Published : 12 May 2019 09:59 AM
Last Updated : 12 May 2019 09:59 AM

தோப்பில் எனும் காலத்தின் குரல்!

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இஸ்லாமியர்களை உரிமையோடு ‘மாமா’ என்றும், பதிலுக்கு அவர்கள் ‘மாப்பிள்ளை’ என்றும் அழைக்கும் வழக்கம் உண்டு. தோப்பில் முஹம்மது மீரானைச் சந்திக்கும்போதெல்லாம் அப்படி நான் ‘மாமா’ என்றே அழைப்பேன். அதைக் கேட்கும்போது அவரது முகத்தில் சொல்ல முடியாத சந்தோஷம் வெளிப்படும். நெருக்கமாக அவருடன் பழகியிருக்கிறேன். மிக எளிமையான மனிதர். பண்பானவர். எந்த எழுத்தாளர் பற்றியும் ஒரு வம்புப் பேச்சும் அவரிடம் கிடையாது. இளைஞர்கள் யார் புதிதாக எழுதினாலும் அதை மனம் திறந்து பாராட்டிக் கொண்டாடக்கூடியவர்.

கேரளத்தில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கையைச் சிறப்பாக எழுத்தில் பதிவுசெய்தவர்களாக வைக்கம் முகம்மது பஷீரையும் புனத்தில் குஞ்ஞப்துல்லாவையும் குறிப்பிடுவார்கள். இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையை, மரபை, அன்பை, ஞானத்தை, சமூக மாற்றங்களுக்கு அவர்கள் செய்த பங்களிப்பைப் பதிவுசெய்த இவர்களின் எழுத்து தனித்துவமானது. அந்த வரிசையில், தமிழக இஸ்லாமியர்களின் வாழ்க்கையை, அதிலும் குறிப்பாகத் தென்குமரி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாக, வரலாற்றுபூர்வமாக, நேர்மையாக எழுத்தில் பதிவுசெய்தவர் தோப்பில் முஹம்மது மீரான்.

நெய்தல் மரபின் நவீனத் தொடர்ச்சி

தனது ‘சாய்வு நாற்காலி’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற தோப்பில் முஹம்மது மீரான் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினத்தில் 1944-ல் பிறந்தவர். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ என்ற நாவலின் வழியே இலக்கிய உலகுக்கு அறிமுகமாகி தனது புகழ்பெற்ற நாவல்களான ‘துறைமுகம்’, ‘கூனன் தோப்பு’, ‘சாய்வு நாற்காலி’, ‘அஞ்சுவண்ணம் தெரு’, ‘குடியேற்றம்’ ஆகியவற்றின் மூலமும், ‘அன்புக்கு முதுமை இல்லை’, ‘தங்கரசு’, ‘அனந்த சயனம் காலனி’, ‘ஒரு குட்டித் தீவின் வரைபடம்’ போன்ற சிறுகதைத் தொகுப்புகள் மூலமாகவும் தனித்துவமிக்கப் படைப்பாளியாக அறியப்பட்டார்.

மத அடிப்படைவாதம் பெருகிவரும் இன்றைய சூழலில் மீரானின் எழுத்து சமய சார்புகளைக் கடந்து மனிதர்கள் எவ்வாறு ஒற்றுமையுணர்வோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், சகமனிதர்கள் மீது அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அடையாளப்படுத்துவது. குமரி மாவட்ட கடற்புற கிராமத்தின் வாழ்க்கையைத் தோப்பில்போல அதன் முன்பாக ஒருவரும் இலக்கியத்தில் பதிவுசெய்யவில்லை. நெய்தல் மரபின் நவீனத் தொடர்ச்சியாகவே அவரது எழுத்துகள் இருந்தன. அவரது எழுத்துமுறை மண் வாசனையுடன் அரபியும் மலையாளமும் கலந்து உருவானது.

தோப்பில் தனது படைப்புகளில் மறக்க முடியாத கதாபாத்திரங்களை உருவாக்கிக் காட்டினார். அக்கதாபாத்திரங்கள் இன்றும் பண்பாட்டு அடையாளமாகக் கருதப்படுகின்றன. அவருடைய முஸ்தபா கண்ணு, மரியம் தாத்தா, இஸ்ராயில், வடக்கு வீட்டு அஹ்மதுகண்ணு, முதலாளி முஸ்தபாகண்ணு போன்ற கதாபாத்திரங்கள் தமிழ்ப் படைப்புலகில் மறக்க முடியாத பாத்திரங்களில் நிலைத்திருக்கும்.

