Published : 05 May 2019 08:09 AM
Last Updated : 05 May 2019 08:09 AM

மார்க்ஸியம்: ஒரு தமிழிய அறிமுகம்

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் (இருபது தொகுதிகள்)

பதிப்பாசிரியர்: ந.முத்துமோகன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 98.

மொத்த விலை: ரூ.5,000 தொடர்புக்கு: 044 26251968

பொருள்முதல்வாதத்துக்கும் சமதர்மக் கொள்கைக்கும் விஞ்ஞானபூர்வமான விளக்கம் கொடுத்தவர்கள் மார்க்ஸும் எங்கெல்ஸும். ஆனால், அவர்களின் எழுத்துகளை விளக்கக் குறிப்புகள் இல்லாமல் ஆரம்பநிலை வாசகர்களால் உட்செரிக்க இயலாது. அதனால்தான், இன்றும் மார்க்ஸியத்துக்கு ஏகப்பட்ட அறிமுக நூல்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. மார்க்ஸிய மூலவர்களின் நூல்களை வாசிப்பது அதற்கு அடுத்தக் கட்டம்.

மாஸ்கோவிலிருந்து முன்னேற்றப் பதிப்பகம் 1989-ல் மார்க்ஸ், எங்கெல்ஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளை 12 தொகுதிகளாக வெளியிட்டது. அத்தொகுதிகளை விரிவுபடுத்தியும் பொருள்வாரியாக மறுவரிசைப்படுத்தியும் இருபது தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம். புதிய சேர்க்கையாக மார்க்ஸ், எங்கெல்ஸ் வாழ்க்கை வரலாறுகளையும் உள்ளடக்கியது இந்நூல் வரிசை. இந்நூல் வரிசைக்குப் பதிப்பாசிரியர் ந.முத்துமோகன் எழுதியுள்ள பதினைந்து அறிமுக உரைகள், வாசகர்களுக்கு ஒவ்வொரு தொகுதியின் உட்பொருளையும் எளிமையான மொழியில் விளக்கும் அரும் முயற்சி. மார்க்ஸியத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் அவரது கருத்துகளை இன்றைய சூழலுக்குப் பொருத்திக்காட்டியுமிருக்கிறார் அவர். மிக முக்கியமாக, இந்தியச் சூழலின் பின்னணியில் இந்திய தத்துவப் பார்வையுடன் மார்க்ஸியத்தை அணுகியிருக்கிறார்.

மார்க்ஸ் உருவாகிறார்...

நூல் வரிசையின் முதல் புத்தகம் கம்யூனிஸ்ட் அறிக்கையை மையமாகக் கொண்டது. கம்யூனிஸ்ட் அறிக்கையிலிருந்துதான் தனது முதல் அடியை எடுத்துவைத்தது மார்க்ஸியம். ஆனால், அதற்கான அறிவுத் தேடலை அதற்கும் பத்தாண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டார் கார்ல் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் அறிக்கையையும் அதை நோக்கி மார்க்ஸும் அவருடைய நண்பர் பிரடெரிக் எங்கெல்ஸும் வந்துசேர்ந்த ஆய்வுப் பயணத்தையும் ஒருசேர வாசிப்பது அறிவுத் துறைக்குள் அடியெடுத்துவைக்கும் இளம் வாசகர்களுக்கு மனவூக்கம் அளிக்கக்கூடியது. தத்துவ உலகின் சிகரத்தை எட்டிய ஹெகலுக்குப் பிறகு, அது எந்தத் திசைவழியில் தொடர்ந்து பயணிக்கும் என்று ஐரோப்பிய அறிவுலகம் பிரமித்து நின்றபோது ஃபாயர்பாக்கின் வாசகராகத் தத்துவ உலகில் நுழைந்து பொருள்முதல்வாதத்துக்குப் புதிய பார்வையைக் கொடுத்தார் மார்க்ஸ். வறட்டுப் பொருள்முதல்வாதத்திலிருந்து விடுபட்டு, உணர்ச்சிவயப்பட்ட பொருள்முதல்வாதத்தின் நியாயத்தை மட்டும் கைகொண்டு அதன் இயங்கியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

ஐரோப்பிய தத்துவப் பின்னணியில் இக்கருத்தாக்கம் உருவாகி வளர்ந்த சூழலை விளக்கும் ந.முத்துமோகன், அதனுடன் இந்தியாவின் சார்வாகத்தையும் தமிழகத்தின் சித்தர் மரபையும் ஒப்பிடுகிறார். தமிழர்களின் நிலையாமைக் கோட்பாட்டையும் நினைவுகூர்கிறார். மார்க்ஸின் அந்நியமாதல் வகைமைகளைப் பேசும்போது இந்தியச் சூழலில் சாதி வகிக்கும் பங்கையும் கவனப்படுத்துகிறார். மார்க்ஸை அறிமுகப்படுத்துவதோடு இந்திய மண்ணில் அதன் கூடுதல் தேவைகளையும் உணர்த்திச்செல்லும் முயற்சி இது.

