கும், கண்ணப்ப தம்பிரானின் கூத்து மதுரையில் நடைபெற்றது. அதையொட்டி முத்துசாமி மதுரை வந்திருந்தார். அச்சமயம் சுந்தர ராமசாமியும் மதுரை வந்திருந்தார். அந்நாட்களில் ஒருநாள் மாலை சுந்தர ராமசாமி தங்கியிருந்த அறைக்கு முத்துசாமி வந்தார். அப்போது சுந்தர ராமசாமி வியாபார நிமித்தமாக வெளியில் சென்றிருந்தார். நானும் நண்பர் சிவராமகிருஷ்ணனும் அறையில் இருந்தோம். முத்துசாமி உள்ளே வந்த ஓரிரு நிமிடங்களில் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவல் பற்றிய தன் பரவசங்களை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டார். உணர்ச்சிப் பரவசங்களின் சன்னதம். அவர் தரையிறங்கியபோது நாங்கள் சிலிர்த்துப்போயிருந்தோம். அதன் பிறகுதான் சுந்தர ராமசாமி வந்தார். அவரிடம், “கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா பெரும் போதையில் திளைத்திருந்திருக்கலாம்” என்றேன். “என்ன டிரிங்ஸ் சாப்பிட்டீங்களா” என்று கேட்டார் சுந்தர ராமசாமி. “அதெல்லாம் இல்ல. முத்துசாமி, ஜே.ஜே. பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்” என்றேன். ராமசாமி சிரித்துக்கொண்டார்.

1981-ல் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்றபோது, நடனக் கலைஞர் பத்மா சுப்ரமண்யம் எழுதிய ஆய்வுக் கட்டுரை நிராகரிக்கப்பட்டது. ‘பரத சாஸ்திரம்’ எழுதிய பரத முனிவர் காஷ்மீரைச் சேர்ந்தவர் என்ற அவரது முடிபே நிராகரிப்புக்கான காரணம். அதேசமயம், மாநாட்டுக் கலை நிகழ்ச்சிகளில் பத்மா சுப்ரமண்யத்தின் நாட்டிய நிகழ்வு இருந்தது. அதற்காக, பத்மா சுப்ரமண்யமும் அவரது நடனத்துக்குப் பதம் பாடுகிறவரான அவரது அண்ணி சியாமளா பாலகிருஷ்ணனும் வந்திருந்தார்கள். அத்தருணத்தில் முத்துசாமி எனக்கு ஒரு கடிதம் எழுதி, நிராகரிக்கப்பட்ட பத்மா சுப்ரமண்யத்தின் கட்டுரையை ஒரு குறிப்புடன் அனுப்பியிருந்தார். அதை அச்சிட்டு, மாநாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்பவர்களிடம் விநியோகிக்க வேண்டும் என்றும், பத்மா சுப்ரமண்யத்தை அவசியம் சந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். நான் அக்கட்டுரையை அச்சடித்து கருத்தரங்க வாசலில் நின்று அனைவருக்கும் விநியோகித்தேன். பத்மா சுப்ரமண்யத்தையும் சந்தித்தேன். அவரது நடனத்தையும் பார்த்தேன். அதிஅற்புத அனுபவம். அபிநயங்களைப் பிரதானப்படுத்தாத தூய நடனம். முத்துசாமி அவரையும் நடனக் கலையையும் கொண்டாடும் அருமை அப்போது புரிந்தது.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x