Published : 04 May 2019 08:13 AM
Last Updated : 04 May 2019 08:13 AM

360: பாத்திரங்களில் சேகரித்த கவிதைகள்

இது விருதுகள் வாரம்

கோவை கொடிசியா சார்பில் வழங்கப்பட்டுவரும் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ இந்த ஆண்டு வண்ணநிலவனுக்கு வழங்கப்படுகிறது. கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் வழங்கப்படும் ‘கண்ணதாசன் விருது’ இம்முறை சாரு நிவேதிதாவுக்குக் கிடைத்திருக்கிறது. சாருவின் நாற்பது ஆண்டு எழுத்து வாழ்க்கையில் கிடைத்திருக்கும் முதல் விருது இது! எழுத்தாளர் பாலகுமாரனின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பாலகுமாரன் அறக்கட்டளையும் மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கமும் இணைந்து வழங்கும் ‘பாலகுமாரன் இலக்கிய விருது’ நரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் பா.செயப்பிரகாசம்

பா.செயப்பிரகாசத்தின் முதல் சிறுகதை 1971-ல் பிரசுரமானது. இதுவரை வெளியான 13 சிறுகதைத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 சிறுகதைகளை லதா ராமகிருஷ்ணனும் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரும் ‘இன்விடேஷன் டு டார்க்னெஸ்’ எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். இந்நூலை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிடவுள்ளது.

ஒலி வடிவில் நவீனச் சிறுகதைகள்

புதுமைப்பித்தன், லா.ச.ரா, தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், ஜெயமோகன் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள், ‘ரேடியோ பப்ளிக்’ இணையதளத்தில் ஒலி வடிவில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. இனி கதை கேட்டபடியே ஜன்னலோரப் பயணங்களை ரசிக்கலாம். இடுகை: https://radiopublic.com/ramsthekkampattu-6LXgpo

சென்னையில் புத்தகக்காட்சி

மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் 334-வது புத்தகக்காட்சி மே 2 முதல் மே 12 வரை சென்னை வளசரவாக்கம் ஸ்ரீசாய் மகாலில் நடைபெறுகிறது. 10% தள்ளுபடியில் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம்.

பாத்திரங்களில் சேகரித்த கவிதைகள்

சொந்தமாகவே பாடல்கள் இயற்றி மேடையேற்றும் பாத்திர வியாபாரியான கா.ஜோதிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ஜோதியின் அடுக்கு மொழிக் கவிதைகளைத் தொகுத்து ‘ஒரு சாமானியனின் கவிதைகள்’ எனும் தலைப்பில் வெளியிட்டிருக்கிறது கவிநிலா பதிப்பகம். ‘நான் அன்றாடம் ஓட்டை உடைசல் அலுமினியப் பாத்திரங்களை மட்டும் மக்களிடமிருந்து வாங்கவில்லை; கவிதைகளையும்தான்’ என்கிறார் கா.ஜோதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x