மார்க்ஸோடு இணைப்பயணம்

எங்கெல்ஸின் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூலைப் பழந்தமிழர் வரலாற்றோடு பொருத்திப்பார்க்கிறார் ந.முத்துமோகன். (தொகுதி 12) பழஞ்சமூகத்தின் வளர்ச்சிநிலைகள் ஒன்றுக்குப் பிறகு மற்றொன்றாக அல்லாமல் அருகருகே நிலவும் காட்சியை எங்கெல்ஸிடமிருந்து எடுத்துக்காட்டும் அவர், தமிழின் நால்வகை நிலங்களை அருகருகே அடுக்கும் வைப்பு முறையையும் நினைவுபடுத்துகிறார். ஆ.சிவசுப்பிரமணியின் ஆய்வுகளின் துணைகொண்டு அதை விளக்கும் ந.முத்துமோகன், பண்டைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து தமிழ்ச் சமூக வரலாற்றை மீட்டுருவாக்கும் தமிழறிஞர்களுக்கு எங்கெல்ஸின் அந்நூலைப் பரிந்துரைக்கவும் செய்திருக்கிறார். மேலும், அந்நூலிலிருந்து ஒரு மார்க்ஸியப் பெண்ணியத்தை உருவாக்க முடியும் என்றும் ஆலோசனை தருகிறார். மார்க்ஸிய மூல நூல்களை அறிமுகப்படுத்துவதோடு அவற்றிலிருந்து பயன்கொள்வது எப்படியென்றும் சொல்லிக்கொடுக்கிறது ந.முத்துமோகனின் அறிமுக உரைகள்.

எங்கெல்ஸின் ‘இயற்கையின் இயக்க இயல்’, அரசியல் பொருளாதாரத்துக்கு வெளியே அறிவியல் துறையினரும் படிக்க வேண்டிய நூல். (தொகுதி 13) ஆற்றல் அழிவின்மை விதி, பரிணாமக் கோட்பாடு, மரபணுவியலின் தோற்றம் ஆகியவற்றின் தத்துவ நோக்கிலான முக்கியத்துவத்தைப் பேசும் நூல் இது. இந்நூலுக்கு ரஷ்யாவில் வெளியான ஆங்கில மொழிபெயர்ப்பின் அறிமுகவுரையே இடம்பெற்றுள்ளது. அறிமுகவுரைகளுக்கான முன்னுதாரணமாக விளங்கும் அதை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு எழுதியுள்ளது. அதன் வரைவுக் குழுவில் யாரெல்லாம் இடம்பெற்றிருந்தார்கள் என்று எந்தக் குறிப்பும் இல்லை.

1989-ல் வெளியான மார்க்ஸ், எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் வரிசையிலும் மொழிபெயர்ப்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றிருக்கவில்லை. அதற்கு முன்பு தனித்தனியாக வெளிவந்த நூல்களில் மட்டுமே மொழிபெயர்த்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அந்நூல்களை ஒப்பிட்டு, இப்பணியில் பங்கெடுத்துக்கொண்ட வி.ராதாகிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்.எச்.நாதன், ரா.கிருஷ்ணையா, தொ.மு.சி.ரகுநாதன், நா.தர்மராஜன், ஆர்.கே.கண்ணன், நெல்லை எஸ்.வேலாயுதம், கே.ராமநாதன், வ.சண்முகசுந்தரம், கே.முத்தையா, ஏ.சீனிவாசன், நிழல்வண்ணன், பாரதி ஆகியோரை நினைவுகூர்ந்திருப்பது சிறப்பு. சமீபத்தில் வெளியான எஸ்.வி.ராஜதுரையின் நூல்களிலிருந்து அவர் மொழிபெயர்த்த கம்யூனிஸ்ட் அறிக்கையும் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் முதல் அறிக்கையும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், இந்தத் தொகுப்பு இற்றைப்படுத்தப்பட்ட பதிப்பும்கூட.

சிறு சிறு மாத்திரைகளாக மார்க்ஸிய சாரம்

‘வறுமையின் தத்துவம்’ நூலாசிரியரும் அரசெதிர்வாதியுமான புரூதோன், ‘பண்டைச் சமூகம்’ நூலாசிரியரும் மானுடவியலாளருமான லூயி மார்கன், தொழிற்சங்க முன்னோடி ராபர்ட் ஓவன் ஆகியோரைப் பற்றியும் அவர்களின் கருத்துகளில் மார்க்ஸ் எங்கெங்கு உடன்படுகிறார், ஏன் மாறுபடுகிறார், அதற்கான காரணங்கள் என்னென்ன என்றும் இந்த அறிமுகங்கள் விளக்குகின்றன. தனக்கு முந்தைய சிந்தனையாளர்களின் கருத்துகளுக்கு எழுதப்பட்ட மறுப்புகளிலிருந்தே மார்க்ஸியம் முகிழ்த்தது என்பதால் அந்தச் சிந்தனையாளர்களைப் பற்றிய அறிமுகங்களும் அவசியமானவை.

போதிய அறிமுகங்கள் இல்லாமல் தத்துவம், பொருளியல் ஆகிய துறைகளுக்குள் அடியெடுத்துவைக்கும் அறிமுக வாசகர்கள் முதல் பக்கத்திலேயே விரட்டியடிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அநேகம். மார்க்ஸின் இலக்கிய நடை வசீகரமிக்கது என்றாலும் எழுத்துகளின் அடர்த்தி அதிகம். இந்திய, ஐரோப்பிய தத்துவத் துறையில் தோய்ந்தவரான ந.முத்துமோகன் மார்க்ஸியக் கருத்தியலின் சாரத்தைச் சிறு சிறு மாத்திரைகளாக்கித் தனது அறிமுக உரைகளில் தந்திருக்கிறார். அவரது கைபிடித்து மார்க்ஸைப் படிப்பது இன்னும் நெருக்கமான அனுபவமாக இருக்கும். ‘மார்க்ஸியம் பயிலுவோம்’ என்ற தலைப்பில் ந.முத்துமோகன் எழுதிய தொடர் கட்டுரைகள் தொகுப்பானதுபோலவே இந்த அறிமுக உரைகளும் தனி நூலாகத் தொகுக்கப்பட வேண்டியவை.

மே 5: காரல் மார்க்ஸ் பிறந்த தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x