கல்லூரியில் பி.ஏ. மலையாள இலக்கியம் படித்தவர் தோப்பில். அதனால், மலையாளத்தின் முக்கிய எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் ஆழ்ந்து வாசித்திருக்கிறார். குறிப்பாக, பஷீரின் கதைகளை வாசித்து மயங்கி தானும் அதுபோல எழுத வேண்டும் என்ற ஆசை அவருக்குள் உருவானது.

தோப்பிலின் ‘அஞ்சுவண்ணம் தெரு’ எனக்கு மிகவும் பிடித்தமான நாவல். ஒருகாலத்தில் கேரள மன்னர் ஐந்து முஸ்லீம் நெசவாளர்களை அந்தத் தெருவில் குடிவைக்கிறார்கள். அவர்களால் உருவானதுதான் அஞ்சுவண்ணம் தெரு. ஒரு தெருவில் வாழும் மாறுபட்ட மனிதர்களின் வாழ்க்கையை அதன் வரலாற்றுடன், தொன்மத்துடன் அழியா நினைவுகளுடன் மிகச் சிறப்பாகப் பதிவுசெய்திருப்பார்.

கரிசல் இலக்கியத்தின் பிதாமகராகக் கொண்டாடப்படும் கி.ராஜநாராயணன் கரிசல் நிலத்தை எப்படித் தன் படைப்புகளுக்கு ஆதாரமாகக் கொண்டாரோ அதுபோலவே தோப்பில் கடற்கரை வாழ்க்கையைத் தனது படைப்புகளின் ஆதாரமாகக் கொண்டிருக்கிறார்.

மீரானின் கதைகள் நேரடியாக வாழ்க்கையை விவரிப்பவை. கதையின் வடிவம் பற்றியோ, கவித்துவ உரையாடல்கள் பற்றியோ அவர் கவலைப்படுகிறவர் இல்லை. அவரது நாவலில் வரும் பெரும்பான்மையான நிகழ்வுகள் உண்மையானவை. மறைக்கப்பட்ட, விலக்கப்பட்ட சரித்திரத்தை அவர் மீள் உருவாக்கம் செய்கிறார். அதன் வழியே உண்மையைக் கண்டறியவும் வெளிப்படுத்தவும் முயல்கிறார். தோப்பில் தன்னைக் காலத்தின் பிரதிநிதியாகக் கருதிக்கொண்டு எழுதுகிறவர். ஆகவே, அவரிடம் பக்கச் சார்புகள் எதுவும் கிடையாது.

நம் காலத்தின் கண்ணாடி

வாழ்ந்து கெட்டவர்களையும், வறுமையோடு போராடுகிறவர்களையும், மூடநம்பிக்கைகள் பீடித்தவர்களையும், வீட்டிற்குள்ளாக ஒடுக்கி வைக்கப்பட்ட பெண்களின் துயரையும், வேதனையையும் மிக அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் தோப்பில்.

மதம் அரசியலாக்கப்படுவதையும், தூய்மைவாதம் பேசிக்கொண்டு மத வெறியை உருவாக்குகிறவர்களையும், மரபான எளிய வாழ்க்கையை, ஞானத்தைத் தொடர விரும்பும் இஸ்லாமியர்களையும் ஒரு சேர நம் முன்னே அறிமுகப்படுத்துகிறார். அத்தோடு இப்படித்தானிருக்கிறது இன்றைய இஸ்லாமிய வாழ்க்கை என்று ஒதுங்கிக்கொள்கிறார் தோப்பில். அவ்வகையில், அவர் நம் காலத்தின் கண்ணாடி. வாழ்க்கையை அதன் இயல்போடு, அழகோடு ஆவணப்படுத்தியவர், தன் ஊரின் அழியா நினைவுகளைக் கலையாக்கியவர் என்ற முறையில் தோப்பில் முஹம்மது மீரானின் எழுத்துகள் என்றும் அதற்கான தனியிடத்தைக் கொண்டிருக்கும்.

எஸ்.ராமகிருஷ்ணன்,

‘சஞ்சாரம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x