Published : 25 May 2019 08:50 AM
Last Updated : 25 May 2019 08:50 AM

360: மக்கள் பாடகனுக்கு மரியாதை

மக்கள் பாடகனுக்கு மரியாதை

மே 20 அன்று நடந்த ராஜு முருகனின் ‘ஜிப்ஸி’ ஆடியோ வெளியீட்டு விழாவில் எல்லோரையும் கவர்ந்த விஷயம் ‘துணிவின் பாடகன் பாந்த் சிங்’ நூலை வெளியிட்டதுதான். பஞ்சாபின் பூர்ஜ் ஹப்பார் கிராமத்தைச் சேர்ந்த பாந்த் சிங், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் பாடும் இடதுசாரிப் பாடகர். தனது மகளைக் கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கிய கயவர்களுக்கு எதிராகப் போராடி, அவர்களுக்கு சிறைத்தண்டனை வாங்கித் தந்தவர். விளைவாக, ஆதிக்க சாதிகளிடம் இரு கைகளையும் ஒரு காலையும் இழந்தார். அதனாலொன்றும் துவண்டுவிடவில்லை. பிறகும் ஓங்கி ஒலித்தது அவரது பெருங்குரல். இவரது வாழ்வைச் சொல்லும் புத்தகம்தான் ‘துணிவின் பாடகன் பாந்த் சிங்’!

மேன் புக்கர் சர்வதேசப் பரிசுபெற்ற முதல் அரபி எழுத்தாளர்

ஓமன் நாட்டைச் சேர்ந்த ஜோகா அல்ஹார்தி எழுதிய ‘செலஸ்டியல் பாடீஸ்’ நாவலுக்கு 2019-க்கான மேன் புக்கர் சர்வதேசப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமன் நாட்டின் ஒரு கிராமத்தில் வளரும் மூன்று இளஞ்சிறுமிகளைப் பற்றிய நாவல் இது. அரபியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளிவரும் நாவல்களுக்கு மேன் புக்கர் பரிசும், மற்ற மொழிப் பிராந்தியங்களின் நாவல்களுக்கு மேன் புக்கர் சர்வதேசப் பரிசும் அளிக்கப்பட்டுவருகின்றன. இந்த ஆண்டுக்கான சர்வதேசப் பரிசை ஜோகா அல்ஹார்தியும் அவரது மொழிபெயர்ப்பாளர் மெரிலின் பூத் இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் முதல் ஓமன் பெண் எழுத்தாளரே அல்ஹார்திதான். தனது முதல் நாவலிலேயே மேன் புக்கர் சர்வதேச பரிசுபெற்ற முதல் அரபி எழுத்தாளர் என்று பெயரெடுத்துவிட்டார்.

டிஸ்கவரியின் மூன்று முன்னெடுப்புகள்

மூன்று நல்ல முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கிறது ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ பதிப்பகம். ‘நிலவெளி’ என்ற கலை இலக்கிய பண்பாட்டு இதழைக் கொண்டுவந்திருக்கிறது. முதல் இதழில், தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கத்தின் விரிவான நேர்காணலும் குமாரசெல்வாவின் வட்டாரமொழி குறித்த முக்கியமான கட்டுரையும் வெளியாகியுள்ளன. அடுத்து, பிரபஞ்சன் அறக்கட்டளையுடன் இணைந்து பிரபஞ்சன் நினைவாக ஒரு நாவல் போட்டியையும் அறிவித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று நாவல்களுக்கான பரிசுத்தொகை ரூ.30,000. பக்க அளவு 150-200 பக்கங்கள். இறுதித் தேதி ஆகஸ்ட் 31, 2019. பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்களின் முதல் பதிப்பை  வெளியிடவுள்ளதாகவும் அது அறிவி்த்திருக்கிறது. மூன்றாவதாக, ஆத்மாநாம் அறக்கட்டளையுடன் இணைந்து கோத்தகிரியில் ஜூன் 13 தொடங்கி நான்கு நாட்களுக்கு மொழிபெயர்ப்பு முகாம் ஒன்றையும் அது நடத்துகிறது. மொழிபெயர்ப்பின் தேவைகளையும் அதன் சவால்களையும் விவாதிப்பதோடு மொழிபெயர்ப்புக்கான பயிற்சியாகவும் இந்த முகாம் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தப் பதிப்பகம் தெரிவிக்கிறது.

கலைந்துபோன கவிதை

மறைந்த கவிஞர் கலை இலக்கியாவுக்கு மே 19 அன்று தேனியில் புகழஞ்சலிக் கூட்டத்தை நடத்திய தமுஎகச, அவரது படைப்புலகம் பற்றிய தொகுப்பு நூலொன்றையும் வெளியிட்டுள்ளது. கலை இலக்கியா என்ற பெயரில் எழுதிவந்த ச.இந்திரா, நுரையீரல் புற்றுநோயின் காரணமாக மே 6 அன்று தனது 39 வயதில் மறைந்தார். பள்ளிநாட்களில் தமிழாசிரியரான கவிஞர் வெண்மணியின் ஊக்குவிப்பால் கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர், ‘ஆயிரம் பேர் தாதியுண்டு’ என்ற தலைப்பில் தேனி மாவட்டத்தில் பாடப்படும் ஒப்பாரிப் பாடல்களைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். காமத்துப்பால் குறள்களை ‘காமக் கடலில் நீந்தி...’ எனும் பெயரில் கதைகளாக எழுதியுள்ளார். தமுஎகசவின் மாநிலக் குழு உறுப்பினராவும் பொறுப்புவகித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x